பழைய வருமான வரி முறை Vs புதிய வருமான வரி முறை: எதைத் தேர்ந்தெடுப்பது?

Which tax regime to choose?
Old vs new tax regime
Published on

வருமானவரி தாக்கல் செய்யப் போகிறீர்களா ? எந்த வருமான வரி முறையைத் தேர்ந்தெடுப்பது என்பதனை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வருமானவரி தாக்கல்களில் இரண்டு விதமான முறைகள் உள்ளன.

1. பழைய வருமான வரி முறை

2. புதிய வருமான வரி முறை

வரலாற்றில் காலங்காலமாக, வருமானத்திற்கு ஏற்றவாறு ஒரே விதமான வருமான வரி முறைகள் இருந்து வந்துள்ளன. 2020 ஆம் ஆண்டு முதல் புதிய வருமான வரி முறை சேர்க்கப்பட்டது. ஏற்கனவே, இருந்த வருமான வரி முறை, பழைய வருமான வரி முறை என்றழைக்கப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி முறை, புதிய வருமான வரி முறை என்றழைக்கப்பட்டது.

புதிய வருமான வரி முறை மற்றும் பழைய வருமான வரி முறை இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன ?

பழைய வருமான வரி முறையில் வருமானத்தின் பல்வேறு வரம்புகளுக்கு, அதிக வருமான வரி விதிக்கப்படும். ஆனால், 80C, 80D, 80E போன்ற பிரிவுகள், வீட்டு வாடகை (House Rent allowance) என பல வருமான வரி விலக்குகள் உண்டு. சற்று கடினமான வரி முறை. குறைந்த வருமானத்திலேயே வரி தொடங்கிவிடும்.

கடந்த நிதி ஆண்டிற்கான(2024-25) வருமான வரி வரம்புகள்

60 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு

ரூபாய் 2,50,000 வரை - வரி கிடையாது

ரூபாய் 2,50,001 முதல் ரூபாய் 5,00,000 - 5% வரி

ரூபாய் 5,00,001 முதல் ரூபாய் 10,00,000 வரை - 20% வரி

ரூபாய் 10,00,001 க்கு மேல் - 30% வரி

60 வயது முதல் 80 வயதுக்குட்ட நபர்களுக்கு

ரூபாய் 3,00,000 வரை - வரி கிடையாது

ரூபாய் 3,00,001 முதல் ரூபாய் 5,00,000 - 5% வரி

ரூபாய் 5,00,001 முதல் ரூபாய் 10,00,000 வரை - 20% வரி

ரூபாய் 10,00,001 க்கு மேல் - 30% வரி

இதையும் படியுங்கள்:
தங்கத்தை விற்கும் போது வரி கட்டணுமா?
Which tax regime to choose?

80 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு

ரூபாய் 5,00,000 வரை - வரி கிடையாது

ரூபாய் 5,00,001 முதல் ரூபாய் 10,00,000 வரை - 20% வரி

ரூபாய் 10,00,001 க்கு மேல் - 30% வரி

புதிய வருமான வரி முறையில் வருமானத்தின் பல்வேறு வரம்புகளுக்கு, குறைவான வருமான வரி விதிக்கப்படும். ஆனால், 80C, 80D, 80E போன்ற பிரிவுகள், வீட்டு வாடகை என பல வருமான வரி விலக்குகள் கிடையாது. மிகவும் குறைவான வருமான வரி விலக்குகளே உண்டு. எளிமைப்படுத்தப்பட்ட முறை.

ரூபாய் 3,00,000 வரை - வரி கிடையாது

ரூபாய் 3,00,001 முதல் ரூபாய் 7,00,000 - 5% வரி

ரூபாய் 7,00,001 முதல் ரூபாய் 10,00,000 வரை - 10% வரி

ரூபாய் 10,00,001 முதல் ரூபாய் 12,00,000 வரை - 15% வரி

ரூபாய் 12,00,001 முதல் ரூபாய் 15,00,000 வரை - 20% வரி

ரூபாய் 15,00,001 க்கு மேல் - 30% வரி

இதையும் படியுங்கள்:
புது வகை மோசடி உஷார்..! வருமான வரிதுறையினர் போல் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள்..!
Which tax regime to choose?

புதிய வருமான வரி முறைக்கும் பழைய வருமானவரி முறைக்கும் வருமான வரிவிலக்குகளில் என்ன வித்தியாசங்கள் உள்ளன ?

புதிய வருமான வரி முறையில் இயல்தர வரி விலக்கு (Standard deduction), தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme), வாடகைக்கு விட்ட வீட்டின் கடன் தவணை வட்டியில் வரி விலக்கு, அக்னிவீர் வைப்பு நிதி, குடும்ப ஓய்வூதியம், 80CCD(2) போன்ற குறைவான வரி விலக்குகளே உள்ளன.

பழைய வருமான வரி முறையில் 70 க்கும் மேற்பட்ட வருமான வரி விலக்குகள் உள்ளன. 80C, 80D, 80E, 80TTA/80TTB, 80CCD(1B), வீட்டு வாடகை, சொந்த வீட்டின் கடனில் வரி விலக்கு, பயணத்தின் தொகையில் வரிவிலக்கு (Leave Travel Allowance) என 70 க்கும் மேற்பட்ட வரி விலக்குகள் உள்ளன.

எந்த வருமான வரி முறையைத் தேர்ந்தெடுப்பது ?

கிபி 2020ல் புதிய வருமான வரி முறை அறிமுகப்படுத்தபோது அது பலரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் புதிய வருமான வரி முறையை மக்களுக்கு கவர்ச்சிகரமானதாக ஆக்குவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிபி 2023 -24 முதல் புதிய வருமான வரி முறை இயல்பு நிலையாக (Default) வரையறுக்கப்பட்டுள்ளது. நடக்கும் நிதியாண்டில் (2025-26) புதிய வருமான வரி முறையில் ரூபாய். 12.75 இலட்சம் வரை வருமான வரி கிடையாது என்று இந்த வருட (2025) பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், புதிய வருமான வரி முறையா அல்லது பழைய வருமான வரி முறையா என்பது நபருக்கு நபர் மாறுபடும். ஒருவருடைய வருமானம் மற்றும் அவர் கோரும் வருமான வரி விலக்குகளுக்கு ஏற்றவாறு எந்த வருமான வரி குறைந்த வருமான வரியை அளிக்குமோ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு பின்வரும் முறையை பின்பற்ற வேண்டும்.

1. பழைய வருமான வரி முறையில், உங்களுக்கு ஒத்துவரும் எல்லா வருமான வரி விலக்குகளையும் (80C, 80D, 80E, வீட்டு வாடகை போன்றவை) கழித்துக் கொண்டு, உங்களது நிகர வருமானத்தினைக் கணக்கிட வேண்டும்.

2. இதனைப் போலவே, புதிய வருமான வரியில் உங்களுக்கு ஒத்துவரும் எல்லா வருமான வரி விலக்குகளையும் (பொதுவான வரி விலக்கு போன்றவை) கழித்துக் கொண்டு, உங்களது நிகர வருமானத்தினைக் கணக்கிட வேண்டும்.

3. இப்போது, எந்த வருமான வரி முறையில் குறைவான வரி என்று பார்க்க வேண்டும். அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வரிச் சுமை முதல் பார்க்கிங் பிரச்சனை வரை: சொதப்பல் அரசுகளும் சோம்பி நிற்கும் மக்களும்!
Which tax regime to choose?

இது கடினமாகத் தோன்றுகிறதா? இதற்கு இணையத்தில் பல்வேறு கணிப்பான்கள் (calculator) உள்ளன. வருமான வரி இணையதளத்திலேயே இதற்கென பிரத்யேக கணிப்பான் உள்ளது. https://incometaxindia.gov.in/Pages/tools/old-regime-vis-a-vis-new-regime.aspx

நீங்கள் சீக்கிரமாக வருமான வரி தாக்கல் செய்ய வாழ்த்துகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com