அஞ்சலக மாத வருமானத் திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் மாதம் எவ்வளவு கிடைக்கும்? யாரெல்லாம் சேரலாம்?

பாதுகாப்பான முதலீடு & நிலையான மாதாந்திர வருமானம்: போஸ்ட் ஆபீஸ் POMIS திட்டத்தின் முழு விவரங்கள்!
மாத வருமானத் திட்டம்
Monthly Income - மாத வருமானத் திட்டம்
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

வருங்காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் முதுமையை கழிக்க இன்றைய சேமிப்பே அடித்தளமாகும். அவசர காலங்களில் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும், நிதி நிர்வாகத்தில் சிறந்து விளங்கவும் சேமிப்பு அவசியமாகும். மாதந்தோறும் வருமானத்தில் ஒரு சிறிய தொகையை சேமிப்பது, நம்முடைய எதிர்காலத்திற்கு உபயோகமாக இருக்கும்.

தற்போது ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் சந்தையில் கிடைக்கின்றன. இருப்பினும் எப்போதும் பாதுகாப்பான முதலீட்டை நாடுபவர்களுக்கு அஞ்சல் சேமிப்புத் திட்டங்கள்தான் சிறந்தது. ரெக்கரிங் டெபாசிட் முதல் டைம் டெபாசிட் வரை பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் அஞ்சல் அலுவலகத்தில் நடைமுறையில் உள்ளன.

மாதந்தோறும் ஒரு சிறு தொகையை சேமிப்பது போலவே, மொத்தாமாக பணம் வைத்திருக்கும் போதும் அதனை முதலீடு செய்தால் மாதந்தோறும் வருமானம் கிடைக்கும். ஒரு பெரிய முதலீட்டின் மூலம் மாதாந்திர வருமானம் வேண்டும் என்பவர்களுக்கு அஞ்சல் துறையின் மாத வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme - POMIS) கச்சிதமாக பொருந்தும்.

ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் எவ்வளவு கிடைக்கும்?

வட்டி விகிதம்: அஞ்சல் துறையின் மாதாந்திர வருமானத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.4% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

மாத வருமானம்: நீங்கள் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால், இதற்கான மாதாந்திர வட்டித் தொகையாக ரூ.3,083 உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். ஒரு வருடத்திற்கு ரூ.37,000 கிடைக்கும். 5 வருட முடிவில் வட்டி மட்டும் ரூ.1,85,000 கிடைக்கும். மாதந்தோறும் கிடைக்கும் வருமானத்தை நீங்கள் அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இல்லையெனில் முதிர்வு காலம் முடிந்த பிறகு அசல் தொகையுடன் வட்டித் தொகையை எடுத்துக் கொள்ளலாம்.

முதிர்வு காலம்: மாதாந்திர வருமானத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் முதலீடு செய்த முழுத்தொகையும் உங்களுக்கு திரும்பக் கிடைத்துவிடும்.

இத்திட்டத்தில் யாரெல்லாம் சேரலாம்?

குடியுரிமை: இந்தியக் குடிமக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் கணக்கைத் தொடங்கலாம்.

வயது வரம்பு: 18 வயது நிரம்பியவர்கள் கணக்கைத் தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் கணக்கைத் தொடங்கலாம்.

கூட்டுக் கணக்கு: மாதாந்திர வருமானத் திட்டத்தில் அதிகபட்சமாக 3 நபர்கள் வரை ஒன்றிணைந்து கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம். இதில் முதலீடு செய்யும் அனைவருக்கும் சமமான பங்குண்டு.

Post Office Saving Schemes
மாத வருமானத் திட்டம் - Post Office Saving Schemes
இதையும் படியுங்கள்:
நடுத்தர மக்களுக்கு ஏற்ற அஞ்சல் அலுவலகத்தின் தொடர் வைப்புத் தொகை திட்டம்..!
மாத வருமானத் திட்டம்

முக்கிய அம்சங்கள்:

முதலீட்டு வரம்பு: தனிநபர் கணக்கைப் பொறுத்த வரை குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய முடியும்.

பாதுகாப்பு: மத்திய அரசுக்கு சொந்தமான அஞ்சல் அலுவலகத்தின் சிறு சேமிப்புத் திட்டம் இது என்பதால், உங்கள் முதலீட்டுக்கு முழுப் பாதுகாப்பு உண்டு.

முன்கூட்டியே மூடுதல்: மாதாந்திர வருமானத் திட்டத்தில் கணக்கைத் தொடங்கிய தினம் முதல் ஓராண்டு காலம் வரை பணத்தை எடுக்கவோ அல்லது கணக்கை முடிக்கவோ முடியாது. 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் உங்கள் கணக்கை மூடினால், முதலீட்டுத் தொகையில் 2% பிடித்தம் செய்யப்படும். 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் கணக்கை மூடினால் 1% பிடித்துக்கொள்ளப்பட்டு மீதி பணம் வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
அஞ்சல் துறை vs வங்கி முதலீடு: எதில் லாபம் அதிகம்? முழுமையான வழிகாட்டி!
மாத வருமானத் திட்டம்
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.