அஞ்சல் துறை vs வங்கி முதலீடு: எதில் லாபம் அதிகம்? முழுமையான வழிகாட்டி!

உங்களின் சேமிப்புப் பணத்தை எந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.
அஞ்சல் துறை முதலீடு - bank vs post office investment
அஞ்சல் துறை முதலீடு - bank vs post office investment
Updated on

‘நாளைய தேவைக்கு இன்றே முதலீடு’ செய்வது தான் புத்திசாலித்தனம். முன்பைக் காட்டிலும் தற்போது முதலீட்டின் மீதான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இருப்பினும் எப்படி, எதில், எந்த நேரத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பது போன்ற பல கேள்விகள் தான் மக்களின் முதலீட்டு எண்ணத்தை தள்ளிப் போடுகிறது. இதற்கு மட்டும் விடை தெரிந்து விட்டால், முதலீட்டு எண்ணமே இல்லாதவர்கள் கூட சரியான முதலீட்டைத் தேர்ந்தெடுக்க முடியும்.

தற்போதைய காலகட்டத்தில் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற முதலீடு என இரண்டு விதமான முதலீடுகள் உள்ளன. இதில் பெரு முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பற்ற மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை மற்றும் எஸ்ஐபி உள்ளிட்ட அஞ்சல் துறை முதலீடுகளில் கவனம் செலுத்துகின்றனர். இவ்வகையான முதலீடுகளில் ரிஸ்க் அதிகம் என்பதால், லாபமும் அதிகம்.

ஆனால் அஞ்சல் துறை மற்றும் வங்கி சேமிப்பு போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் ரிஸ்க் குறைவு என்பதால் லாபமும் குறைவாகவே இருக்கும். இருப்பினும் சாமானிய மக்களுக்கு ஏற்ற முதலீடாக இன்று வரையிலும் வெற்றிகரமாக வலம் வருவது அஞ்சல் துறை மற்றும் வங்கி முதலீடுகள்தான்.

இவையிரண்டு முதலீடுகளிலும் மிக முக்கிய மாற்றமாக இருப்பது வட்டி விகித மாற்றம் தான். அந்த வகையில் அஞ்சல் துறை மற்றும் வங்கி முதலீடுகளில் எப்படி முதலீடு செய்தால், எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்கள்: ரூ.100 முதலீட்டில் லட்சங்களில் லாபம் பெற சூப்பர் வழி!
அஞ்சல் துறை முதலீடு - bank vs post office investment

1. போஸ்ட் ஆபிஸ் vs வங்கி: FD, RD திட்டங்களுக்கு எதில் அதிக வட்டி? முழு ஒப்பீடு:

நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் துறை அலுவலகங்களிலும் சேமிப்புத் திட்டங்களுக்கு ஒரே மாதிரியான வட்டி விகிதம் தான் வழங்கப்படுகிறது. ஆனால் வங்கிகளைப் பொறுத்தவரை ஒவ்வெரு வங்கிக்கும் வட்டி விகிதம் வேறுபடும்.

அஞ்சல் அலுவலகத்தில் ரெக்கரிங் டெபாசிட் (RD) முறையில் மாதந்தோறும் ரூ.1,000 செலுத்தி வந்தால், 5 ஆண்டுகள் முடிவில் 6.70% வட்டியுடன் ரூ.72,000 முதிர்வுத் தொகையாக கிடைக்கும். இதில் நீங்கள் முதலீடு செய்த தொகை மொத்தம் ரூ.60,000 மட்டுமே. மீதமுள்ள ரூ.12,000 உங்கள் முதலீட்டுக்கு கிடைத்த லாபம்.

2. ரூ.1 லட்சத்தை எதில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் வரும்?

மொத்தமாக பணம் இருக்கும் போது, அதனை அதிக லாபம் தரும் திட்டத்தில் முதலீடு செய்யவே பலரும் விரும்புவர். ரிஸ்க் எடுக்கத் துணிபவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் போகலாம். ஆனால், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் அஞ்சல் துறையில் உள்ள டைம் டெபாசிட் மற்றும் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) மற்றும் PPF ஆகிய திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

அஞ்சல் துறை முதலீடு - bank vs post office investment
அஞ்சல் துறை முதலீடு - bank vs post office investment

ரூ.1 லட்சத்தை டைம் டெபாசிட் முறையில் முதலீடு செய்தால், 5 ஆண்கள் முடிவில் ரூ.1,45,329 கிடைக்கும். மாதந்தோறும் வருவாய் வேண்டும் என நினைப்பவர்கள் மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

ரூ.1 லட்சத்தை இத்திட்டத்தில் முதலீடு செய்தால் 7.4% வட்டியில் மாதந்தோறும் ரூ.617 வட்டியாக கிடைக்கும். 5 வருட முடிவில், அசல் தொகை தவிர்த்து மொத்தமாக உங்களுக்கு கிடைக்கும் லாபம் மட்டும் ரூ.37,020.

உங்களால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்ய முடியுமானால், PPF திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 7.1% வட்டியுடன் அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.27.13 லட்சம் கிடைக்கும்.

அஞ்சல் அலுவலகத் திட்டம் வேண்டாம் என்றால், ரூ.1 லட்சத்தை வங்கியிலும் முதலீடு செய்யலாம். வங்கிகளில் பிக்சட் டெபாசிட் தவிர்த்து பல்வேறு சிறப்புத் திட்டங்களும் உள்ளன.

3. பணத்தை இரட்டிப்பாக்க எத்தனை ஆண்டுகள் தேவைப்படும்?

உங்கள் பணத்தை முதலீடு செய்து இரட்டிப்பாக்க வேண்டுமெனில், உங்களின் முதல் தேர்வு அஞ்சல் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்திர (KVP) திட்டமாகத் தான் இருக்க வேண்டும். உங்கள் முதலீட்டை இந்தத் திட்டம் பத்தே ஆண்டுகளில் இரட்டிப்பாக்கி விடும். ரூ.5 லட்சத்தை கிசான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்தால், 7.5% வட்டியுடன் 115 மாதங்களில் ரூ.10 லட்சமாக மாறி விடும். பாதுகாப்பான மற்றும் ரிஸ்க் இல்லாத திட்டமாக இருப்பதால், இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பிக்சட் டெபாசிட் திட்டத்தின் மூலமும் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க முடியும். இதற்கு மறுமுதலீடு செய்வதில் உங்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும். ரூ.5 லட்சத்தை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.7,26,647 கிடைக்கும். இந்தத் தொகையை அப்படியே மீண்டும் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,55,300 ஆக உயரும். 10 ஆண்டுகள் முடிவில் உங்களின் முதலீட்டுப் பணம் இரட்டிப்பாகிவிடும்.

இதையும் படியுங்கள்:
தபால் நிலைய பிக்ஸட் டெபாசிட்: அதிக வட்டி மற்றும் முழு பாதுகாப்பு வழங்கும் சிறந்த முதலீடு!
அஞ்சல் துறை முதலீடு - bank vs post office investment

உங்களிடம் மொத்தமாக பணம் இல்லையென்றாலும் உங்களின் சிறு முதலீட்டை இரட்டிப்பாக்க ரெக்கரிங் டெபாசிட் திட்டம் உதவும். மாதந்தோறும் ரூ.5,000 ரெக்கரிங் டெபாசிட்டில் முதலீடு செய்தால், 5 ஆண்டு களில் ரூ.3,56,830 கிடைக்கும்.

இந்தத் தொகையை தற்போது பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பின் ரூ.5,17,210 ஆக திரும்பக் கிடைக்கும். இந்தப் பணத்தை மீண்டும் மீண்டும் முதலீடு செய்தால், உங்கள் முதலீடு மேலும் அதிகரித்து, சேமிப்பின் பலனை உங்களுக்கு கொடுக்கும்.

உங்கள் கையிலுள்ள சேமிப்புத் தொகையை எந்தெந்த திட்டங்களில் பிரித்து முதலீடு செய்வது என்ற தெளிவு ஏற்பட்டு, அதிக லாபம் ஈட்டும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

அஞ்சல் அலுவலகங்களில் டைம் டெபாசிட் திட்டத்திற்கு நல்ல வட்டி வழங்கப்படுகிறது. 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் என டைம் டெபாசிட் திட்டம் கிடைக்கிறது. இதற்கான வட்டி விகிதம் ஆண்டுகளைப் பொறுத்து 6.9% முதல் 7.5% வரை வழங்கப்படும். ரூ.2 லட்சத்தை டைம் டெபாசிட் முறையில் முதலீடு செய்தால், 5 ஆண்கள் முடிவில் ரூ.2,90,658 கிடைக்கும்.

வங்கிகளில் ரெக்கரிங் டெபாசிட் முறையில் மாதந்தோறும் ரூ.1,000 செலுத்தி வந்தால், 5 ஆண்டுகள் முடிவில் 6.50% வட்டியுடன் ரூ.70,995 கிடைக்கும்.

பிக்சட் டெபாசிட் திட்டத்தைப் பொறுத்தவரை 5 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், 6.50% வட்டியுடன் ரூ.2,76,132 முதிர்வுத் தொகையாக கிடைக்கும்.

வங்கிகளுக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடும் என்பதால், முதலீட்டுக்கு முன்பாக எந்த வங்கியில் வட்டி அதிகம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கு வட்டி அதிகம் என்பதால், வயதானவர்கள் வங்கிகளில் முதலீடு செய்வது நல்ல தேர்வாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com