

உங்களுக்கு நல்ல வேலை இருக்கிறது. மாதா மாதம் வருமானம் உண்டு. ஆனால், சம்பள தினத்தன்று கணக்கைப் பார்த்தால் எல்லா பணமும் எங்கு சென்றதென்று தெரியாது. ‘பணவசதி’ எனப்படும் அந்த ஐந்தெழுத்து மந்திரச் சொல், அடைய முடியாத தூரத்திலேயே உள்ளது. இதெற்கெல்லாம் காரணம் கணக்குப் பார்க்காமல் நீங்கள் செய்துகொண்டிருக்கும் செலவுகள்தான். அவை என்னென்ன என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
1. பண வீக்கம் உங்கள் எதிர்பார்ப்பை விட வேகமாக இருப்பது: உங்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்போது நீங்கள் செலவழிக்கும் பணமும் அதற்கு இணையாக உயர்ந்து விடுகிறது. உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்போது, வசித்துவரும் அபார்ட்மென்ட் வசதியற்றதாகத் தோற்றமளித்து, மனம் வேறொன்றை நாடுகிறது. விளைவு சேமிப்பிலிருக்கும் பணம் அப்படியே இருக்கும் அல்லது குறைந்திருக்கும். இப்பழக்கம் நடுத்தர வர்க்கத்தினர் பணம் சேமிக்க எந்த வகையிலும் உதவாது.
2. பல வகையான சேவைகளுக்காக முன்கூட்டியே கட்டணம் செலுத்திவிடுதல்: சந்தா (subscription), உறுப்பினர் கட்டணம், தவணைக் கட்டணம் போன்ற பல வகையான செலவுகளுக்கு பொறுப்பேற்றுக்கொண்டு செலவு செய்தல். நெட்ஃபிளிக்ஸ், மெடிடேஷன் செயலி, மீல் கிட் சர்வீஸ் போன்றவற்றிற்கு பணத்தை கட்டி விட்டு, பயன்படுத்தாதிருப்பதும், சில கம்பெனிகள் சேவையை தாமாகவே புதுப்பித்துக் (auto renewal) கொள்வதும், உங்கள் கவனத்திற்கு கூட வராத செலவுகளாகும்.
3. சக்திக்கு மீறி சொந்த வீடு வாங்கி பணத்தை முடக்குதல்: அலுவலக அறை, குழந்தைகள் படிப்பதற்கு என பல அறைகள் கொண்ட தனி வீடு வாங்குவதில் முழு சேமிப்பையும் செலவழித்துவிட்டு, அவசரத் தேவை, ஓய்வு காலத்திற்கான சேமிப்பு என எதுவுமின்றி விழி பிதுங்கி நிற்பதும் அனாவசியம் எனலாம்.
4. அபாய நிலையை சந்திக்க நேருமோ என்ற பயம்: உங்களிடமுள்ள சேமிப்பை பங்குகளில் முதலீடு செய்தால் ரிஸ்க் ஆகுமோ என்ற பயத்தில் சிறு சேமிப்பு கணக்கில் வைத்திருப்பதால் எந்தவித வளர்ச்சிக்கும் அது உதவாது. மாறாக, பண வீக்கத்திற்கு பலியாகிவிடும்.
5. ஆன்லைன் சேவைக்களிக்கும் அனாவசிய செலவுகள்: ஆன்லைன் மூலம் மளிகை சாமான், உணவு டெலிவரி மற்றும் பயணத்திற்கு கார், ஆட்டோ போன்றவற்றை வாசலுக்கு வரவழைக்கும் செலவுகள் ஆரம்பத்தில் குறைவாகத் தோன்றினாலும் மாசம் முழுவதுக்குமான செலவை கணக்கிடுகையில் மலைக்க வைக்கும்.
6. உங்களை விட அதிகம் செலவு செய்பவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருத்தல்: உங்களுடன் பணிபுரிபவர் ஆடி கார் வாங்குவதும், உடன் படித்தவர் வீட்டை புதுப்பிப்பதும் உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை உண்டுபண்ணும். அவர்கள் வருடக்கணக்கில் ஈயெம்ஐ (EMI) கட்டி வருவதை நினைத்து, அவர்களுடன் உங்களை ஒப்பீடு செய்வதை நிறுத்தினால் செலவு குறைய வாய்ப்பு உண்டாகும்.
7. சேமிப்பிற்கு முன்னுரிமை அளிக்காதிருத்தல்: உங்களில் பலர் மாதக் கடைசியில் மீதமாகும் பணத்தை சேமிப்பில் போடலாம் என்ற மனப்பான்மையிலேயே உள்ளனர். அது எவருக்குமே இயலாத ஒன்று. ‘உங்களது முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்’ என்ற கூற்றை பின்பற்றுவது, எதிர்காலத்திற்கு பாதுகாப்பு தரும்.
8. கிரெடிட் கார்ட் கடனுக்கு செலுத்தும் வட்டி: கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்களை கடனில் வாங்கி குவிப்பது உங்களை வாழ்நாள் முழுக்க கடனாளியாகவே வைத்திருக்கும்.
9. பல்வேறு உணர்ச்சி வசப்பட்ட காரணங்களுக்காக பணத்தை செலவழித்தல்: தனிமையை உணரும்போது அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது மாறுதலுக்காக என எண்ணி உயர்தர ரெஸ்டாரன்ட்டில் போய் சாப்பிடுவது, கண்ணில் கண்ட பொருளை வாங்கி வருதல் போன்றவை பலமுறை அதே செயலை செய்யத் தூண்டும். அப்புறம் என்ன? பட்ஜெட்டில் துண்டு விழும்.
10. நிதியை திட்டமிடுதலின்றி இஷ்டம்போல் கையாளுதல்: உங்களில் பலருக்கு, வரும் வருமானத்தை பட்ஜெட் போட்டு அதற்குள் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை. பட்ஜெட் போட பிடிக்காது. உருப்படியான இலக்கு இருக்காது. மாத வருமானம் எங்கு செல்கிறது என்பதும் தெரியாது. கடினமாக உழைத்தும், கணிசமான ஊதியம் பெற்றும், சரியான வாழ்வியல் முறையைப் பின்பற்றாத காரணத்தினால், இசைந்த வாழ்வியல் வட்டத்திற்குள் (comfort zone) வர முடியாமல் திண்டாடுபவர்களே பலர் உள்ளனர்.
எனவே, மனதிற்குப் பிடித்தமான வாழ்வு பெற மனம்போன போக்கில் செலவு செய்வதை நிறுத்துவதே ஒரே வழி.