இந்தியப் பங்குச்சந்தையில் அண்மைக்காலமாகச் சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. முதலீட்டாளர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு மத்திய வைப்பக அமைப்புகளிடமிருந்து (CDSL/NSDL) அவ்வப்போது ‘ஈ-வோட்டிங்’ (e-Voting) எனப்படும் மின்-வாக்களிப்பு அறிவிப்புகள் வரும்.
பொதுவாக, பெரும்பாலான முதலீட்டாளர்கள் இந்த அறிவிப்புகளைப் பொருட்படுத்துவதில்லை; அல்லது அது தங்களுக்குச் சம்மந்தமில்லாத ஏதோ ஒரு தொழில்நுட்ப நடைமுறை என்று கடந்துபோய்விடுகிறார்கள். ஆனால், இந்த வாக்குரிமை அவசியம் பயன்படுத்தப்பட வேண்டியதாகும்.
உரிமையும் தகுதியும்
ஜனநாயக நாட்டின் குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமை அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் குடிமக்கள் தங்கள் வாக்கைச் செலுத்தி, தங்களை ஆளவேண்டிய கட்சி எது, நபர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கின்றனர். இதன் மூலம் எம்.எல்.ஏ., அமைச்சர், முதலமைச்சர், பிரதமர் ஆகியோரைத் தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொரு குடிமக்களுக்கும் வாய்க்கிறது. அது மட்டுமல்ல; இதன் மூலமாக குடிமக்களின் வாக்குகள் நாட்டின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாக ஆகிறது.
இதே போன்ற ஜனநாயக அமைப்புதான் பங்குச்சந்தையின் ஓட்டெடுப்பிலும் இயங்குகிறது. ஒரு நிறுவனத்தின் ஒரேயொரு பங்கை நீங்கள் வாங்கியிருந்தாலும், நீங்கள் அந்நிறுவனத்தின் பகுதி உரிமையாளர் (Shareholder) ஆகிறீர்கள். நிறுவனத்தின் இயக்குநர்கள் தேர்வு, தணிக்கையாளர்கள் நியமனம், புதிய கடன் வாங்குதல், நிதி ஒதுக்கம், பிற நிறுவனங்களுடன் இணைவது போன்ற மிக முக்கிய முடிவுகளுக்குப் பங்குதாரர்களின் ஒப்புதல் பெற சட்டப்படி ஈ-வோட்டிங் நடத்தப்படுகிறது.
இங்கு ஒரு முதன்மையான கேள்வி எழுகிறது அல்லது எழவேண்டும். “எனக்கு உரிமை இருக்கிறது; ஆனால் அதைச் செயல்படுத்தும் தகுதி இருக்கிறதா?”
அரசியலில் ஒரு வாக்காளன் வேட்பாளரின் பின்னணி, கொள்கை, வாக்குறுதிகள் ஆகியவற்றை ஆராய்ந்து வாக்களிப்பதே நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது. உணர்ச்சிவசப்பட்டோ, கட்சி அபிமானத்திலோ,
தேர்தலின்போது வேட்பாளர்கள் அல்லது கட்சிகள் தருகிற பணம், அன்பளிப்புப் பொருட்கள் ஆகியவற்றுக்காகவோ போடப்படும் ஓட்டுகள் தவறான தலைவர்களைச் சிம்மாசனத்தில் அமர்த்திவிடும். அது நமக்கு நாமே சூனியம் வைத்துக்கொள்வது போன்றது.
பங்குச்சந்தையிலும் கிட்டத்தட்ட இதே போலத்தான்.
நிறுவனத்தின் கடந்தகாலச் செயல்பாடு, எதிர்காலத் திட்டங்கள், நிதி நிலை அறிக்கை (Financial Statements) போன்ற அடிப்படை அம்சங்களைப் புரிந்துகொள்ளாமல் அளிக்கப்படும் வாக்கு, தவறான நிர்வாகத்திற்கு ஆதரவாக மாறிவிடக்கூடும்.
பங்குதாரர் என்பவர் வெறும் நுகர்வோரோ அல்லது வாடிக்கையாளரோ அல்ல; அவர் நிறுவனத்தின் சிறு பகுதி முதலாளியும்கூட. பத்து லட்சம் அல்லது கோடியில் ஒரு பங்கு முதலாளியாக இருக்கலாம். ஆனால், முதலாளிதான்!
முதலாளியோ இல்லையோ, ‘ஓட்டளிக்கும் உரிமை கொண்டவர்’ என்பது அதிமுக்கியமானது. அந்த உரிமையைப் புரிந்துகொண்டு வாக்களிப்பில் பங்கேற்க வேண்டும்.
உரிமை இருக்கிறது என்பதற்காக மட்டும் வாக்களித்துவிடக் கூடாது. நிறுவனத்தின் லாப நஷ்டங்களையும், முடிவுகளின் சாதக பாதகங்களையும் பகுப்பாய்வு செய்யும் 'தகுதியை' வளர்த்துக்கொண்ட பின்னரே அந்த உரிமையைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஒவ்வொரு புதிய முதலீட்டாளருக்கும் அவசியம்.
ஈ-வோட்டிங்: மூன்று பரிமாண அணுகுமுறை
முதலீட்டாளர்கள் ஈ-வோட்டிங்கில் பங்கேற்கும்போது தங்களின் வாக்கைப் பதிவு செய்ய மூன்று முதன்மையான கண்ணோட்டங்களை அல்லது அணுகுமுறைகளைக் கையாளுதல் வேண்டும் என்பது எனது கருத்து.
1. தனிநபர் சுய லாப நஷ்ட அணுகுமுறை (Shareholder Value)
இது ஒரு முதலீட்டாளரின் முதன்மைப் பார்வை. “இந்தத் தீர்மானத்தால் நிறுவனத்தின் லாபம் பெருகுமா? எனது பங்கின் மதிப்பு உயருமா? நிறுவன நிர்வாகம் முதலீட்டாளர்களின் பணத்தைச் சரியான முறையில் முதலீடு செய்கிறதா அல்லது வீணடிக்கிறதா?” என்று ஆராய்வது. இயக்குநர்களுக்குக் கொடுக்கும் ஊதியம் அளவுக்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அல்லது முதலீட்டாளர்களின் நலனுக்கு எதிராகக் கடன் வாங்கும் முடிவுகள் எடுக்கப்படும்போது, அதை எதிர்த்து வாக்களிப்பது இதில் அடங்கும்.
2. சமூகப் பொதுநலன் சார்ந்த அணுகுமுறை (ESG Framework)
உலகளவில் முதலீட்டாளர்கள் கையாளும் மிக முக்கியமான கோட்பாடு ESG (Environmental, Social, and Governance) ஆகும். ஒரு நிறுவனம் லாபம் ஈட்டினால் மட்டும் போதாது; அது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல் இயங்குகிறதா? சமூகப் பொறுப்புடன் செயல்படுகிறதா? தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணுகிறதா? – என்றெல்லாம் பார்க்க வேண்டியது அவசியம். சமூக நலனுக்கு
எதிராக ஒரு நிறுவனம் முடிவெடுத்தால் அது நீண்ட காலத்தில் அந்நிறுவனத்தின் பெயருக்கே களங்கத்தை ஏற்படுத்தும். எனவே, சமூகப் பொறுப்புணர்வுடன் வாக்களிப்பது நீண்டகால முதலீட்டுக்கு நல்லது.
3. பங்குச்சந்தை நலன் சார்ந்த அணுகுமுறை (Market Integrity)
பங்குச்சந்தை என்பது நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் ஒரு கட்டமைப்பு. ஒரு சில நிறுவனங்களின் தவறான ஆளுமை (Corporate Governance failure) ஒட்டுமொத்தப் பங்குச்சந்தையின் மீதான நம்பிக்கையையே குலைத்துவிடும். எனவே, நிறுவனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கிறதா, சிறு முதலீட்டாளர்களின் உரிமைகள் மதிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் வகையில் வாக்களிப்பது பங்குச்சந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
சந்தை அமைப்புகளின் எதிர்பார்ப்புகள்
இந்த ஓட்டெடுப்பில் சந்தை அமைப்புகளின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நிறுவனங்கள் தங்கள் வணிகத் திட்டங்களைச் செயல்படுத்தச் சட்டப்பூர்வ ஒப்புதலையும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் பெற விரும்புகின்றன. சந்தை நெறிமுறையாளரான SEBI அமைப்பு, பெரிய விளம்பரதாரர்கள் அல்லது குடும்ப ஆதிக்கம் கொண்ட முதலாளிகள் மட்டும் முடிவுகளைத் தீர்மானிக்காமல், சிறு முதலீட்டாளர்களின் குரலும் ஒலிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. இது குறித்த புரிந்துணர்வோடு முதலீட்டாளர்கள் – குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் – வாக்களிக்க வேண்டும்.
புதிய முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
பங்குச்சந்தைக்குப் புதிதாக வந்திருப்பவர்கள், “எனக்கு இதெல்லாம் தெரியாதே” என்று ஒதுங்கக் கூடாது. இது தன்னையும் பாதிக்கக்கூடியது என்கிற புரிதலோடும், முதலீட்டுச் சமூகம் மற்றும் சந்தை குறித்த அக்கறையோடும், இந்த வாக்கெடுப்பு பற்றிய அடிப்படைகளை மட்டுமேனும் அறிந்துகொண்டு, வாக்கு செலுத்த வேண்டும்.
உங்கள் மின்னஞ்சலுக்கு வரும் வருடாந்திரப் பொதுக்கூட்ட அறிவிப்பை (AGM Notice) திறந்து பாருங்கள். அதில் எந்தக் காரணத்திற்காக வாக்குக் கேட்கிறார்கள் என்பதை வாசிப்பது சிறந்த தொடக்கம்.
நிறுவனத்தின் காலாண்டு அறிக்கைகளையும், நிதி நிலைமையையும் படிப்படியாகக் கற்றுக்கொள்ளுங்கள். தேவையான தகுதியையும், புரிதலையும் வளர்த்துக்கொண்ட பிறகு, உங்கள் ஜனநாயக உரிமையை ஈ-வோட்டிங் மூலம் வெளிப்படுத்துங்கள்.
உரிமை என்பது அமைப்பால் வழங்கப்படுவது; தகுதி என்பது நம்மால் வளர்த்தெடுக்கப்படுவது. பங்குச்சந்தையில் தகுதியுள்ள பங்குதாரர்களாக மாறுவதே நமது முதலீட்டிற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்!