பங்குச்சந்தை வீழ்ச்சியா, கரெக்ஷனா? முதலீட்டாளர்கள் தப்பிக்க இதோ வழி!

பயப்பட தேவையில்லை; பங்குச்சந்தை சரிவை லாபமாக மாற்றும் எளிய முதலீட்டு உத்திகள்.
பங்குச்சந்தை சரிவு - Stock Market Correction
பங்குச்சந்தை சரிவு - Stock Market Correction
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, மூன்று சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். இவரது உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள், 2024-ல், ஓர் அங்குலச் சிறுவன், அமேஸான் கானகத்தில் வழி மறந்த சிறுமி, ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள் ஆகிய மூன்று நூல்களாக வெளியாகியுள்ளன. இவ் வரிசையில் இன்னும் சில தொகுப்புகள் வரவுள்ளன.

Updated on: 

பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் (Volatility) இயல்பு. இந்த இயல்புதான் பங்குச்சந்தையின் உயிராதாரம் அல்லது அடிப்படை இயங்கியல். ஏற்ற இறக்கம் இல்லையேல் பங்குச்சந்தையே இல்லை!

நாட்டின் பொருளாதாரம், நிறுவனங்களின் காலாண்டு லாபம், உலகளாவிய நிகழ்வுகள், முதலீட்டாளர்களின் அச்சம் மற்றும் பேராசை ஆகியவற்றின் அடிப்படையில் பங்குகளின் விலைகள் நாள்தோறும் ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாகின்றன.

இந்தத் தினசரி ஏற்ற இறக்கமே சந்தைக்கு ‘திரவத்தன்மை’யை (Liquidity) தருகிறது. ஒருவர் விற்க நினைக்கும்போது மற்றொருவர் வாங்க முன் வருவதற்கு இந்த விலை மாற்றங்களே காரணம். எனவே, ஏற்ற இறக்கம் என்பது பங்குச்சந்தையின் குறைபாடு அல்ல; அதுவே அதன் அடையாளம் மற்றும் இயங்கு சக்தி!

Volatility-ன் உச்சகட்ட நிலையே Correction:

தினமும் நடக்கும் சிறு சிறு விலை மாற்றங்கள் (1% அல்லது 2% ஏற்ற இறக்கம்) சாதாரண 'வொலாட்டிலிட்டி' எனப்படுகிறது. ஆனால், இந்த ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து கீழ்நோக்கிச் சென்று, சந்தை தன் உச்சத்திலிருந்து 10% முதல் 20% வரை சரியும்போது அது ‘திருத்தம்’ (Correction) என்ற வடிவத்தை எடுக்கிறது. சந்தை 20%-க்கும் அதிகமாகக் கடும் சரிவை அடையும்போது, அது 'நொறுங்குதல் / வீழ்ச்சி' (Crash) பங்குச்சந்தை சரிவு) எனப்படுகிறது.

அலை உவமையுடன் எளிமையாகச் சொன்னால்:

• Volatility (ஏற்ற இறக்கம் - 1% முதல் 5% வரை): கடலில் தினமும் இயல்பாக எழும் சிறிய அலைகள் போன்றவை.

• Correction (சந்தைத் திருத்தம் - 10% முதல் 20% வரை): கடலில் அவ்வப்போது சீற்றத்துடன் ஏற்படும் பெரிய அலைகள் போன்றவை.

• Crash (சந்தை வீழ்ச்சி – சுமார் 25% - 30%க்கும் மேல்): பல ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக வந்து எல்லாவற்றையும் சுருட்டிச் செல்லும் சுனாமி போன்றது.

தற்போதைய சந்தைச் சரிவு

பங்குச்சந்தை தொடர்ந்து சரிவைச் சந்திக்கும் போதெல்லாம், சந்தையின் பெரும்பான்மையினர்களான குறுகியகால முதலீட்டாளர்ககளின் மத்தியில் பதற்றமும் அச்சமும் தொற்றிக்கொள்ளும். அப்படித்தான் கடந்த சில வாரங்களாக நிலவிவரும் தொடர் வீழ்ச்சியைக் கண்டு, "சந்தை பெரும் வீழ்ச்சியை (Crash) நோக்கிச் செல்கிறதா?" என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்துள்ளது.

பங்குச்சந்தை சரிவு - Stock Market Correction
பங்குச்சந்தை சரிவு - Stock Market Correction

ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரு சிலர் இதை 'மார்க்கெட் க்ராஷ்' என்று தவறுதலாகக் கூறுகின்றனர். ஆனால், சந்தை நுட்பங்களை அறிந்தவர்களுக்கு இது ‘க்ராஷ்' அல்ல; வழக்கமான 'மார்க்கெட் கரெக்‌ஷன்'தான் (Market Correction) என்பது தெளிவாகப் புரியும்.

கரெக்‌ஷனின் அவசியம்

சந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கரெக்‌ஷன் அவசியமான ஒன்றாகும். சந்தையில் பங்குகளின் மதிப்பீடு (Valuation) தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்தால் விலை அளவுக்கு அதிகமாக உயர்ந்துவிடும். அதைச் சமநிலைப்படுத்தி, சந்தையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர இந்தத் திருத்தம் உதவுகிறது. பொதுவாக இது ஆண்டுதோறும் ஒன்றோ இரண்டோ தடவை வரக்கூடும்.

ஆனால், மாபெரும் சரிவான 'க்ராஷ்' எனப்படும் வீழ்ச்சியானது, ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வு அல்ல. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் அது சுமார் எட்டு - பத்து வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடியது. 2008-ல் ஏற்பட்ட பொருளாதார முடக்கம் அல்லது 2020-ல் கோவிட் பெருந்தொற்று பரவிய காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகியவற்றை இதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம்.

கால அளவும் காரணங்களும்

கரெக்‌ஷனுக்கும் க்ராஷுக்கும் இடையே இருக்கும் மற்றொரு முக்கியமான வித்தியாசம், அது நீடிக்கிற கால அளவு ஆகும். பொதுவாக கரெக்‌ஷன் என்பது சில நாட்கள், சில வாரங்கள் அல்லது அதிகபட்சமாக ஓரிரு மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கும். சந்தை தன்னைத்தானே சரிசெய்து கொண்ட பிறகு, மீண்டும் பழைய வேகத்தில் உயரத் தொடங்கிவிடும்.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தை ரகசியம்: வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் லாபம் ஈட்டுவது எப்படி?
பங்குச்சந்தை சரிவு - Stock Market Correction

ஆனால், க்ராஷ் என்பது பெரும் பொருளாதாரச் சீர்குலைவு, போர்கள், வங்கிகளின் வீழ்ச்சி போன்ற உலகளாவிய அசாதாரணக் காரணங்களால் (Black Swan Events) ஏற்படுவதால், இதன் தாக்கம் சில மாதங்கள் முதல் ஒரு வருடம் அல்லது அதற்கு மேலாகக்கூட நீடிக்கக்கூடும். சந்தை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் பிடிக்கும்.

பங்குச்சந்தை கடந்த இரு ஆண்டுகளாகவே மந்த நிலையில்தான் உள்ளது. சில பல பெரிய நிறுவனங்களின் பங்குகளும் தொடர்ந்து சரிவிலேயே உள்ளன. தவிர இப்போது தொடர்ந்து ஏழு வாரங்களாக சந்தை சரிவைச் சந்தித்து வருகிறது.

இது 2020 கோவிட் காலத்திற்குப் பிறகான நீண்ட தொடர் வீழ்ச்சியாகும். இதனால் குறுகியகால முதலீட்டாளர் களும், புதியவர்களும் மிரட்சியோடு உள்ளனர். இந்த சூழலில் சில யூட்யூப் சேனல்கள் பார்வையாளர்களைக் கவர்ந்திழுப்பதற்காக ரத்த ஆறு, மரண அடி என்றெல்லாம் மட்ட ரகமாக தலைப்பும் தம்ப் நெய்லும் கொடுத்து பீதியைக் கிளப்புகின்றன.

தற்போதைய நிலவரத்தைப் பொறுத்தவரை, உலகளாவிய அரசியல் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு (Middle East பதற்றத்தால் Brent crude ₹106+ அளவிற்கு உயர்வு), வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனைப் போக்கு (FII Selling) மற்றும் வட்டி விகித மாற்றங்கள் போன்ற தற்காலிகக் காரணங்களாலேயே சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை வல்லமை (Economic Fundamentals) வலுவாகவே உள்ளது. எனவே, இப்போது நடப்பது ஒரு தற்காலிகமான மற்றும் மிதமான கரெக்‌ஷன் மட்டுமே.

எண் அளவில் பார்த்தால், தற்போதைய சரிவு உச்சத்திலிருந்து சுமார் 6% முதல் 9% வரையே உள்ளது. இது 10% - 20% எனும் கனமான 'Correction' வரம்பை இன்னும் முழுமையாக எட்டவில்லை. ஆனாலும், தொடர்ந்து ஏழு வாரங்களாக நீடிக்கும் இந்தச் சரிவின் தன்மையையும் காலஅளவையும் கருத்தில் கொண்டு, சந்தை நிபுணர்களும் ஊடகங்களும் இதை ஏற்கனவே 'Market Correction' என்றே அழைத்து வருகின்றனர்.

புதிய முதலீட்டாளர்கள் அஞ்சத் தேவையில்லை

புதிய முதலீட்டாளர்கள் இத்தகைய சரிவைக் கண்டு அச்சமடைந்து, தங்களிடம் உள்ள பங்குகளை நஷ்டத்திற்கு விற்பனை செய்துவிட்டு வெளியேறுவது வழக்கமாக நடக்கும் ஒரு தவறு.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தையில் 'காப்பி கேட்' முதலீடா? கிணற்றில் குதிப்பதற்குச் சமம்!
பங்குச்சந்தை சரிவு - Stock Market Correction

பங்குச்சந்தை எப்போதும் ஒரே நேர்கோட்டில் உயராது என்பதையும், ஏற்ற இறக்கங்கள் அதன் இயல்பு என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கரெக்‌ஷன் காலங்களில் சந்தையின் போக்கைப் பதற்றமின்றி கவனிப்பது அவசியம். தரமான, கடனில்லாத, நல்ல லாபம் ஈட்டும் நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால், தற்காலிக விலை வீழ்ச்சியைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியமில்லை. சந்தை மீண்டு வரும்போது அந்தப் பங்குகளின் விலையும் நிச்சயம் உயரும்.

நீண்டகால முதலீட்டாளர்களுக்குத் தங்கமான வாய்ப்பு

நீண்டகால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்கு இத்தகைய கரெக்‌ஷன் காலங்கள் அஞ்ச வேண்டிய ஒன்றல்ல; மாறாக, வரவேற்பிற்குரிய நல்வாய்ப்பாகும்.

சந்தை உச்சத்தில் இருக்கும்போது அதிக விலைக்கு விற்கப்படும் முன்னணி ப்ளூ சிப் (Blue Chip) நிறுவனங்களின் பங்குகள், இத்தகைய கரெக்‌ஷன் காலங்களில் 15% முதல் 25% வரையிலான தள்ளுபடி விலையில் (Discount Price) கிடைக்கின்றன. நல்ல நிறுவனங்களின் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்கிச் சேர்ப்பதற்கு (Accumulate) இதுவே சரியான தருணம்.

அச்சங்களுக்கு இடம் தராமல், சந்தையின் இந்தத் திருத்தக் கட்டத்தை நீண்டகால நிதி இலக்குகளுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனமான முதலீட்டு உத்தியாகும்.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தையில் தினமும் லாபம் ஈர்க்கும் 4 ட்ரேடிங் ரகசியங்கள்!
பங்குச்சந்தை சரிவு - Stock Market Correction
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com