பங்குச்சந்தை ரகசியம்: வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் லாபம் ஈட்டுவது எப்படி?

சிறு முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்விங் டிரேடர்கள் அறிந்துகொள்ள வேண்டிய வார இறுதி வர்த்தக உத்திகள்.
பங்குச்சந்தை லாபம் - Stock Market Tips
பங்குச்சந்தை லாபம் - Stock Market TipsImage credit: Gemini
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, மூன்று சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். இவரது உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள், 2024-ல், ஓர் அங்குலச் சிறுவன், அமேஸான் கானகத்தில் வழி மறந்த சிறுமி, ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள் ஆகிய மூன்று நூல்களாக வெளியாகியுள்ளன. இவ் வரிசையில் இன்னும் சில தொகுப்புகள் வரவுள்ளன.

Updated on

ங்குச்சந்தைக்குப் புதிதாக நுழையும் பெரும்பாலான சிறு முதலீட்டாளர்களும், பகுதிநேர வர்த்தகர்களும் சந்திக்கும் மிகப்பெரிய சவால் - எந்தப் பங்கை வாங்குவது என்பது. அடுத்தது ‘எப்போது’ வாங்குவது, ‘எப்போது’ விற்பது என்பது. சரியான அல்லது சிறந்த பங்கைத் தேர்ந்தெடுத்தாலும், தவறான நாளில் அல்லது தவறான நேரத்தில் வாங்கவோ விற்கவோ செய்தால் நஷ்டம் அடைய நேரிடலாம், பங்குச்சந்தை லாபம் குறையவாவது செய்யும்.

இதில் இருவித ‘சரியான நேரங்கள்’ உள்ளன. முதலாவது, சந்தை நிலவரம், வாங்கக்கூடிய பங்கின் விலை மற்றும் ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றாலான ‘பங்கின் சரியான நேரம்’. அடுத்தது, சந்தையின் பொது இயல்பின் அடிப்படையிலான ‘சந்தையின் சரியான நேரம்’.

நீண்ட கால மற்றும் குறுகிய கால முதலீட்டாளர்கள் பங்கின் சரியான நேரத்தைப் பார்த்தால் போதும். எனினும், அவர்களும் சந்தையின் சரியான நேரத்தைப் பார்ப்பது சிறிதளவு லாபம் கூடுதலாகக் கிடைக்க வழிவகுக்கும். முழுநேர மற்றும் பகுதிநேர வர்த்தகர்களுக்குச் சந்தையின் சரியான நேரத்தைப் பார்த்து வர்த்தகத்தில் ஈடுபடுவது கூடுதல் லாபத்துக்கான சிறந்த வாய்ப்பு. அதில் அனுபவஸ்தர்கள் அந்த நேரங்களைத் தகுந்தபடி பயன்படுத்திக்கொள்வர்.

கவனிக்கவும்: இந்த நேரங்கள் சந்தையின் பொது நிலவரம் அடிப்படையிலானதுதானே தவிர, எல்லா சமயத்திலும் இது பொருந்தாது; எல்லாப் பங்குகளுக்கும் இது பொருந்தாது.

வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மனநிலையைச் சந்தையில் உருவாக்கும். அதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய இரண்டு நாட்கள்: வெள்ளிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை.

இவ்விரு நாட்களின் பின்னணியில் இருக்கும் உளவியல் என்ன, பெரிய முதலீட்டாளர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள், சிறு - குறு முதலீட்டாளர்கள் இதைப் பயன்படுத்தி எப்படி லாபம் ஈட்டலாம் என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தையில் 'காப்பி கேட்' முதலீடா? கிணற்றில் குதிப்பதற்குச் சமம்!
பங்குச்சந்தை லாபம் - Stock Market Tips

ஸ்விங் டிரேடிங் இயல்புகள்

பங்குச்சந்தையில் முதலீடுகளின் தன்மைகளிலிருந்து இன்ட்ராடே, ஸ்விங் ட்ரேடிங் போன்ற வர்த்தகங்களின் தன்மைகள் மாறுபட்டவை. சுமார் 5 – 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால முதலீடுகள், 1 – 3 ஆண்டுகளுக்கு உட்பட்ட குறுகியகால முதலீடுகள் ஆகியவற்றில் அன்றாட விலை ஏற்ற இறக்கங்களைப் பார்க்க வேண்டியதில்லை. ஒவ்வொரு மாதமும் பார்க்க வேண்டிய அவசியமும் அவ்வளவாக இராது.

ஆனால், ஒரே நாளில் வாங்கி விற்கக்கூடிய இன்ட்ராடேவில் ஒவ்வொரு நிமிடமும் கவனமாக, ஆயத்தமாக, அதிவிழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.

துரிதமாக சிந்தித்துச் செயல்பட வேண்டிய தேவையும் உள்ளது. சில நாட்கள், ஓரிரு வாரங்கள் முதல் சுமார் 1 - 2 மாதங்கள் வரை வைத்திருக்கக்கூடிய ஸ்விங் ட்ரேடிங்கில் இந்த அளவுக்கு கவனிப்புகள் தேவையில்லை. அன்றாடம் அல்லது ஓரிரு நாட்களுக்கு ஒருமுறையிலான கவனிப்பு போதும்.

இது ஒருபுறம் இருக்க, திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களின் ‘சந்தையின் சரியான நேரத்தை’ப் பயன்படுத்திக்கொள்வதும் நல்லது.

பங்குச்சந்தை லாபம் - Stock Market Tips
பங்குச்சந்தை லாபம் - Stock Market TipsImage credit: Gemini

திங்கட்கிழமை: புதிய பாய்ச்சலும் வாங்குவதற்கான சூழலும்

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப்பின் திங்கட்கிழமை காலை சந்தை திறக்கும்போது அது புதிய ஆற்றலுடன் இயங்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிவந்த செய்திகள், நிறுவனங்களின் முக்கிய அறிவிப்புகள், உலகச் சந்தைகளின் நிலவரம் ஆகியவற்றின் பிரதிபலிப்புகள் அதில் இருக்கும்.

வெள்ளிக்கிழமை தங்களது பங்குகளை விற்று ரொக்கத்துடன் காத்திருந்த பெரிய வர்த்தகர்களும், புதிய முதலீட்டாளர்களும் திங்கட்கிழமை காலை புதிய முதலீடுகளைச் செய்யத் தொடங்குவார்கள். இதனால் சந்தையில் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, பங்குகள் விரைவான விலை ஏற்றத்தைச் சந்திக்கும்.

குறிப்பாக, வெள்ளிக்கிழமை சரிவைச் சந்தித்த நல்ல பங்குகள், திங்கட்கிழமை காலை மீண்டும் தங்களது பழைய ஏற்றப் பாதையை நோக்கிப் பாயும். எனவே, ஒரு பங்கை வாங்கிச் சில நாட்களில் லாபம் பார்க்க நினைக்கும் சிறு முதலீட்டாளர்களுக்கும், ஸ்விங் ட்ரேடர்களுக்கும் திங்கட்கிழமை ஒரு சிறந்த தொடக்கப்புள்ளியாக அமைகிறது.

வெள்ளிக்கிழமை: பெரிய முதலீட்டாளர்களின் நகர்வுகளும் விற்பனை அழுத்தமும்

வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையில் சந்தை முடிவடையும். அடுத்த இரு நாட்களுக்கு சந்தைக்கு விடுமுறை என்பதால், அந்த இரு நாட்களின் விடுமுறையும் வெள்ளிக்கிழமையின் வர்த்தகத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக அமைகிறது.

பெரிய நிறுவன முதலீட்டாளர்களும் (FIIs / DIIs), அனுபவம் வாய்ந்த வர்த்தகர்களும் வார இறுதியில் தேவையில்லாத ஆபத்துகளை (Weekend Risk) தங்கள் தலையில் சுமக்க விரும்பமாட்டார்கள். இரண்டு நாள் விடுமுறைக் காலத்தில் உலக அளவில் ஏதேனும் அசம்பாவிதங்களோ, போர்ப் பதற்றங்களோ, அல்லது சர்வதேசச் சந்தைகளில் பெரிய பொருளாதார மாற்றங்களோ நிகழ்ந்தால், திங்கட்கிழமை காலை சந்தை கடுமையாகப் பாதிக்கப்படலாம்.

இதையும் படியுங்கள்:
லட்சங்களில் சம்பாதிக்கலாம்! தற்போதைய ட்ரெண்டில் பட்டையைக் கிளப்பும் போட்டோ ஷூட் பிசினஸ்!
பங்குச்சந்தை லாபம் - Stock Market Tips

இந்த அபாயத்தைக் தவிர்க்க, பெரிய முதலீட்டாளர்களும் ஸ்விங் டிரேடர்களும் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் தங்களது கைவசம் உள்ள பங்குகளின் லாபத்தைப் பதிவு செய்யும் (Profit Booking) வகையில் விற்பனை செய்வார்கள். இதனால் வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் பெரும்பாலான நல்ல பங்குகளின் விலையிலும் ஒரு தற்காலிகமான சரிவு அல்லது தேக்கம் ஏற்படுவது இயல்பு.

சிறு முதலீட்டாளர்களுக்கான நடைமுறை உத்திகள்

சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் சிறு முதலீட்டாளர்கள் இந்த ‘வெள்ளி-திங்கள்’ சுழற்சியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த சில எளிய நடைமுறைகளைப் பின்பற்றலாம்.

முதலாவதாக, வெள்ளிக்கிழமை சந்தை முடியும் தருவாயில் (பிற்பகல் 2:30 மணி முதல் 3:15 மணி வரை) சந்தையைக் கவனியுங்கள். ஒரு நல்ல வலுவான பங்கு, அன்றைய தினம் லாபப் பதிவின் காரணமாகச் சற்று விலை குறைந்து காணப்பட்டால், அதை வாங்குவதற்கான வாய்ப்பாகக் கருதலாம்.

இரண்டாவதாக, திங்கட்கிழமை காலை சந்தை திறந்தவுடனேயே (9:15 மணி முதல் 9:45 மணி வரை) அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக்கூடாது.

அந்த முதல் அரைமணி நேரத்தில் விடுமுறைக் காலச் செய்திகளின் தாக்கம் காரணமாகச் சந்தையில் கடுமையான ஏற்ற இறக்கம் (Volatility) இருக்கும். சந்தை ஒரு நிலையான திசையைக் கண்டறிந்த பிறகு, அதாவது காலை 10 மணிக்கு மேல் வர்த்தகத்தில் ஈடுபடுவது பாதுகாப்பானது.

மூன்றாவதாக, நீங்கள் வாங்கிய பங்கு திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை நல்ல ஏற்றத்தைக் கண்டு உங்கள் இலக்கை அடைந்துவிட்டால், மீண்டும் வெள்ளிக்கிழமை வரை காத்திருக்காமல் லாபத்தைப் பதிவு செய்து வெளியேறுவது சிறந்தது.

இதையும் படியுங்கள்:
ஷேர் மார்க்கெட்டில் நீங்களும் முதலாளி... Shareholder e-Voting ரகசியம் தெரியுமா?
பங்குச்சந்தை லாபம் - Stock Market Tips

நினைவில் கொள்ளவேண்டிய முக்கிய எச்சரிக்கை

‘விற்பதற்கு வெள்ளி, வாங்குவதற்கு திங்கள்’ என்பது சந்தையின் பொதுவான மனநிலையை அடிப்படையாகக் கொண்ட ஒரு உத்தியே தவிர, இது அனைத்து சூழ்நிலைகளுக்கும் பொருந்தும் மாயாஜாலம் அல்ல.

தேசிய அல்லது சர்வதேச அளவில் ஏதேனும் மிகப்பெரிய சாதகமான செய்திகள் வார இறுதியில் எதிர்பார்க்கப் பட்டால், வெள்ளிக்கிழமையே பங்குகள் உயரக்கூடும். அதேபோல, திங்கட்கிழமை காலை உலகச் சந்தைகள் மோசமாக இருந்தால், நாம் எதிர்பார்க்கும் ஏற்றம் வராமலும் போகலாம்.

எனவே, இந்த நாட்களின் நுட்பத்தைப் பயன் படுத்தும்போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பங்கின் அடிப்படை வலிமை, அதன் வரைபட அமைப்பு (Chart Pattern), மற்றும் சரியான நஷ்டத் தடுப்பு வரம்பு (Stop Loss) ஆகியவற்றை எப்போதும் கைகொள்ள வேண்டும்.

முறையான திட்டமிடுதலும், சந்தையின் உளவியலைப் புரிந்துகொள்ளும் அறிவும் இணைந்தால், சிறிய முதலீட்டாளர்களும் பங்குச்சந்தையில் தொடர்ந்து லாபம் ஈட்ட முடியும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com