பங்குச்சந்தை அச்சமா? IPO அலைகளில் பெரிய மீன்களைப் பிடிக்க எளிய வழிகள்!

இல்லத்தரசிகள் முதல் நடுத்தர வர்க்கம் வரை – டீமேட் கணக்கு மூலம் IPO-வில் அசத்தல் லாபம்!
IPO முதலீடு
IPO முதலீடுImg Credit: ChatGPT
Updated on

இந்தியப் பங்குச்சந்தையில் சமீபகாலமாக IPO-க்கள் குறித்த பேச்சுக்களும் எதிர்பார்ப்புகளும் முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளன. குறிப்பாக, அண்மையில் வெளியான சில முன்னணி நிறுவனங்களின் IPO-க்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுத்துள்ளதால், பங்குச்சந்தையில் இயங்கும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் தற்போது IPO குறித்த கவனமும் ஆர்வமும் மிகுந்துள்ளது.

IPO என்றால் என்ன?

IPO (Initial Public Offering) என்பது ஒரு நிறுவனம் தனது தொழில் விரிவாக்கத்திற்காகவோ அல்லது கடனைக் குறைப்பதற்காகவோ முதன்முறையாகப் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டத் தனது பங்குகளைப் பங்குச்சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரும் நிகழ்வாகும்.

ஒரு IPO வெளியீட்டின்போது, நிறுவனத்தின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன:

1. சிறு முதலீட்டாளர்கள் (Retail Individual Investors - RII):

₹2 லட்சம் வரை முதலீடு செய்யும் சாமானிய முதலீட்டாளர்கள். இவர்களுக்காக மொத்த IPO-வில் 35% பங்குகள் கட்டாயமாக ஒதுக்கப்படுகின்றன. இவர்களுக்கான ஒரு லாட் விலை ₹14,000 – 15,000 என்ற அளவில் இருக்கும். சிறு முதலீட்டாளர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு.

2. உயர் சொத்து மதிப்புடைய முதலீட்டாளர்கள் / நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் (High Net-worth Individuals - HNI / Non-Institutional Investors - NII):

₹2 லட்சத்திற்கும் அதிகமாக முதலீடு செய்யும் அதிக பணம் படைத்த பெருமுதலீட்டாளர்கள். இவர்களுக்காக 15% பங்குகள் ஒதுக்கப்படுகின்றன.

3. தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் (Qualified Institutional Buyers - QIB): வங்கிகள், பரஸ்பர நிதிகள் (Mutual Funds) மற்றும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்:

இவர்களுக்காக 50% பங்குகள் ஒதுக்கப்படுகின்றன.

IPO மூலம் பங்குகளைப் பெற்று, அது பங்குச்சந்தையில் (BSE/NSE) பட்டியலிடப்படும் (Listing) நாளில், ஆரம்ப விலையைவிட அதிக விலைக்கு வர்த்தகமானால் முதலீட்டாளர்களுக்கு உடனடி 'லிஸ்டிங் லாபம்' (Listing Gains) கிடைக்கிறது.

பரபரப்பை ஏற்படுத்திய ‘மில்க்கி மிஸ்ட்’!

சமீபத்தில் தமிழகத்தின் ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'மில்க்கி மிஸ்ட்' (Milky Mist Dairy Food Ltd) நிறுவனம் தனது ₹1,553 கோடி அளவிலான IPO-வை வெளியிட்டது. சந்தையில் இயங்கும் தமிழ்நாட்டு முதலீட்டாளர்களிடையே இந்த IPO மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

எதிர்பார்க்கப்பட்டதைவிட லாபம்!

மில்க்கி மிஸ்ட் பங்குகள் IPO விலையான ₹140-ஐவிட 18% உயர்ந்து ₹165-க்கு பட்டியலிடப்பட்டு, அன்றைய தினமே ₹181.50 வரை உச்சம் தொட்டன. 1 லாட் (₹14,980) விண்ணப்பித்து பங்கு ஒதுக்கீடு பெற்ற ஒரு சிறு முதலீட்டாளருக்கு ஒரே நாளில் ₹4,000-க்கும் மேல் லாபம் கிடைத்தது! 59 மடங்குக்கும் மேல் இந்த IPO கோரப்பட்டதும் (Subscribed), முதலீட்டாளர்கள் அடைந்த அதிவேக லாபமும் தற்போதைய நிதிச் சந்தை வட்டாரத்தில் பரபரப்பான பேசுபொருளாக ஆகின.

தொடரும் உற்சாகம்: லலிதா ஜூவல்லர்ஸ் IPO!

மில்க்கி மிஸ்ட் ஏற்படுத்திய கோலாகலத்தைத் தொடர்ந்து, தென்னிந்தியாவின் முன்னணி நகைக்கடை நிறுவனமான ‘லலிதா ஜூவல்லர்ஸ்’ (Lalithaa Jewellery Mart Ltd) தனது ₹1,700 கோடி அளவிலான IPO-வை வெளியிட்டுள்ளது.

₹190 – ₹201 எனப் பங்கு விலை நிர்ணயிக்கப்பட்டு சந்தைக்கு வந்துள்ள இந்த IPO-விற்கு முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய கிளைகளைத் திறக்கவும், ஆபரண இருப்பை அதிகரிக்கவும் இந்நிதி பயன்படுத்தப்பட உள்ள நிலையில், கிரே மார்க்கெட்டில் (Grey Market Premium) இதன் பங்குகள் கூடுதல் விலையில் வர்த்தகமாகி வருகின்றன.

IPO முதலீடு
IPO முதலீடு

உச்சகட்ட எதிர்பார்ப்பு: நாட்டின் மிகப்பெரிய NSE IPO!

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது தேசியப் பங்குச்சந்தையின் (NSE - National Stock Exchange) IPO வருகையைத்தான்.

நாட்டின் மிகப்பெரிய பங்குச்சந்தையான NSE, தனது ஆரம்ப பொது வெளியீட்டிற்கான வரைவு அறிக்கையை (DRHP) SEBI-யிடம் தாக்கல் செய்துவிட்டு இறுதி அனுமதிக்குக் காத்திருக்கிறது.

NSE IPO-விற்கு விண்ணப்பங்கள் பல மடங்கு குவியும் என்பதால், கணினி அடிப்படையிலான குலுக்கல் முறையில் (Lottery System) பங்குகள் ஒதுக்கப்படும். குடும்ப உறுப்பினர்களின் தனித்தனி டீமேட் கணக்குகள் மூலம் தலா ஒரு லாட் விண்ணப்பிப்பது பங்குகள் கிடைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
பிள்ளைகளின் உயர்கல்விக்கு கடன் வாங்க தேவையில்லை! இன்றே செய்ய வேண்டிய 5 முதலீடுகள்!
IPO முதலீடு

கூடுதல் தகவல்கள்

நல முரண்பாடுகளைத் (Conflict of Interest) தவிர்க்க, ஒரு பங்குச்சந்தை நிறுவனம் தனது சொந்தச் சந்தையிலேயே தன் பங்குகளைப் பட்டியலிட்டு வர்த்தகம் செய்ய SEBI அனுமதிக்காது. எனவே, NSE பட்டியலிடப்படும்போது அதன் பங்குகள் பம்பாய் பங்குச்சந்தை(BSE)யில்தான் வர்த்தகமாகும்! (இதேபோலத்தான் BSE நிறுவனத்தின் பங்குகள் NSE-யில் வர்த்தகமாகின்றன).

இந்த IPO-வில் NSE நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடவில்லை. NSE-யில் ஏற்கனவே முதலீடு செய்து பங்குகளைக் கைவசம் வைத்துள்ள LIC, SBI போன்ற பெருநிறுவனங்கள் (Institutional Investors), தங்களது பங்குகளின் ஒரு பகுதியைச் சந்தையில் விற்கும் Offer for Sale (OFS) முறையில்தான் இது வெளியாகிறது.

கீழ் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு அரிய வாய்ப்பு

சமீப ஆண்டுகளில் பங்குச்சந்தை குறித்த பயத்தைக் (Stock Market Phobia) கடந்து கீழ் நடுத்தர மக்களும் பங்குச்சந்தையில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இப்போதைய திறன்பேசி செயலிகள் போன்ற சௌகரியங்களால் இல்லத்தரசிகளும் இந்த முதலீடுகளில் எளிதாக ஈடுபட முடிகிறது. இத்தகைய சூழலில், பெரு முதலீட்டாளர்கள், வணிகர்கள் மட்டுமன்றி சாமானிய முதலீட்டாளர்களும் IPO-க்கள் மூலம் நல்ல பலனை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தை: சாமானியனை கோடீஸ்வரனாக்கும் வரமா? நடுத்தெருவில் நிறுத்தும் சாபமா?
IPO முதலீடு

IPO-க்கள் அவ்வப்போது அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கும். அந்த அலைகளில் பெரிய மீன்கள் (லாபம்) கிடைக்கும் என்பதால் முண்டியடிப்பும் அதிகம் இருக்கும். வாய்ப்பைப் பெற ஒதுக்கீடு குறித்த புரிதலுடன் திட்டமிட்டு விண்ணப்பிப்பது அவசியம். அப்போதும், அதிக விண்ணப்பங்கள் வந்தால் குலுக்கல் முறையில்தான் கிடைக்கும் என்பதையும், கூடுதல் லாட்கள் கிடைக்காமல் ஒரு லாட் மட்டுமே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளவும்.

எப்படியாயினும், மிகக் குறைந்த நாட்களில் அதிக லாபத்துக்கு வாய்ப்புள்ள முதலீடு என்பதால், வாய்ப்புள்ளவர்கள் எப்போதும் IPO முதலீட்டுக்கென்றே கணிசமான தொகை – குறைந்தபட்சம் ஒன்றோ, இரண்டோ லாட்களுக்காவது - ஒதுக்கி வைத்துக்கொள்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
மியூச்சுவல் ஃபண்டில் செல்ஃப் லாக்-இன்: முதலீட்டைப் பாதுகாக்கும் புதிய அம்சம்!
IPO முதலீடு
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com