

தற்போதைய டிஜிட்டல் உலகில் பல நாடுகள் காகிதம் மற்றும் நாணய வடிவிலான பண பரிவர்த்தனையை விட்டு விலகி தொழில் நுட்பம் சார்ந்த பேமெண்ட் முறைகளை பெரிதும் ஊக்குவித்து வருகின்றன. அந்த வகையில் மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் சேவையில் ஈடுபட்டு பண பரிவர்த்தனையில் உலகின் முதல் பணமில்லா நாடாக மாறிவரும் ஸ்வீடன் குறித்து இப்பதிவில் காண்போம்.
உலகின் முதல் பணமில்லா நாடாக அதிகாரப்பூர்வமாக இருக்கும் ஸ்வீடனில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான பண பரிவர்த்தனைகள் தான் பணம் மற்றும் நாணயத்தை உள்ளடக்கி இருக்கிறது. மற்ற அனைத்து வர்த்தக, நிதி பரிவர்த்தனைகளும் கார்டுகள், மொபைல் ஆப்கள் மற்றும் ஆன்லைன் பேங்கிங் மூலம் டிஜிட்டல் முறையில் செய்யப்படுகின்றன.
நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை அரிதாகவே பயன்படுத்தும் ஸ்வீடன் மக்கள் நன்கொடைகள், பொது போக்குவரத்து மட்டுமன்றி அனைத்திற்கும் 2023-ம் ஆண்டு நிலவரப்படி 99% டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துகிறார்கள். 2010-ம் ஆண்டில் 60% இருந்த டிஜிட்டல் பேமெண்ட்களின் பரிவர்த்தனை 10 ஆண்டுகளில் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் 2000 ஆண்டில் ஸ்வீடன் நாடு டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் நவீன வங்கி அமைப்புகளில் அதிகம் முதலீடு செய்ய தொடங்கியதன் மூலம் இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை பயணம் தொடங்கியது. கடந்த 2012-ல் தொடங்கப்பட்ட ஸ்வீடிஷ் நாட்டின் முக்கிய வங்கிகளால் ஆதரிக்கப்படும் மொபைல் பேமெண்ட் ஆப்-ஆன ஸ்விஷ், 8 மில்லியனுக்கும் அதிகமான அதாவது அந்நாட்டின் மக்கள் தொகையில் 75% பயனாளர்களைக் கொண்டுள்ளது.
தெரு விற்பனையாளர் தொடங்கி பில்களுக்கான பேமெண்ட் வரை அனைத்திற்கும் பணம் செலுத்துவதற்கு டிஜிட்டல் சேவை பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஸ்வீடனில் உள்ள 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் பணத்தை முற்றிலுமாக கையாள்வதில்லை என்பதால் ஏடிஎம்களும் குறைந்து வருகின்றன. அதோடு "இங்கு ரொக்க பணம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை" என்ற பலகைகளை வைத்துள்ளன.
65 வயதிற்கு மேற்பட்ட ஸ்வீடன் மக்களில் 95% மேற்பட்ட முதியோர்கள் டெபிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். முதியவர்களிடத்தில் டிஜிட்டல் அறிவு குறித்த இடைவெளியை குறைக்க டிஜிட்டல் கல்வி அறிவு திட்டங்கள் உதவி புரிகின்றன.
மொபைல் வாலட்ஸ்கள் மற்றும் தொடர்பு இல்லாத கட்டணங்கள் விரைவாக பிரபலமடைந்துள்ளதோடு, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் 85%-க்கும் அதிகமான பாயின்ட்-ஆஃப் சேல் பரிவர்த்தனைகளைக் கொண்டுள்ளன.
பொருளாதாரத்தை எதிர்காலத்தில் பாதுகாப்பானதாக்கவும், பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை உறுதி செய்யவும், ஸ்வீடனின் மத்திய வங்கியான ரிக்ஸ் பேங்க் e-Krona எனப்படும் டிஜிட்டல் கரன்சியை முன்னோடியாகக் கொண்டு செயல்படுகிறது.
உலகளவில் ரொக்கம் இல்லா பண பரிவர்த்தனை முறையை ஸ்வீடன் நாடு ஏற்றுக்கொண்டு முன்னணியில் உள்ளது. நார்வே, பின்லாந்து, தென்கொரியா போன்ற நாடுகள் ஸ்வீடனைத் தொடர்ந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றன. இந்த மாற்றம் உலகளவில் பணமில்லா சமூகம் சாத்தியமானது என்பதோடு பாதுகாப்பாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க முடியும் என்பதை காட்டுகிறது.