மாதாந்திர சம்பளம் மாறினாலும் கடன் இல்லாத வாழ்க்கை சாத்தியம்! எப்படி என்று தெரியுமா?

variable income budgeting
variable income budgeting
Updated on

நிதி திட்டமிடல் அதாவது பட்ஜெட் போடுவது என்பது மாதாந்திர சம்பளம் வாங்குபவர்களுக்கு எளிதானது. ஏனென்றால், அவர்களுக்கு மாதா மாதம் எவ்வளவு பணம் வருகிறது என்ற தெளிவு உள்ளது. ஆனால், மாதா மாதம் மாறக்கூடிய வருமானம் உடையவர்கள் (Variable income or Irregular income) எவ்வாறு நிதி திட்டமிடல் செய்வது என்ற ஒரு கேள்வி எழலாம் அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

மாறக்கூடிய வருமானம் உடையவர்கள் அவர்களது கடந்த காலத்தில் மாதா மாதம் ஈட்டிய வருமானத்தைக் காண வேண்டும். கடந்த ஒரு வருட காலம் அல்லது கடந்த ஆறு மாத காலம் அவர்கள் ஈட்டிய வருமானத்தைக் காணும் பொழுது, எந்த மாதத்தில் மிகவும் குறைவாக அவர்கள் பணம் ஈட்டி உள்ளார்கள் என்று கண்டு, அதனை மாதாந்திர வருமானமாக கருதி அதனைக் கொண்டு நிதி திட்டமிடல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது, மிகவும் முன் ஜாக்கிரதையாக நிதி திட்டமிடல் செய்கிறோம்.

நமது செலவுகள் நமது குறைந்தபட்ச வருமானத்தின் படியே அமைவதால், கடன் என்ற அபாயத்தில் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்கிறோம். மேலும், வருமானம் சில மாதங்களில் அதிகமாக வரும் பொழுது, அந்த வருமானத்தை நாம் மற்ற நிதி குறிக்கோள்களுக்கு திருப்புவது எளிதாகிறது. ஏனென்றால், அது நிதி திட்டமிடலைத்தாண்டி, நமக்கு கிடைக்கும் உபரி பணம்.

உதாரணமாக, மாறக்கூடிய வருமானம் உடையவரின் கடந்த 6 மாதங்களுக்கான வருமானம் பின்வருமாறு எனக் கொள்வோம்.

நவம்பர் - ரூபாய். 75,000

டிசம்பர் - ரூபாய். 50,000

ஜனவரி - ரூபாய். 1,00,000

பிப்ரவரி - ரூபாய். 80,000

மார்ச் - ரூபாய். 1,25,000

ஏப்ரல் - ரூபாய். 1,50,000

கடந்த 6 மாதங்களில் மிகவும் குறைவாக அடைந்த வருமானம் ரூபாய். 50,000. அதனை மாதாந்திர வருவாயாகக் கொண்டு, நிதி திட்டமிடல் செய்ய வேண்டும். பூஜ்ஜியத்தை அடிப்படையாக கொண்ட, நிதி திட்டமிடலில் இத்தகைய மாறக்கூடிய மாதாந்திர வருமானத்திற்கு எவ்வாறு நிதி திட்டமிடல் செய்வதென்பதைப் பார்ப்போம். இந்த முறையை அமெரிக்காவின் பிரபல நிதி மேலாண்மை நிபுணரான டேவ் ராம்சே அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பூஜ்ஜிய பட்ஜெட் நிதி திட்டமிடலால் நிம்மதியான வாழ்க்கை!
variable income budgeting

1. வருமானத்தை ரூபாய். 50,000 என குறித்துக்கொள்ள வேண்டும்.

2. செலவுகளை வகைப்படுத்த வேண்டும். பின்வரும் வகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்; உணவு , உடை, இருப்பிடம், வாகனங்கள், பொழுதுபோக்கு, பயன்பாடுகள், குடும்பம், மருத்துவம், கடன், பயணம், சுற்றுலா, காப்பீடு, சுயபராமரிப்பு, பரிசுகள், ஈகை. இவற்றை அத்தியாவசிய செலவுகள், அத்தியாவசியமற்ற செலவுகள் என்று மேலும் வகைப்படுத்த வேண்டும். உணவு, உடை, இருப்பிடம், வாகனங்கள், பயன்பாடுகள், மருத்துவம், ஈகை போன்றவை அத்தியாவசிய செலவுகள். கடன், காப்பீடு போன்றவை அதற்கு அடுத்தபடியான அத்தியாவசிய செலவுகள். சுயபராமரிப்பு, பயணம், சுற்றுலா, பொழுதுபோக்கு, பரிசுகள் போன்றவை அத்தியாவசியமற்ற செலவுகள்.

3. நிதி திட்டமிடலில், அத்தியாவசிய செலவுகளுக்குப் பணம் ஒதுக்கியது போக, மீதமிருந்தால் அடுத்தபடியான அத்தியாவசிய செலவுகளுக்கு ஒதுக்கவேண்டும். அதற்கும் மீதமாகும் பணத்தை அத்தியாவசியமற்ற செலவுகளுக்கு ஒதுக்கவேண்டும். வரவு மற்றும் செலவுக்கான வித்தியாசம் பூஜ்ஜியமாக இருக்கவேண்டும்.

வரவு - ரூபாய். 50,000

உணவு - ரூபாய். 10,000

வீட்டு வாடகை - ரூபாய். 12,000

வாகனங்கள் - ரூபாய். 3,000

பயன்பாடுகள் - ரூபாய். 5,000

கடன்கள் - ரூபாய். 12,000

ஈகை - ரூபாய். 2,000

காப்பீடு - ரூபாய். 3,000

மருத்துவம் - ரூபாய். 3,000

செலவு - ரூபாய். 50,000

வரவு - செலவு = 50,000 - 50,000 = ரூபாய்.0 (பூஜ்ஜியம்)

இவ்வாறு, குறைந்தபட்ச வருமானத்தைக் கொண்டு, பூஜ்ஜியத்தை அடிப்படையாக கொண்ட பட்ஜெட் போடப்படுகிறது.

4. மாத இறுதியில், நிதித் திட்டமிடலிருந்து விலகி செலவுகளைச் செய்திருந்தால், நிதி திட்டமிடலை மாற்றவேண்டும்.

குறைந்தபட்ச வருமானத்தைத்தாண்டி, அதிக வருமானம் வரும்போது, அந்த அதிக வருமானத்தைப் பயன்படுத்தி, கடன்களை அடைக்க முயல வேண்டும். வீட்டுக் கடனைத் தவிர மற்ற கடன்களைக் கடன் பனிப்பந்து முறையில் அடைக்க முயலவேண்டும். கடன் பனிப்பந்து முறையில், குறைந்த பாக்கி முதல் அதிக பாக்கி வரை வரிசைப்படுத்தி, கடன் அடைக்கப்படுகிறது. இரு கடன்களுக்கு ஒரே பாக்கி எனில், அதிகபட்ச வட்டிவிகிதக் கடன் முதலில் அடைக்கப்படுகிறது.

வீட்டுக் கடன் மட்டும் விதி விலக்கு. ஏனென்றால், வீட்டுக்கடனைக் கட்டி முடிப்பதற்கு காலம் அதிகமாகும். அதற்கு அரசாங்கத்தின் வரி விலக்கு உண்டு. வீட்டுக் கடனைத் தவிர மற்ற கடன்களை அடைத்து முடித்தபிறகு, அத்தியாவசியமற்ற செலவுகளான சுற்றுலா, பொழுதுபோக்கு போன்றவற்றிக்கும் பணத்தை ஒதுக்கவேண்டும். அவற்றைத் தாண்டி மீதமிருக்கும் பணத்தை நிதிக் குறிக்கோள்களான 3 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்கான அவசர கால நிதி, வீட்டுக்கடனை சீக்கிரமாக அடைத்தல், குழந்தைகளின் மேல்படிப்பு, ஓய்வு காலம் போன்ற நிதிக் குறிக்கோள்களுக்கு ஒதுக்கத் தொடங்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
பங்குச் சந்தையில் இந்த ஒரு தவற்றை மட்டும் செய்யாதீங்க; வாரன் பஃபெட் கொடுக்கும் எச்சரிக்கை!
variable income budgeting

பூஜ்ஜியத்தை அடிப்படையாக கொண்ட நிதி திட்டமிடல் மட்டுமல்ல, 50/30/20 நிதி திட்டமிடல், காகித உறை நிதி திட்டமிடல் என எந்த ஒரு நிதி திட்டமிடல் மாறக்கூடிய வருமானம் உடையவருக்கு ஒத்துவருமோ அதைக் கடைபிடிக்க வேண்டும். ஆனால், கடந்த காலத்தில் பெற்ற குறைந்தபட்ச வருமானத்தைக் கொண்டு நிதி திட்டமிடல் செய்வதென்பது முக்கியமானது. அது எப்போதும், வரவுகளைத்தாண்டி செலவுகள் இல்லாமல் இருக்க உதவும்.

மாறக்கூடிய வருமானம் உடையவர்களும் நிதி திட்ட மிடலைக் கடைபிடிப்பதன் மூலமே, நிதிக் குறிக்கோள்களை அடையமுடியும்.

logo
Kalki Online
kalkionline.com