

போக்ஸ்வேகன் (Volkswagen) என்பது ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் மலிவு விலை மற்றும் உயர்தர கார் தயாரிப்புகளுக்கு பெயர் பெற்றது. இந்நிறுவனத்தின் Virtus, Taigun, Tiguan மற்றும் Golf GTI போன்ற மாடல்கள் இந்தியாவில் மிகவும் பிரபலம்.
எல்லோரும் ஒரு பெரிய SUV-ஐ விரும்புகிறார்கள். இதுவரை இந்த துறையில் Toyota Fortuner, Skoda Kodiaq, MG Gloster ஆகியவை மக்களின் விருப்பமான கார்களாக இருந்து வருகின்றன. அந்த வரிசையில் இப்போது, போக்ஸ்வேகன் நிறுவனம் மூன்று வரிசை SUV-யுடன் மட்டுமல்லாமல், 7 இருக்கைகள் கொண்ட புதிய டெய்ரான் ஆர் லைன் பிரீமியம் எஸ்.யூ.வி. மாடல் காரை இந்தியா சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
7 பேர் கொண்ட குடும்பத்தினர் வெளியூர் செல்பர்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் இந்த டெய்ரான் ஆர் லைன் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உட்புற உயர்தர வடிவமைப்பு உண்மையிலேயே நன்கு கட்டமைக்கப்பட்ட மற்றும் ஆடம்பரமான இடமாகத் தெரிகிறது. பயணிகளின் வசதியான பயணத்திற்கு ஏற்ப காரில் பல புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டிகுவான் ஆர்-லைனைப் போலவே, இது வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் ஸ்போர்ட்டியர் போல் ஒரு கூர்மையான தோற்றத்தை அளிக்கிறது.
தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் போக்ஸ்வாகனின் 5 சீட்டர் பிரீமியம் எஸ்.யூ.வி. மாடலான டிகுவான் ஆர் லைன் மாடலில் இருக்கும் அதே 2.0 லிட்டர், 4-சிலிண்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜினே புதிய டெய்ரான் ஆர் லைன் மாடலிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 7-வேக இரட்டை-கிளட்ச் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினானது, 204 எச்.பி. பவர் மற்றும் 320 என்.எம். டார்க்கை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளதால் விரைவான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது.
டெய்ரான் ஆர்-லைன் காரில் பொருட்களை வைப்பதற்கு போதுமான சேமிப்பு வசதி மற்றும் அன்றாட ஓட்டுநர் தேவைகளை ஆதரிக்கும் உட்புற வடிவமைப்புடன், நீளமானது மட்டுமல்ல, அகலமாகவும் உயரமாகவும் ஒட்டுமொத்த கேபின் இடத்தை மேம்படுத்துகிறது. மேலும் காரை ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் வசதியான தொழில்நுட்பங்களுடன் ஒரு கம்பீரமான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. செயல்பாடு மற்றும் ஸ்டைலின் நல்ல கலவை, ஏராளமான தொழில்நுட்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டிலும் கேபின் முழுவதும் மென்மையான-தொடு பொருட்கள் உள்ளன, அவை பிரீமியம் உணர்வைத் தருகின்றன.
புதிய டெய்ரான் எஸ்.யூ.வி., டிகுவான் ஆர் லைனில் இருந்து வேறுபடுத்திக்காட்டும் வகையில் வித்தியாசமான வடிவமைப்பையே கொண்டுள்ளது. ஸ்போர்ட்டியான பம்பர்கள் மற்றும் 19 அங்குல அலாய் வீல்கள் மற்றும் பக்கவாட்டு ஸ்கர்ட்டுகளுடன் அதை இன்னும் சிறப்பாகக் காட்டுகிறது. முகப்பு விளக்கு மற்றும் பின்பக்க விளக்குகளும் தனித்துவமான டிசைனில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
டிகுவான் மாடலின் உட்புறத்தில் இருந்து டெய்ரான் மாடலின் உட்புறம் கொஞ்சம் மட்டும் வேறுபட்டிருக்கிறது. இன்போடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு பின்புறம் கொடுக்கப்பட்டிருக்கும் சில்வர் டிரிம்மானது டேஷ்போர்டின் அகலத்திற்கு நீள்கிறது. தொழில்நுட்ப முன்னணியில், டிரைவருக்கு 10.25-இன்ச் டிஜிட்டல் திரை உள்ளது, மேலும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு 15-இன்ச் பெரிய திரை உள்ளது. இரண்டு சார்ஜிங் பேட்கள், சென்டர் கன்சோலில் இரட்டை கப்ஹோல்டர்கள் மற்றும் ஆர்ம்ரெஸ்டின் கீழ் கூடுதல் சேமிப்பு இடம் ஆகியவற்றுடன் வயர்லெஸ் சார்ஜிங்கையும் நீங்கள் பெறுவீர்கள்.
இதுதவிர, மூன்று ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீல், 30 நிறங்கள் கொண்ட கஸ்டமைசபிள் ஆம்பியன்ட் லைட்டிங், சுற்றுப்புற விளக்குகள் மற்றும் மேட்ரிக்ஸ் எல்இடி லைட்டிங் தொழில்நுட்பம், 700W 11 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் சவுண்டு சிஸ்டம், மெமரி, வென்டிலேஷன் மற்றும் மசாஜ் செய்யும் வசதிகளுடன் கூடிய முன்பக்க இருக்கைகள், பனோரமிக் சன்ரூப், பவர்டு சவுண்ட் சிஸ்டம், 3 ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பிற்கும் எந்த வகையிலும் குறைவில்லாத கார் மாடலாகவே வோக்ஸ்வாகன் டெய்ரான் ஆர்-லைன் இருக்கிறது. இந்த மாடலில் 9 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் மற்றும் ஹில்டிஸண்டு கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், லெவல் 2 ADAS அம்சங்கள் ஆகிய பாதுகாப்பு வசதிகளை கொடுத்திருக்கிறது.
கடந்தாண்டு கடுமையான யூரோ என்.கேப்(NCAP) பாதுகாப்பு தரச்சோதனையில் இந்த கார் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. இது விபத்து சோதனைகளில் வலுவான செயல்திறனை பிரதிபலிக்கிறது. மேலும் இந்த மதிப்பீடு, விபத்து மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு SUV உயர் மட்ட பாதுகாப்பை வழங்குகிறது என்பதைக் உறுதிபடுத்துகிறது.
புதிய டெய்ரான் ஆர்-லைன் 7 வண்ணத் தேர்வுகளில் வருகிறது. டால்பின் கிரே மெட்டாலிக், ஆய்ஸ்டர் சில்வர் மெட்டாலிக், சிப்ரஷன்-கிரீன் மெட்டாலிக், அல்ட்ரா வயலட் மெட்டாலிக், நைட்ஷேட் ப்ளூ மெட்டாலிக், கிரெனடில்லா பிளாக் மெட்டாலிக் மற்றும் ஓரிக்ஸ் ஒயிட் மதர்-ஆஃப்-பேர்ல் எஃபெக்ட்.
புதிய 7-சீட்டர் டெய்ரான் ஆர்-லைன் SUV ரூ.48 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.