

‘கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார்’ என்பது தமிழில் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் அனுபவப் பழமொழி. சாமானிய, ஏழை மற்றும் கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்குத் தங்கள் மகள் / மகள்களுக்குத் திருமணம் செய்து வைப்பதும், சொந்த வீடு கட்டுவதும் வாழ்வின் மிகப்பெரிய லட்சியங்கள்.
பல ஆண்டுக்காலக் கடின உழைப்பில் சிறுகச் சிறுகச் சேமித்தும், சில சமயங்களில் கடன் வாங்கியும், பல நெருக்கடிகளுக்கு நடுவேதான் இந்தச் சுப நிகழ்வுகளை அவர்களால் நடத்த முடிகிறது. பணப் பற்றாக்குறையால் பல வீடுகளில் திருமணங்கள் தள்ளிப்போவதும், நடத்த இயலாமல் தவிப்பதும் நம் சமூகத்தின் யதார்த்தம்.
இத்தகைய சுமை மிகுந்த தருணங்களில், குடும்பத்தின் பாரத்தைச் சற்றே குறைப்பதற்காக உறவினர்களும் நண்பர்களும் தங்களால் இயன்ற சிறு தொகையை அன்பளிப்பாக வழங்கும் உன்னதமான சமூக ஏற்பாடுதான் ‘மொய்’ எழுதுதல். ஆனால், நெருக்கடியில் உதவுவதற்காக அன்போடு வழங்கப்படும் இந்த மொய்ப் பணத்திற்கும் நகைகளுக்கும் சில சந்தர்ப்பங்களில் (மொய் வரி) வருமான வரி உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?
“என்னது,... மொய்ப் பணத்துக்கும் நகைகளுக்கும் வரியா?” என்ற அதிர்ச்சி பலருக்கும் ஏற்படும். “இது என்ன நியாயம்?” என்ற கேள்வியும் எழும்.
சட்டம் இது குறித்து என்ன சொல்கிறது? – பார்ப்போம்.
திருமண மொய்க்கு வருமான வரி உண்டா?
சாமானிய மக்களின் உணர்வுகளையும் சமூக நடைமுறையையும் கருத்தில் கொண்டே இந்திய வருமான வரிச் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டம் பிரிவு 56(2)(x)-ன் கீழ், திருமணத்தின் போது மணமகன் அல்லது மணமகளுக்குக் கிடைக்கும் மொய்ப் பணம், தங்க நகைகள், வீடு, நிலம் அல்லது எந்தவொரு பரிசுப் பொருளுக்கும் முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருமண அன்பளிப்பிற்கு உச்ச வரம்பு கிடையாது. அது ₹1 லட்சமாக இருந்தாலும் சரி, ₹50 லட்சமாக இருந்தாலும் சரி, ஒரு ரூபாய்கூட வரி கட்டத் தேவையில்லை.
நெருங்கிய உறவினர்கள் மட்டுமல்லாமல், நண்பர்கள், சக ஊழியர்கள், அக்கம்பக்கத்தினர், பழக்கமானவர்கள் என யார் வழங்கினாலும் திருமண மொய்க்கு முழு வரி விலக்கு உண்டு.
இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய நுணுக்கம் உள்ளது. இந்த வரி விலக்கு திருமணம் செய்துகொள்ளும் மணமகன் மற்றும் மணமகளுக்கு மட்டுமே பொருந்தும். திருமணத்தை நடத்தும் பெற்றோரின் பெயரில் நேரடியாகப் பெறப்படும் அன்பளிப்புகளுக்கு இந்தச் சிறப்பு விலக்குப் பொருந்தாது.
கிரகப்பிரவேசம், காதுகுத்து, பூப்பு நன்னீராட்டு விழாக்களுக்கு என்ன விதி?
திருமணத்தைத் தவிர்த்து காதுகுத்து, பூப்பு நன்னீராட்டு விழா, பிறந்தநாள், புதுமனைப் புகுவிழா (கிரகப்பிரவேசம்) போன்ற இதர இல்ல வைபவங்களில் பெறப்படும் மொய் மற்றும் பரிசுகளுக்குத் திருமணத்தைப் போன்ற முழு வரி விலக்கு கிடையாது.
இங்கேதான் ₹50,000 விதி நடைமுறைக்கு வருகிறது.
நெருங்கிய உறவினர்கள்: பெற்றோர், உடன்பிறந்தவர்கள், வாழ்க்கைத் துணை, தாத்தா-பாட்டி, மாமனார்-மாமியார், பெற்றோரின் உடன்பிறந்தவர்கள் (அத்தை, மாமா, சித்தப்பா, பெரியப்பா) ஆகியோர் வழங்கும் மொய் மற்றும் பரிசுகளுக்கு எந்த விழாவாக இருந்தாலும் எவ்வளவு தொகைக்கும் வரி கிடையாது.
நண்பர்கள் மற்றும் இதர நபர்கள்: மேலே குறிப்பிட்ட நெருங்கிய உறவினர் பட்டியலில் வராத நண்பர்கள், அக்கம்பக்கத்தினர், தூரத்து உறவினர்கள் (உதாரணமாக: ஒன்றுவிட்ட சகோதரர்கள்/Cousins) ஆகியோரிடமிருந்து ஒரு நிதியாண்டில் பெறப்படும் மொத்த அன்பளிப்புகளின் மதிப்பு ₹50,000 வரை இருந்தால் வரி கட்டத் தேவையில்லை; எங்கும் கணக்குக் காட்டவும் தேவையில்லை.
₹50,000 தாண்டினால்: ஒரு நிதியாண்டில் நண்பர்கள் மற்றும் இதர நபர்களிடமிருந்து பெறப்படும் மொத்த மொய் ₹50,000-க்கு மேல் தாண்டினால் கூடுதல் தொகைக்கு மட்டுமல்லாமல் முழுத் தொகைக்கும் வருமான வரி கட்ட வேண்டும். உதாரணமாக ₹60,000 கிடைத்தால், கூடுதலாக உள்ள ₹10,000-க்கு மட்டுமல்லாமல், முழுத் தொகையான ₹60,000-க்கும் வருமான வரி கட்டியாக வேண்டும்.
வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகளுக்கு வரி உண்டா?
வருமான வரிச்சட்டம் எல்லாப் பொருட்களையும் பரிசாகக் கணக்கிடுவதில்லை. குறிப்பிட்ட சில அசையும் மற்றும் அசையாச் சொத்துகளை மட்டுமே வரி வரம்பிற்குள் கொண்டு வருகிறது.
எவ்வளவு சதவீதம் வரி?
வரிக்கு உட்பட்ட அன்பளிப்புத்தொகை, சம்பந்தப் பட்டவரின் ஆண்டு வருமானத்துடன் ‘இதர வழிகளில் கிடைத்த வருமானம்’ (Income from Other Sources) என்ற பிரிவில் சேர்க்கப்படும். அதன்பின், அவரது வழக்கமான வருமான வரி அடுக்கிற்கு (Tax Slab — 5%, 20% அல்லது 30%) ஏற்ப வரி செலுத்தவேண்டும். ஆண்டு மொத்த வருமானம் அடிப்படை வரி விலக்கு வரம்பிற்குள் இருந்தால் வரி கட்டத் தேவையில்லை.
எங்கே, எப்படி வரி கட்டுவது?
ஆண்டு வருமான வரித் தாக்கல் (ITR) செய்யும்போது, வரிக்கு உட்பட்ட பரிசுகளை ‘Income from Other Sources’ பிரிவிலும், திருமணத்தில் கிடைத்த பெருமளவு வரி விலக்குப் பெற்ற மொய் மற்றும் நகைகளை ‘Exempt Income’ (Schedule EI) பிரிவிலும் குறிப்பிடுவது பாதுகாப்பானது. வரி செலுத்த வேண்டியிருப்பின், வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (e-Pay Tax) சுயமதிப்பீட்டு வரியாக (Self-Assessment Tax) ஆன்லைன் மூலமாகவே எளிதாகச் செலுத்தலாம்.
ஆவணப் பாதுகாப்பு: திருமண அழைப்பிதழ், மொய் எழுதியவர்களின் பெயர் மற்றும் தொகை அடங்கிய மொய் நோட்டு (Gift Register), வங்கியில் பணம்செலுத்திய ரசீதுகள் ஆகியவற்றைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் வங்கிக் கணக்கில் பெரிய தொகை டெபாசிட் செய்யப் பட்டதற்கான விளக்கத்தை வருமான வரித்துறை கேட்டால், இந்த ஆவணங்களைக் காட்டி அது திருமண மொய் என்பதை நிரூபிக்கலாம்.
வரி கட்டாமலும் தெரிவிக்காமலும் விட்டால் என்ன நடக்கும்?
திருமண மொய்க்கு வரி இல்லை என்பதால் சாமானியர்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், இதர நிகழ்வுகளில் ₹50,000-க்கு மேல் நண்பர்களிடமிருந்து பெற்ற அன்பளிப்பை மறைத்தாலோ, அல்லது பெருமளவு ரொக்கப் பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு அதற்குரிய ஆதாரங்களை வைத்திருக்காவிட்டாலோ, வருமான வரித் துறை பிரிவு 68 / 69A ஆகியவற்றின் கீழ் அதனை ‘கணக்கில் காட்டப்படாத வருமானம்’ (Unexplained Income) எனக் கருதி, 60% வரி, 25% சர்சார்ஜ் மற்றும் 4% கல்வி செஸ் உட்பட மொத்தம் 78% வரி; மேலும் பிரிவு 271AAC-ன் கீழ் 10% அபராதம் விதிக்கப்படலாம்.
ஆகவே, குடும்ப விழாக்களில் அன்போடு வழங்கப்படும் மொய்ப் பணத்தையும் நகைகளையும் மேற்கண்ட விபரங்களின்படி தேவைப்பட்டால் முறையாகப் பதிவு செய்து வங்கியில் வரவு வைப்பதே சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கும் எளிய வழி. மற்றபடி பொதுவாக சாமானியர்கள் இது குறித்து அச்சமோ கவலையோ கொள்ளத் தேவையில்லை.