

இன்றைய வேகமான சூழலில், தேநீர்க் கடையிலிருந்து பலசரக்குக் கடை வரை எல்லாவற்றிற்கும் திறன்பேசி (Smartphone) வழியே UPI முறையில் பணம் செலுத்துவது நமது அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. இருப்பினும், அவசரத் தேவைகளுக்கும், மருத்துவச் செலவுகளுக்கும், பயணங்களுக்கும் கையில் ரொக்கப் பணத்தின் தேவை இருக்கும்போது நாம் உடனடியாகத் தஞ்சம் அடைவது ஏடிஎம் (ATM) மையங்களைத்தான்.
மாதக் கடைசி நெருக்கடி, பிள்ளைகளின் கல்விக்கட்டணம் அல்லது எதிர்பாராத மருத்துவச் செலவுக்காக மனதிற்குள் ஆயிரம் எண்ணங்களோடு ஏடிஎம் மையத்திற்குள் நுழைகிறோம். கார்டைச் செருகி, தொகையையும் PIN எண்ணையும் உள்ளீடு செய்கிறோம். இயந்திரத்திற்குள்ளிருந்து பணம் எண்ணப்படும் சத்தம் கேட்கிறது. ஆனால், பணத்தைத் தரும் கதவு திறக்காமலேயே இயந்திரம் அமைதியாகிவிடுகிறது!
அடுத்த சில நொடிகளில் அலைபேசியில் குறுஞ்செய்தி (SMS) வருகிறது: "உங்கள் கணக்கிலிருந்து (ஏடிஎம் பணம்) பணம் எடுக்கப்பட்டுவிட்டது!"
அது நிச்சயமாக நம்மை அதிர்ச்சியடைய வைக்கும். கையில் பணமும் இல்லை; கணக்கிலும் தொகை கழிந்துவிட்டது எனும் சூழலில், அந்த இடத்தில் ஏற்படும் பதற்றமும் வேதனையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. அந்த சமயத்தில் பணம் கிடைக்காமல் போவது சங்கடத்துக்குரியது; சில சமயம் அதனால் பல வித கஷ்டங்களும் ஏற்படலாம்.
அது ஒருபுறம் இருக்க, இழந்த பணம் திரும்பக் கிடைக்குமா என்ற கவலையும் பதற்றமும்தான் பெரும்பாலானவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
இது குறித்துக் கவலையோ பதற்றமோ அடைய வேண்டியதில்லை. பணம் நிச்சயமாகத் திரும்பக் கிடைக்கும். அதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய சட்டப்பூர்வமான வழிமுறைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் (RBI) விதிமுறைகளைக் கடைபிடித்தால் போதும்.
ஏடிஎம் மையத்திலேயே செய்ய வேண்டியவை என்ன?
பணம் வராமல் கணக்கில் மட்டும் தொகை கழிந்து விட்டால், முதற்கட்டமாக ஏடிஎம் மையத்திலேயே சில விஷயங்களைக் கவனிக்கவேண்டும்:
1. ஒப்புகைச் சீட்டு (Transaction Slip): பணம் வரவில்லை என்றாலும் இயந்திரத்திலிருந்து 'Transaction Failed' அல்லது 'Declined' என்ற சீட்டு வருகிறதா என்று பார்க்கவேண்டும். அதில் பரிவர்த்தனை எண் (Transaction ID), ஏடிஎம் அடையாளம் (ATM ID), தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
2. திரை நிழற்படம் (Photo Proof): சீட்டு வரவில்லை என்றால், ஏடிஎம் திரையில் தோன்றும் நிலையைத் திறன்பேசியில் படம் எடுத்துக்கொள்ளலாம். மேலும், அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தியைப் (SMS) பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
3. ஏடிஎம் மையத்தில் புகார் அளிக்க முடியுமா?: ஏடிஎம் இயந்திரத்திலேயே நேரடியாகப் புகார் பதிவு செய்யும் வசதிகள் எதுவும் இருக்காது. ஆனால், ஒவ்வொரு ஏடிஎம் மையத்தின் சுவரிலும் வங்கியின் 24 மணி நேர இலவச வாடிக்கையாளர் சேவை எண் (Toll-free Number) மற்றும் அந்த ஏடிஎம்-ன் அடையாள எண் (ATM ID) எழுதப்பட்டிருக்கும். அங்கேயே நின்று வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு புகாரைப் பதிவுசெய்து, புகார் குறிப்பு எண்ணைப் (Ticket / Reference Number) பெற்றுக்கொள்ளலாம்.
வங்கியில் புகார் செய்வது எப்படி? என்னென்ன தேவை?
ஒருவேளை வாடிக்கையாளர் சேவை மையத்தில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், கீழ்க்கண்ட வழிகளில் புகார் தெரிவிக்கலாம்:
· நெட் பேங்கிங் / மொபைல் ஆப்: கணக்கு வைத்துள்ள வங்கியின் செயலி (Mobile Banking App) அல்லது இணைய வங்கி (Net Banking) பக்கத்திற்குச் சென்று 'Grievance / Dispute Transaction' எனும் பிரிவில் ஆன்லைன் வழியிலேயே சுலபமாகப் புகார் பதிவு செய்யலாம்.
· நேரடி வங்கிக் கிளை (Branch Visit): நெட் பேங்கிங் வசதி இல்லாதவர்கள், தங்கள் வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்று 'Atm Failed Transaction Form' பூர்த்தி செய்து தரலாம்.
தேவையான விவரங்கள்: உங்களின் ஏடிஎம் கார்டு எண், பரிவர்த்தனை நடந்த தேதி, நேரம், ஏடிஎம் அமைந்திருந்த இடம், எடுக்க முயன்ற தொகை மற்றும் அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி / ஒப்புகைச் சீட்டின் நகல்.
புகார் அளிக்கக் காலவரையறை உள்ளதா? புகார் செய்யாவிட்டால் பணம் வருமா?
தொழில்நுட்பக் கோளாறால் பணம் வராத பட்சத்தில், பரிவர்த்தனை நடந்த நாளிலிருந்து அதிகபட்சமாக T+5 நாட்களுக்குள் வங்கி அத்தொகையைத் திரும்பச் செலுத்த வேண்டும்.
இருப்பினும், வங்கி அமைப்பில் தாமதம் ஏற்பட்டால், நாமாகப் புகார் அளிக்கவேண்டியது அவசியமாகிறது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, இத்தகைய பிழையான பரிவர்த்தனைகள் நடந்த நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் (30 Days) வாடிக்கையாளர் வங்கியிடம் புகார் தெரிவிக்கவேண்டும். எனினும் அவ்வளவு நாள் இருக்கிறதே என்று தாமதிக்காமல் கூடிய விரைவில் புகார் செய்வது நல்லது.
எத்தனை நாட்களில் பணம் திரும்பக் கிடைக்கும்?
இவ்விஷயத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நுகர்வோருக்குச் சாதகமான மிகத் தெளிவான, கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. ஏடிஎம்-ல் பணம் வராமல் கணக்கில் கழிந்தால், பரிவர்த்தனை நடந்த நாளிலிருந்து அதிகபட்சமாக T+5 நாட்களுக்குள் வங்கி வாடிக்கையாளரின் கணக்கில் அப்பணத்தைத் திரும்பச் செலுத்த (Credit) வேண்டும்.
தாமதமானால் இழப்பீடு உண்டா?
ஒருவேளை T+5 நாட்களைத் தாண்டியும் வங்கி அப்பணத்தைத் திரும்பச் செலுத்தவில்லை என்றால், அதன் பிறகு பணம் கணக்கில் சேரும் நாள் வரை, தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ₹100 வீதம் சம்பந்தப்பட்ட வங்கி வாடிக்கையாளருக்கு இழப்பீடாக வழங்கவேண்டும். இதற்காக வாடிக்கையாளர் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை; வங்கி தானாகவே இந்த அபராதத் தொகையை வாடிக்கையாளரின் கணக்கில் சேர்க்க வேண்டும்.
பயனர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்
1. கூடுதல் நேரம் காத்திருத்தல்: பணம் வராவிட்டாலும், ஏடிஎம் திரையில் பரிவர்த்தனை முற்றிலும் நிறைவடைந்து (Session Ended), இயல்புநிலைக்கு வரும் வரை இயந்திரத்தின் அருகிலேயே காத்திருக்க வேண்டும். அவசரத்தில் பாதியிலேயே வெளியேறக் கூடாது.
2. பிற ஏடிஎம் மையங்கள்: நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் அல்லாமல், பிற வங்கியின் ஏடிஎம் மையத்தில் இது நடந்தாலும், நீங்கள் உங்களின் சொந்த வங்கிக் கிளையில்தான் புகார் அளிக்கவேண்டும்.
3. வங்கி மேல் நடவடிக்கை: 30 நாட்கள் ஆகியும் வங்கி முறையான பதில் அளிக்கவில்லை என்றோ அல்லது இழப்பீடு தர மறுத்தாலோ, ரிசர்வ் வங்கியின் இணைய வழியிலான வங்கி குறைதீர்ப்பாயத்தில் (RBI Banking Ombudsman - cms.rbi.org.in) புகார் அளித்து முழுமையான தீர்வு பெற முடியும்.
தொழில்நுட்பக் கோளாறுகள் என்பது எதிர்பாராமல் நடப்பவைதான். ஆனால், அதற்கான உரிமைகளையும், வங்கி வழங்கும் இழப்பீட்டு விதிகளையும் தெளிவாக அறிந்து வைத்திருந்தால், பதற்றமின்றி நமது பணத்தைப் பாதுகாப்பாக மீட்டெடுக்க முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: