நம்மில் பலர் 750-க்கு மேல் சிபில் ஸ்கோர் (Cibil Score) இருந்தால் எந்த வங்கியிலும் கண்ணை மூடிக்கொண்டு கடன் கிடைக்கும் என்று பலரும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் நடைமுறை உண்மையோ முற்றிலும் வேறு. உங்கள் ஸ்கோர் சிறப்பாக இருந்தும் கூட வங்கிகள் உங்கள் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க முடியும். சிபில் ஸ்கோர் என்பது நீங்கள் கடந்த காலத்தில் எவ்வளவு நேர்மையாக இருந்தீர்கள் என்பதை மட்டுமே காட்டுகிறது. வங்கிகள் உங்கள் நிகழ்கால நிதி நிலைமையைத்தான் முக்கியமாகப் பார்க்கின்றன.
ஒரு வங்கி உங்களுக்குக் கடன் கொடுப்பதற்கு முன் உங்களின் கடன்-வருமான விகிதத்தை (Debt-to-Income Ratio) மிக உன்னிப்பாகக் கவனிக்கும். அதாவது உங்களின் மாத வருமானத்தில் பாதிக்கும் மேல் ஏற்கனவே உள்ள மற்ற கடன்களின் EMI கட்டவே செலவாகிறது என்றால் புதிய கடனை நீங்கள் எப்படித் திருப்பிச் செலுத்துவீர்கள் என்ற பெரிய சந்தேகம் அவர்களுக்கு எழும். இதனால் தான் உங்களின் சிபில் ஸ்கோர் மிகச் சிறப்பாக இருந்தாலும் கூட உங்கள் அப்ளிகேஷன் சட்டென நிராகரிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு மற்றும் நிரந்தரமற்ற வருமானம்!
உங்களுக்கு மாதம் தோறும் நிரந்தரமான வருமானம் வருகிறதா என்பதை வங்கிகள் முக்கிய அளவுகோலாகப் பார்க்கின்றன. ஒருவேளை உங்கள் வருமானம் வங்கியின் அடிப்படை வரம்பை விடக் குறைவாக இருந்தாலோ அல்லது நீங்கள் ஒரு சுயதொழில் செய்பவராக இருந்து வருமானம் மாதம் மாதம் சீராக இல்லாமலோ இருந்தால் உங்களுக்கு நிச்சயமாகக் கடன் கிடைக்காது. அடிக்கடி வேலை மாற்றுபவர்களையும் வங்கிகள் ஆபத்தான வாடிக்கையாளர்களாகவே கருதுகின்றன.
அடிக்கடி கடன் தேடும் பழக்கம்!
பண நெருக்கடி ஏற்படும்போது பலரும் ஒரே நேரத்தில் பல வங்கிகள் அல்லது லோன் ஆப்-களில் அவசரமாக விண்ணப்பிப்பார்கள். இதை ஹார்ட் இன்கொயரி (Hard Inquiries) என்பார்கள். இப்படிச் செய்தால் நீங்கள் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறீர்கள் என்பதை வங்கிகள் எளிதாகப் புரிந்துகொள்ளும். மேலும் பாதுகாப்பற்ற பர்சனல் லோன், கிரெடிட் கார்டுகளை மட்டுமே அதிகம் பயன்படுத்தி இருந்தாலும் வங்கி உங்களுக்குப் புதிய கடனை வழங்க மிகவும் தயங்கும்.
அனைத்து வங்கிகளுக்கும் தமக்கென சொந்தமாக சில கடுமையான கொள்கைகள் கட்டாயம் இருக்கும். உங்கள் வயது, நீங்கள் வசிக்கும் பகுதி அல்லது நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தன்மை என ஏதாவது ஒன்று அந்த வங்கியின் கொள்கைக்கு எதிராக இருந்தாலும் உங்களின் சிபில் ஸ்கோர் 750 அல்லது 800 இருந்தாலும் கூட கடன் நிராகரிக்கப்படுவது உறுதி.
எனவே சிபில் ஸ்கோர் மட்டுமே தகுதி என்று நம்பாமல் உங்களின் ஒட்டுமொத்த நிதி நிர்வாகத்தையும் எப்போதுமே சீராகவும் மிகவும் சரியாகவும் வைத்திருப்பது உங்களை இதுபோன்ற சிக்கல்களில் இருந்து காக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: