Apex: அபெக்ஸ் திரைப்பட விமர்சனம்!

சைக்கோ கொலைகாரனுக்கும் நாயகிக்கும் இடையில் நடைபெறும் வாழ்வா சாவா ஆட்டம்!
Apex
Apex
Updated on

காதலனுடன் மலையேறும் சாகசத்தில் ஈடுபடும் நாயகி. ஒரு கடினமான ஏற்றத்தில் பனிச்சரிவு காரணமாகக் காதலனை இழக்கிறார். தன்னுடைய பிடிவாதத்தால் தான் அவன் இறந்தான் என்ற உணர்வு அவளை அழுத்துகிறது. அதிலிருந்து விடுபடச் சில மாதங்கள் கழிந்து மீண்டும் ஒரு தனிப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு ஒரு சைக்கோ கொலைகாரனிடம் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து தப்பினாரா என்பது தான் அபெக்ஸ் படத்தின் கதை.

இது போன்ற கதைகள் ஏராளம் வந்திருக்கின்றன. சர்வைவல் திரில்லர் வகையைச் சேர்ந்த இந்தக் கதையில் மலையேற்றமும் ஒரு களமாக அமைந்திருப்பது தான் சிறப்பு. படத்தின் முதல் காட்சியில் இருந்தே ஒருவிதமான பரபரப்புக்குத் தள்ளி விடுகிறார்கள். நாயகியும் அவர் காதலனும் படுத்திருக்கும் அந்த டெண்ட்டும் அதைப் படம் பிடித்த விதமும் அற்புதம். சாகசம் என்ற பெயரில் உயிரைப் பணயம் வைத்து விளையாடுபவர்கள் உண்டு என்பதை ஆங்கிலப் படங்களில் தொடர்ந்து பார்க்கிறோம்.

மிகச் சாதாரணமாக அறிமுகமாகும் பாத்திரம் ஒரு கட்டத்துக்கு மேல் வில்லத்தனத்தின் உச்சமாக மாறுகிறது. காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் நாயகியை வில்லன் கொல்லத் துரத்தத் தொடங்கியதும் படத்தின் பரபரப்பு கூடுகிறது. அந்த வனப் பிரதேசமும் காட்டாறுகளும் அருவிகளும் குகைகளும் மலைகளும் அதற்கு வேகம் கூட்டுகின்றன. ஒரு கட்டத்தில் வில்லனின் உண்மையான முகம் தெரிய வந்ததும் இன்னும் திகில் கூடுகிறது நாயகிக்கு.

நாயகியாக சார்லிஸ் தெரான், வில்லனாக டாரன் ஏகார்டன். சிலிர்க்க வைக்கும் சிரிப்புடன் நாயகியை வெறி கொண்டு துரத்தும் நேரங்களில் பதைபதைக்க வைக்கிறார். கடைசி வரை நாயகியைத் தப்பிக்க விடாமல் கொல்லவும் முடியாமல் இருக்கும் நேரங்களில் அவர் நடிப்பு நன்று. சார்லிஸ் தெரானும் கச்சிதம். அவருடைய உடல்வாகு அந்தப் பாத்திரத்துக்கு அற்புதமாகப் பொருந்தி இருக்கிறது. காட்டாற்றில் படகில் அவர் பயணம் செய்யும் வேகம் அட்டகாசமாக படமாக்கப் பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்: மே 1-ல் ரீ-ரிலீஸ் ஆகும் பில்லா!
Apex

ஒளிப்பதிவும், தொகுப்பும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. மலையேற்றக் காட்சிகளில் கிராபிக்ஸ் பிசிறடிக்காமல் இயைந்து வந்திருக்கிறது. பின்னணி இசையும் படத்தின் டென்ஷன் குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இரண்டே பாத்திரங்கள், எதிர்பார்த்தபடி நகரும் திரைக்கதை, பெரிய திருப்பங்கள் இல்லாத முடிவு என இது போன்ற ஜானர் படங்களுக்கே உண்டான டெம்ப்ளேட் தான் மைனஸ். வில்லனின் பின்னணியைச் சரியாக விளக்காததும் ஒரு குறை.

பல்டாசார் கோர்மாகுர் இயக்கத்தில் உருவான இந்தப் படம் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் சார்லிஸ் தெரானும் ஒருவர்.

ஒரு வார இறுதியில் பொழுது போகவில்லையென்றால் அமர்ந்து பார்த்து ரசிக்கத் தக்க ஒரு படம் தான் அபெக்ஸ் (Apex).

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com