

அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி அவரது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக , பெரு வெற்றி பெற்ற அவரது திரைப்படமான பில்லா மறு வெளியீடு ஆகிறது. 2007 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பில்லா திரைப்படம் வெளியாகி சர்வதேச அளவில் 25 கோடி வசூலித்தது. அன்றைய காலகட்டத்தில் இந்த வசூல் பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது.
1978 ஆம் ஆண்டு சலீம்– ஜாவித் எழுதிய திரைக்கதையில் அமிதாப்பச்சன் நடிப்பில் 'டான்' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய பான் இந்தியா பிளாக்பாஸ்டர் வெற்றியை பெற்றது. அதன் பின்னர் அந்த திரைப்படத்தை இந்தியாவில் பல மொழிகளில் ரீமேக் செய்து வெளியிட்டனர். இந்த திரைப்படம் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் 'பில்லா' என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
2006 ஆம் ஆண்டு 'டான்' திரைப்படம் ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது."டான் - தி சேஸ் பிகின்ஸ் அகைன்" என்ற பெயரில் வெளியான அந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டது. அதனால் மற்ற மாநிலங்களிலும் டான் படத்தின் மாநில மொழி பதிப்புகள் மீண்டும் புதிய நடிகர்களை வைத்து ரீமேக் செய்து வெளியிடப்பட்டது. அதேபோல் தமிழிலும் ரஜினி நடித்த பில்லா திரைப்படம் அஜித் நடிப்பில் வெளியாகிய நல்ல வசூலை குவித்தது.
இந்த திரைப்படத்தில் அஜித் ,பிரபு , நயன்தாரா , ரகுமான் , நமீதா , சந்தானம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் மலேசியா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்றது. இந்த திரைப்படம் நீண்ட காலம் வெற்றிப் படம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த அஜித்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
பில்லா படத்தில் அஜித் மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் தோன்றியிருந்தார். அந்த திரைப்படத்தில் அஜித்தின் உடைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அஜித்திற்காக பிரத்யேகமாக தீம் மியூசிக் இந்த திரைப்படத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பெரிய அளவில் பேசப்பட்டது. படத்தின் ஒளிப்பதிவு அதன் பிரம்மாண்டமான கட்சிகளுக்கு பக்கபலமாக இருந்தது.
தற்போது தமிழ் சினிமாவில் பழைய திரைப்படங்களை மறு வெளியீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. தற்போதைய தமிழ் சினிமாவில் ஜனரஞ்சகமான திரைப்படங்கள் மிகவும் அரிதாகிவிட்டதால் , பழைய திரைப்படங்கள் மறு வெளியீட்டில் நல்ல வசூலை குவிக்கின்றன. ரஜினியின் படையப்பா , விஜயின் கில்லி போன்ற திரைப்படங்கள் மறு வெளியீட்டில் நல்ல வசூலை குவித்துள்ளன.
மே 1ம் தேதி அஜித் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் பில்லாவை அன்று ரீ ரிலீஸ் செய்கிறது. இது அஜித் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. இன்றைய நவீன காலகட்டத்திற்கு ஏற்ப படத்தின் காட்சிகள் தற்போது மெருகேற்றப்பட்டுள்ளன. அதிக தெரிவு திறனுடன் 7.1 டால்பி டிஜிட்டல் ஒலி அமைப்பு தரத்துடன் பில்லா திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்னோட்டமாக நேற்று மாலை பில்லா திரைப்படத்தில் டிரெய்லர் காட்சி வெளியானது.