Review 'பிருந்தா' - சிரமப்படுகிறார் திரிஷா! பின்ன, அவரை சண்டை எல்லாம் போடச் சொன்னால்...?

Brinda Series Review
Brinda Series Review
Published on

பக்திக்கும் மூட நம்பிக்கைக்கும் நூலளவு தான் வித்தியாசம். அதில் கொஞ்சம் ஏறினாலும் குறைந்தாலும் பலருக்கும் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது என்பதை சுற்றி வளைத்துச் சொல்லியிருக்கும் ஒரு சீரிஸ் தான் பிருந்தா. 

திரிஷா நடிப்பில் ஒரு தெலுங்கு வெப் தொடராக வந்திருக்கும் பிருந்தா இதைக் கொலையும், திகிலுமாகச் சொல்கிறது. தொண்ணூறுகளில் ஒரு மலை கிராமத்தில் கொடிய நோய் ஒன்று ஆட்டிப் படைக்கிறது. அதற்குத் தீர்வாக ஒரு சிறு பெண்ணைப் பலி கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார் அந்த ஊர் பூசாரி. அந்தச் சிறுபெண்ணையும், மகனையும் அழைத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடுகிறார் அந்தப் பெண்ணின் தாய். அவர்களுக்கு என்ன ஆகிறது. தனது தாயின் மரணத்திற்கும் தங்கைக்கு ஏற்பட்ட நிலைக்கும் அந்தச் சிறுவன் கொடுத்த பதிலடி என்ன. இப்படி தான் ஆரம்பிக்கிறது இந்தத் தொடர். 

ஒரு போலீஸ் ஸ்டேஷனில் எஸ் ஐயாகப் பணி புரிகிறார் த்ரிஷா. அந்தப் பகுதிகளில் நடக்கும் தொடர் மரணங்களில் ஒர் இணைப்புப் புள்ளி உள்ளது என்பதை கண்டறிந்து, துப்பறிந்து சொல்ல, ஒரு தனிப்படை அமைக்கப்படுகிறது. அவரும் அவரது ஸ்டேஷனில் பணியாற்றும் ரவீந்திர விஜயும் அங்கு மாற்றப் படுகிறார்கள்.

தொடர் கொலைகளின் காரணம் என்ன? அதைச் செய்வது யார்? அவர்களின் உண்மையான நோக்கம் என்ன? இதன் சூத்ரதாரி யார்? என்பதை எல்லாம் நீட்டி முழக்கி சொல்கிறது இந்த வெப் தொடர்.

போலீஸ் அதிகாரியாகத் திரிஷா முதலில் அந்தக் கேரக்டரில் தன்னை பொருத்திக் கொள்ள மிகச் சிரமப்படுகிறார். நமக்கும் அவர் கோபப்படுவதை பார்க்கப் பாவமாக இருக்கிறது! நடிக்க வந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அலுங்காமல் வந்து செல்லும் பாத்திரங்களில் நடித்துப் பழக்கப்பட்ட அவரைச் சண்டை எல்லாம் போடச் சொன்னால் என்ன செய்வார் பாவம்?! (திரிஷாவின் நடிப்பிற்காக இதுவரை பார்த்த படங்கள் ஏதேனும் உண்டா என்று யோசித்தால் 96 ஐத் தவிர வேறு ஒன்றுமே நினைவிற்கு வரவில்லை.)  

கூட வரும் சாரதி (ரவீந்திர விஜய்) முதலில் எதிர்த்தாலும் பின்னர் அவரைத் தனது மேலதிகாரியாகவே நினைத்துச் செயல்பட ஆரம்பித்து விடுகிறார். இவர்கள் இருவருக்கும் ஏற்படும் அந்த நட்பு ரசிக்கும் படியாகவும் நம்பும் படியாகவும் தான் இருக்கிறது. இந்திரஜித் சுகுமாரன், ஜெயப்ரகாஷ், ராக்கேந்து மௌலி போன்றவர்கள் தேவையான அளவு நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். (இறுதியில் வரும் ஒரு திருப்பம் ரசிக்கும் படி இருந்தாலும் அதை ஓரளவு ஊகிக்க முடிகிறது.)

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: 'மழை பிடிக்காத மனிதன்'- டைட்டிலில் புதுமை; கதையில்...?
Brinda Series Review

ஒரு கட்டத்திற்குப் பிறகு பிறகு கதை கொஞ்சம் திக்குத் தெரியாமல் அலைகிறது. மலைமேல் நடக்கும் கிளைமாக்ஸ் தான் இந்தத் தொடரின் பலவீனமான பகுதி. வில்லன்கள் அந்தத் தொடர் சாவுகளுக்குச் சொல்லும் காரணங்கள் ஏற்கும்படியும் இல்லை, அவர்களுக்குப் பின்னர் அத்தனை கூட்டம் கூடுவதும் இது போன்ற எந்தச் செயலையும் யாரும் விசாரிக்காமல் இருப்பதும் நம்பும்படியும் இல்லை. சிறுவர் சீர்திருத்தச்  சாலை போர்ஷன்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஒரு கட்டத்தில் யார் த்ரிஷாவின் அண்ணன் என்ற குழப்பம் வருகிறது. தேவையென்றால்  திரிஷா காரில் ஒருவரைப் பின் தொடர்கிறார். குற்றம் நடக்கும் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்றால் எப்பொழுதும் ஆட்டோவில் செல்கிறார். என்ன தான் பட்ஜெட் பிரச்னை என்றாலும் இது கொஞ்சம் ஓவர் தான். அநியாயத்திற்கு நல்லவராக வரும் ஜெயப்ரகாஷ் செய்யும் சில காரியங்கள் இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்விகளை எழுப்புகின்றன. வைக்க வேண்டும் என்றே திணித்து வைக்கப்பட்ட தங்கை கேரக்டரும் இந்தத் தொடரின் நீளத்தைக் கூட்ட உதவுகிறதே தவிர வேறு எதற்கும் உதவில்லை.

இதையும் படியுங்கள்:
ஒன்று சேருமா தமிழ் திரை உலகம்? ஒற்றுமை பாராட்டப்படுமா?
Brinda Series Review

எட்டு எபிசோட்கள் கொண்ட இந்தத் தொடரை அமர்ந்து பார்க்க வைப்பது இசையும், ஒளிப்பதிவும் தான். கிராபிக்ஸ் எல்லாம் மிக அமெச்சூராக இருக்கின்றன. அதுவும் கிளைமாக்ஸில் மிக மோசமாகப் பல்லிளிக்கிறது. ஒரே ஆசுவாசம் சீசன் ரெண்டு என்று இதை இழுக்காமல் நல்லபடியாக முடித்துச் சுபம் பாடி விட்டார்கள். பரபரப்பாக ஆரம்பித்து இடையில் கொஞ்சம் தடுமாறினாலும் கடைசியில் சற்று சுதாரித்துக் கொண்டு பார்க்க வைத்து விட்டார் இயக்குனர் சூர்யா மனோஜ் வங்கலா. திரிஷா நடிக்கும் முதல் தொடர் என்பதாலும், பொழுது போகவில்லை என்பதாலும் இதைப் பார்க்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com