

டைட்டிலைப் பார்த்ததுமே இவ்வளவு நீளமா இருக்கே? என்று மலைக்க வேண்டாம். மயிலின் தோகை நீளமாக இருப்பதால் நாம் அதன் அழகை ரசிக்காமலா இருக்கிறோம்?
24/12/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்த கொரியன் ரொமான்டிக் படம் இப்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த கண்ணியமான காட்சிகள் கொண்ட படம் 'Even If This Love Disappears From The World Tonight'.
இதே டைட்டிலில் 'கிம் யே யங்' என்பவர் எழுதிய நாவலைத் தழுவித் திரைக்கதை அமைக்கப்பட்ட படம். பொதுவாக ஒரு சிறுகதையையோ, நாவலையோ தழுவி திரைக்கதை அமைந்தால் அதில் செய் நேர்த்தி, கவித்துவும் கூடுதலாக இருக்கும் என்பதை இந்தப்படமும் நிரூபிக்கிறது.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன், நாயகி இருவரும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் 11 வது படிக்கும் பள்ளி மாணவர்கள்.
சக மாணவர்கள் நாயகனை ரேகிங்க் செய்து நாயகியிடம் நீ என்னுடைய கேர்ள் பிரண்ட் ஆக இருக்கிறாயா?எனக் கேட்க சொல்கிறார்கள். நாயகனும் அதே போல் கேட்க இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள்.
ஆனால் நாயகி 3 நிபந்தனைகள் விதிக்கிறாள். அடிக்கடி பேசி தொந்தரவு செய்யக்கூடாது. பள்ளி வளாகத்தில், வகுப்பில் பேச முயற்சிக்கக்கூடாது, காதலிக்கக்கூடாது.
நாயகனுக்குப் புரியவில்லை என்றாலும் அந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு நட்பைத் தொடர்கிறான்.
நாயகி எட்டாம் வகுப்புப் படிக்கும்போது ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு ஆண்ட் ரோ கிரேடு அம்னீசியா என்ற பிரச்சனை ஏற்படுகிறது. அதாவது நாயகி தூங்கி எழுந்தால் அதற்கு முன் தின நினைவுகள் ஞாபகத்தில் இருக்காது.
கிட்டத்தட்ட கஜினி (மொமெண்ட்டோ) பட நாயகன் மாதிரி. இந்த நிலைமையை சமாளிக்க தினமும் டைரியில்,செல் போனில் அன்று நடந்த சம்பவங்களை எழுதி வைத்துக்கொள்கிறாள்.
அடுத்த நாள் காலையில் டைரியில் படித்து சந்தித்த நபர்கள், சம்பவங்கள் ஆகியவற்றை நினைவு கூர்வாள்.
நாயகனுக்கு அம்மா இல்லை, இறந்து விட்டார். அப்பா மட்டும் தான். நாயகன் சிறுவனாக இருக்கும்போதே இதயத்தில் ஒரு சரி செய்ய முடியாத பிரச்னை இருக்கிறது. இதயத்தை திருடாதே (கீதாஞ்சலி) பட நாயகன் போல இறப்பை எந்நேரமும் எதிர் நோக்கிக் காத்திருப்பவன்.
இந்த விஷயம் நாயகிக்குத் தெரியாது. நாயகியின் நோய் பற்றி நாயகனுக்குத் தெரியாது.
இவர்கள் பழகிக்கொண்டிருக்கும் போது நாயகன் நாயகி விதித்த நிபந்தனைகளில் மூன்றாவது விதியை மீறி விடுகிறான்.
அதற்கு நாயகியின் எதிர் வினை என்ன? அதற்குப்பின் நிகழ்ந்த சம்பவங்கள் என்ன? என்பது தான் மீதித் திரைக்கதை.
நாயகன் ஆக ச்சூ யங்க் வூ நடித்திருக்கிறார். நம்ம ஊர் சித்தார்த் போன்ற முகத்தோற்றம். அப்பாவுடனான பிணைப்பு, நாயகி உடனான நட்பு, நண்பர்கள் உடனான கலாட்டாக்கள் என எல்லா ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்கிறார்.
நாயகி ஆக ஷின் ஷியா அழகுப் பதுமையாக வருகிறார். அழும்போதும் அழகாக இருப்பவர் தான் நல்ல நாயகி என்ற ஜெயகாந்தன் சொல்லுக்கு ஏற்ப சோகக்காட்சிகளிலும் மிளிர்கிறார்.
படத்தில் நடித்த மற்ற அனைவர் நடிப்பும் கச்சிதம்.
இது மாதிரி ரொமாண்டிக் மூவிகளில் ஒளிப்பதிவும் இசையும் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும். படத்தில் பிரமாதமான ஒளிப்பதிவு ஓவியம் போன்ற காட்சிகள் கண்களைக் கவர்கிறது. பின்னணி இசை பாடல்கள் 3 இருக்கிறது.
திரைக்கதை எழுதி, இயக்கி இருப்பவர் கிம் யே யங்க்.
படத்தின் 'ஓடு நேரம்' 106 நிமிடங்கள்.
சபாஷ் டைரக்டர்
சமீபத்தில் வெளியான வித் லவ், தனுஷ் நடித்த 3 ஆகிய படங்களில் வருவது போல முதல் 45 நிமிடங்கள் ஸ்கூல் கலாட்டா என்பதால் இளமைக் குறும்புகள் கொப்பளிக்கும் காட்சிகள் அருமை.
நாயகனுக்கும், அப்பாவுக்கும் உண்டான பாண்டிங் வெளிப்பட்ட விதம்.
நாயகியின் தோழியை வில்லி மாதிரி காட்டி பின் எதனால் அப்படி நடந்து கொண்டார் என்ற ட்விஸ்ட்.
நாயகியை ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள நாயகன் எடுக்கும் முயற்சிகள் கவிதை.
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
நாயகிக்கு வந்திருக்கும் குறைபாட்டின் படி முதல் நாள் நிகழ்ந்த சம்பவங்கள் மறு நாள் மறக்கும் எனில் அவர் எப்படி பரீட்சை எழுதி பாஸ் ஆவார்? நடத்திய பாடம் மறக்குமே?
நாயகி எட்டாம் வகுப்புப் படிக்கும்போது ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்தார் எனவும் இப்போது விபத்துக்குப்பின் அதெல்லாம் மறந்து விட்டது எனவும் கூறுகிறார். ஆனால் சைக்கிள் ஓட்டுவது மட்டும் மறக்காமல் இருக்கிறார்.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 13+ குடும்பத்துடன் பார்க்கலாம்.
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - Feel good மூவி பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம். மிக மெதுவான திரைக்கதை. பொறுமை தேவை.