
அனாதையான சூர்யாவை தனது மனைவியின் வற்புறுத்தலின் பேரில் தத்தெடுத்து வளர்க்கிறார் ஜோஜு ஜார்ஜ். வயிற்றில் வேல் சின்னத்துடன் இருக்கும் இந்தக் குழந்தை கடவுள் தங்களுக்குக் கொடுத்தது என்று நம்புகிறார் ஜோஜூ ஜார்ஜின் மனைவி. ஆனால் அவர்மேல் தனது வெறுப்பைக் காட்டிக் கொண்டே இருக்கிறார் ஜோஜு. கோபக்கார வன்முறையை விரும்பும் இளைஞனாக வளரும் சூர்யா அவருக்கு ஓர் அடியாள்போல இருந்து காப்பாற்றுகிறார். ஒரு கட்டத்தில் தன்னை வளர்த்த அம்மா மறைந்த பிறகு சிறு வயதில் சந்தித்த ருக்மிணி என்ற பெண்ணின் மேல் அவருக்குக் காதல் வருகிறது. இயல்பாகவே சிரிப்பு என்றால் என்ன என்று தெரியாத சூர்யாவிற்கு, 'நீ சிரிச்சா இன்னும் அழகா இருப்பேடா' என்று அவர் அம்மாவைப் போலவே சொல்லும் ருக்மிணியை (பூஜா ஹெக்டே) முதல் சந்திப்பிலேயே பிடித்து விடுகிறது.
அவரது ஆசைக்கிணங்க தனது அடிதடியையெல்லாம் விட்டு விட்டுக் கல்யாணம் செய்து கொண்டு ஊரை விட்டுச் செல்ல நினைக்கிறார். இதற்கிடையில் ஒரு கன்டெய்னரில் வந்த தங்க மீன்கள் என்ற சரக்கு காணாமல் போகிறது. அது ஜோஜூ ஜார்ஜுக்கும் அவரது பாஸ் அரசியல்வாதி பிரகாஷ் ராஜுக்கும் மிகவும் முக்கியம். இதை இடம் மாற்றி ஒளித்து வைத்திருப்பது சூர்யா தான் என்று தெரிந்து அவரிடம் சண்டைக்கு வருகிறார் ஜோஜூ. இதன் பின் என்ன ஆகிறது என்பது தான் ரெட்ரோ.
வளர்ப்பு மகன் பாரியாகச் சூர்யா கச்சிதம். முதல் நாற்பத்து ஐந்து நிமிடங்களுக்கு இவர் பாத்திரப்படைப்பு கச்சிதம். ஏன் சிரிக்க மாட்டார் என்பதற்கும், இறுக்கமாகவே இருப்பதற்கும் சரியான காரணங்கள் இருப்பதால் மனிதரை அப்படியே ஏற்க முடிகிறது. அதுவும் மிக நீளமான சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட கனிமா பாடலும் அதைத் தொடர்ந்து வரும் சண்டைக்காட்சியும் பிரமாதம். இந்தக் குழுவினரின் உழைப்பு கண்கூடாகத் தெரிகிறது. மொத்தப் படத்திலும் இந்தப் பதினைந்து நிமிடங்கள் தான் ஹைலைட். என்ன சோகம் என்றால் இந்தப்படத்தின் சுவாரசியம் இதோடு முடிந்துவிடுகிறது என்பதுதான்.
வன்முறையே பிடிக்காத காதலி. அதைத் தவிர எதுவும் தெரியாத காதலன். இவர்கள் பிரிவதால் ஏற்படும் வலிகள் இழப்புகளெல்லாம் பாடல்களாகவே கடந்து செல்கின்றன. சிறைக்குச் செல்லும் சூர்யா தனது காதலி இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு தப்பிச் செல்லும் காட்சியோடு கதை முற்றிலும் வேறு பரிமாணம் எடுக்கிறது.
காவல்துறை, அரசாங்கம், என்று எதுவுமே இல்லாத ஒரு தீவு. அதில் பிரபுக்கள் போல உலா வரும் நாசர் அவரது மகன். அந்த ஊர் மக்களை அடிமையாக நடத்துகிறார்கள். அவர்களைக் குழுக்களாக்கி ஒருவரையொருவர் அடித்துக்கொல்லும் கிளாடியேட்டர் வகைப் போட்டிகளை நடத்துகிறார்கள். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இதை ரசித்துப் பணத்தை வாரி இறைக்கிறார்கள். இதற்குக் கல்ட் என்று பெயர். ஒரு முழு சைக்கோ போல நடக்கும் நாசரின் மகனைப் பார்த்து அந்த ஊரே பயப்படுகிறது. அந்த ஊர் மக்களும் சிரிப்பு என்ற ஒன்றை மறந்து விடுகிறார்கள். அந்த ஊரில் தான் ருக்மிணி வசிக்கிறார். மிருக வைத்தியராக இருக்கும் அவரைத் தேடிச் சிரிப்பு டாக்டரான ஜெயராமுடன் அந்தத் தீவுக்கு வருகிறார் சூர்யா. ஒரு கட்டத்தில் சூர்யாவிற்கு தன் பிறப்பின் ரகசியம் தெரிய வர இன்னும் பல சண்டைகளுக்குப் பிறகு சுபம்.
காதல், சிரிப்பு, போர், கல்ட், தி ஒன் என்று ஐந்து அத்தியாயங்களாகப் பிரியும் இந்தப்படத்தில் காதல் மட்டுமே ரசிக்கும்படி இருந்தது தான் சோகம். சிரிப்பு என்று இவர்கள் செய்யும் சேஷ்டைகள் கடுப்பைத் தான் வரவழைக்கின்றன. நல்ல நடிகரான ஜெயராமை ஒரு கோமாளியாகவே ஆக்கி வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு தீவு, பிரபுக்கள், உயிர் விளையாட்டுக்கள் எல்லாம் கார்த்திக் சுப்பாராஜ் உலகில் மட்டுமே நடக்கும்.
ஒரு கட்டத்தில் இது ஆக்க்ஷன் படமா இல்லை spoofஆக எடுக்க நினைத்திருக்கிறார்களா என்ற யோசனை வருகிறது. கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன், என்டர் த டிராகன், தேவரா எனப் பல படங்கள் நினைவுக்கு வந்து செல்கின்றன.
ஓர் ஊரையே கொடுமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த மக்களைப் பார்க்கும்பொழுது நமக்கு எவ்வளவு பரிதாபம் வர வேண்டும். நமக்கென்ன என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு கட்டத்தில் இப்படித் தான் படம் போகும் என்று தெளிவாகத் தெரிந்து விடுவதால் எந்தச் சுவாரசியமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் சூர்யாவும் பூஜாவும் சேர வேண்டும் என்ற எண்ணம் கூடத் தோன்றுவதில்லை.
முதல் பாதியில் தனது இசையால் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் சந்தோஷ் நாராயணன் ஒரு கட்டத்தில் அமைதி என்ற ஒன்று படத்தில் இருக்கவே கூடாது என்று நினைத்து விட்டார். முக்கியமான அந்தக் காட்சியில் கூட வாசித்துத் தள்ளி விட்டார். பல இடங்களில் இரைச்சலாகத் தான் இருக்கிறது அவரது இசை. பாடல்களில் சிறைச்சாலைப் பாடலும், கனிமா பாடலும் பலே. அதுவும் அந்தக் கனிமா பாடல் பக்கா தியேட்டர் மெட்டீரியல். தனது சூப்பர் ஸ்டார் விசுவாசத்தைக் காட்ட சினோரிட்டா பாடலை வைத்துவிட்டார் கார்த்திக் சுப்பராஜ். இளையராஜா கேஸ் போடாமல் இருப்பாராக.
மிக நம்பிக்கையாகத் தொடங்கப்பட்ட படம் முதல் நாற்பது நிமிடங்களுக்குப் பிறகு திசை தெரியாமல் தள்ளாடுகிறது. திரைக்கதையில் அதன் பிறகு எந்த விதமான புதுமையும் இல்லை. சூர்யாவின் வேகம், சண்டைக்காட்சிகள் இது இரண்டையும் மட்டும் நம்பி இரண்டாம் பாதியை எடுத்திருக்கிறார்கள். ரத்தம் தெறிக்கத் தெறிக்க படம் முழுதும் காட்சிகள் வைத்த இயக்குநர் கிளைமாக்சில் மொத்தத்தையும் அந்தரத்தில் விட்டு விட்டார். நம்முடைய உண்மையான பயமே எங்கே மிகப் பெரிய படையுடன்வரும் ஜோஜூ ஜார்ஜின் என்ட்ரியைக் காட்டி பார்ட் டூவிற்கு லீட் கொடுத்து விடுவாரோ என்பது தான்.
இந்தக் கதை எழுதும்போதே எக்சைட்டிங்காக இருந்தது என்று அனைத்துப் பேட்டிகளிலும் தவறாமல் குறிப்பிட்டிருந்தார் கார்த்திக் சுப்பாராஜ். அதில் கொஞ்சம் மட்டுமே கடத்தி விட்டுத் தனக்குள் மீதியை வைத்துக் கொண்டுவிட்டார் போல. சூர்யா கதாபாத்திரம் தவிர மற்ற எந்தக் கதாபாத்திரத்தையும் இவர் முழுதாக வடிவமைத்தது போலத் தெரியவில்லை. அதுவும் அவரது உண்மையான அப்பா அம்மா பாத்திரங்கள். பைத்தியமாகக் காதலாகி கசிந்துருகும் அளவிற்கு சூர்யா பூஜா இவர்களின் காதல் பலமாகக் காண்பிக்கப்படவில்லை என்பதும் ஒரு பலவீனம்.
சூர்யா - கார்த்திக் சுப்பராஜ் என இவர்கள் இருவரின் தனிப்பட்ட ரசிகர்கள் இந்தப்படத்தை ஒரு முறை பார்த்து ரசிக்கலாம். முழுப் படமும் மொமெண்ட்கள் மட்டுமே இருந்தால் கூட ஒரு படத்தை வெற்றிப்படமாக்கி விடும் எனச் சமீபத்தில் நிரூபித்த படம் குட் பேட் அக்லி. இளவயது சூர்யா சண்டை போடும்போது தற்போதைய சூர்யாவை மாற்றி மாற்றிக் காட்டும் ஸ்மார்ட்னெஸ், எவ்வளவு பேரை அடித்தாலும் அதற்கு உண்டான பயிற்சி ஹீரோவிற்கு உண்டு என நம்ப வைத்த தன்மை, சூர்யாவிற்கு ஜோஜூ ஜார்ஜிற்கும் நடக்கும் இரண்டு உரையாடல் சார்ந்த காட்சிகள் எனச் சில மொமெண்ட்கள் இந்தப் படத்தின் ஹைலைட். ஆனால் நூற்று அறுபத்து எட்டு நிமிடங்கள் ஓடும் படத்திற்கு இது மட்டும் போதுமா. பெயருக்கு ஏற்ப அரதப்பழசான ஒரு கதையுடன், எந்தவிதமான திருப்பங்களும் இல்லாத ஒரு திரைக்கதையுடன் சூர்யா என்ற ஒற்றை நடிகரின் ஈர்ப்பை மட்டும் நம்பி வந்துள்ள படம் தான் ரெட்ரோ.