தியேட்டரை தொடர்ந்து ஓடிடிக்கு வரும் 'கட்டா குஸ்தி 2'... எப்போ? எங்கே தெரியுமா?

செல்லா அய்யாவு இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு; முற்போக்கான கருத்துகளுடன் வெளியான படத்தின் முழு அலசல்!
கட்டா குஸ்தி|katta kushti 2 movie review
கட்டா குஸ்திAI image
Updated on

கடந்த 2022-ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியானது ‘கட்டா குஸ்தி’ திரைப்படம். இதில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமியுடன் யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த இப்படத்தை, ஐசரி கணேஷுடன் இணைந்து விஷ்ணு விஷால் தயாரித்திருந்தார்.

இதன் சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் பெண்ணியம் சார்ந்த கருத்துகளுக்காக இப்படம் பெரிதும் பாராட்டப்பட்டது. குடும்ப பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை கலந்த சமூகக் கதையாக கவனம் பெற்ற இப்படத்தின் தொடர்ச்சியாக, இயக்குநர் செல்லா அய்யாவு இரண்டாம் பாகத்தை உருவாக்கி தற்போது திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார். இப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

முதல் பாகத்தின் கதைக்களம்:

முதல் பாகத்தில் நாயகன் வீரா, ஆண்கள் பெண்களை விட மேலானவர்கள் என்ற எண்ணத்துடன் வளர்ந்தவர்; தனது மனைவி அமைதியாகவும், அடக்கமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புபவர். ஆனால், அவர் திருமணம் செய்யும் கீர்த்தியோ தேசிய அளவிலான திறமையான குஸ்தி (மல்யுத்த) வீராங்கனை. இந்த உண்மையை கீர்த்தியின் குடும்பத்தினர் திருமணத்திற்கு முன் மறைத்து விடுகிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு, கீர்த்தியின் விளையாட்டு வாழ்க்கை மற்றும் வீராவின் ஆணாதிக்க மனப்பான்மை காரணமாக இருவருக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன. பின்னர் கீர்த்தியின் திறமையையும் கனவையும் வீரா புரிந்து கொண்டு, அவளுக்கு ஆதரவாக நிற்க தொடங்குகிறார்.

இறுதியில், கீர்த்தி தனது மல்யுத்த போட்டிகளில் வெற்றி பெற ஆதரவாக வீரா தனது பழைய எண்ணங்களை மாற்றி கொள்வதாக கதை நகர்கிறது. "கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வதே உறவின் வலிமை" என்ற கருத்தை இப்படம் வலியுறுத்தியதை அனைவரும் ரசித்தனர்.

கட்டா குஸ்தி|katta kushti 2 movie review
கட்டா குஸ்திAI image

இரண்டாம் பாகத்தின் கதைக்களம்:

தற்போது அதன் தொடர்ச்சியாக வந்துள்ள கட்டா குஸ்தி 2 அதே சுவாரஸ்யத்தை அளித்ததா என்பதில் இருவேறு வகையான விமர்சனங்கள் வந்துள்ளது.

முதல் பாகத்தை தொடர்ந்து, வீராவாக வரும் விஷ்ணு விஷால் மற்றும் கீர்த்தியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி தம்பதியினர் தங்களது சிறு வயது மகளுடன் வசிக்கின்றனர். கீர்த்தி ரயில்வே பணியில் இருந்தபடி தன் மல்யுத்தப் பாதையில் தொடர, வீரா வீட்டில் இருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் 'ஹவுஸ் ஹஸ்பண்ட்' ஆக இருக்கிறார். கூடவே, தன் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியின்படி அவரது மல்யுத்தக் கனவுக்குத் துணையாகவும் நிற்கிறார்.

எனினும், இந்தச் சமூகம் அவர்களை நிம்மதியாக அவர்கள் வழியில் செல்லவிடவில்லை. கீர்த்தி விளையாட்டில் அடுத்தடுத்த உயரங்களைத் தொட முயலும்போது, அவருக்கு எதிராக அவரது பயிற்சியாளர் சதி செய்கிறார். அதில் வீரா தன்னை அறியாமலேயே பகடைக்காயாக மாற, கணவன்-மனைவி இடையே மீண்டும் விரிசல் விழுகிறது. இதனால் அவர்களது மகள் பாதிக்கப்படுகிறாள். இவர்களுக்கு நடுவில் இவர்களது மகள் எப்படித் தவிக்கிறாள், இருவருக்கும் இடையிலான சிக்கல் தீர்ந்ததா என்பதே ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் மீதிக்கதை.

நிறைகள்:

முதல் பாகத்தின் கலகலப்பான காட்சிகளை பின்பற்றி அப்படியே இதிலும் வைத்து படம் முழுக்க ஒருவித ரிலாக்ஸ் மனநிலையில் பார்வையாளர்களை வைத்திருப்பதில் வெற்றி பெற்று விட்டார் இயக்குநர் . படம் முழுக்க ஆங்காங்கே போகிற போக்கில் அள்ளிவிட்ட நகைச்சுவை வசனங்கள், பொங்கலில் கடிபடும் முந்திரிகளாக ரசிகர்களிடம் அப்ளாஸ்களை அள்ளுகின்றன.

குறிப்பாக கருணாஸ், காளி வெங்கட் வரும் காட்சிகள், கருணாஸுக்கும் அவரது மனைவியாக வரும் லிஸி ஆண்டனிக்கும் இடையிலான உரையாடல்கள் போன்ற காட்சிகள் படத்தை முழுமையாக ரசிக்க பெரிதும் உதவியுள்ளதாக சிவ விமர்சனங்கள் கூறுகிறது.

நாயகி ஒரு தடகள வீராங்கனையாக தாயான பிறகும் தன் கனவைத் தொடர்வது, ஹீரோ எனினும் ஒரு ஆண் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் தந்தையாக இருப்பது, தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டின் முக்கியத்துவம் என சில முற்போக்கான விஷயங்கள் ஆங்காங்கே தூவப்பட்டிருந்தாலும் படம் முழுமையான வெற்றியைத் தந்ததா என்பது கேள்விக்குறிதான் என்கிறது மேலும் சில விமர்சனங்கள்.

குறைகள்:

நாயகனின் மகளின் வகுப்பு ஆசிரியை மீனு (மோக்‌ஷா) கதாபாத்திரம், அதிகபிரசங்கித்தனமாக பேசும் சிறுமி, மனைவிக்கு விஷம் வைப்பதை பற்றிய ஜோக்குகள், பேச்சுக்கு முரணான சண்டைகள் போன்ற பல நெகடிவ் பாயிண்டுகள் இப்படத்தை நீர்த்துப் போக செய்துள்ளன.

மேலும், முதல் பாகத்தில் குஸ்தி விளையாட்டு கதைக்கு முக்கியப் பங்களிப்பைத் தந்தது; ஆனால் இதில் விளையாட்டு வெறும் பெயரளவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் பாதி முழுக்கவே படம் எதை நோக்கிப் போகிறது என்ற ஐடியா எதுவும் இல்லாமல் குழப்பமாகச் செல்லும் திரைக்கதை போன்றவை, இதனை ஒரு சுமாரான திரைப்படமாகவே காட்டுகின்றன.

குஸ்தி விளையாட்டு வழியாக ஆண் - பெண் உறவு சிக்கல்கள் குறித்து பேசும் இந்தப் படம், பெண்களை பலவீனமாக காட்சிப்படுத்தும் க்ளைமாக்ஸ் குறித்து விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு:

ஆனாலும், இதன் நகைச்சுவை மற்றும் முதல் பாகத்தின் தொடர்பு காரணமாக, இந்தப் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் எனப் பார்த்து ரசிக்க ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், படம் வரும் ஜூலை 31-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு: வெளியாகும் ‘இதயம் முரளி’ – சுதா கொங்கராவிற்கு பின்னடைவு!
கட்டா குஸ்தி|katta kushti 2 movie review
இதையும் படியுங்கள்:
நண்பரின் காரை இரவல் வாங்கி ஓட்டுகிறீர்களா? விபத்து நடந்தால் இன்சூரன்ஸ் கிடைக்காது..!
கட்டா குஸ்தி|katta kushti 2 movie review
logo
Kalki Online
kalkionline.com