

மக்கள் ஏன் கரகாட்டக்காரன் வெற்றி படமாக கொண்டாடினார்கள்?
ஒரு சினிமா தியேட்டரில் படம் ஓட்டும் ஆபரேட்டர் ஆச்சரியப்படுகிறார்.
ஹீரோ அறிமுகக் காட்சியில் மக்கள் ஒரே ஆரவாரம்.. கதாநாயகியை வில்லன் துரத்துகிறான்.. அவள் ஓடித் தப்பிக்க முயலுகிறாள்.. முடியவில்லை.. சிக்கிக் கொள்கிறாள்..
அவன் பிடியில் அவள் மூச்சுத்திணற.. ஆடியன்ஸுக்கும் ஒரே டென்ஷன்.. யாராவது காப்பாற்ற மாட்டார்களா என அவள் ஏங்கித் தவிக்க எங்கிருந்தோ எம்.ஜி.ஆர் பாய்ந்து வந்து வில்லன் முகத்தில் குத்துவிடுகிறார்.
மக்கள் முகத்தில் சந்தோஷம்.. ஒரே கைதட்டல்.. விசில்.. கோலாகலம். வந்துவிட்டார் எம்.ஜி.ஆர்.. இனி பயமில்லை.. அப்படி லயித்துப் பார்த்தார்கள்.. அப்படி ஆச்சரியப்பட்டவர்தான் மக்கள் நாயகன் ராமராஜன்..
இதை அவர் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அவருக்கும் சினிமா ஆசை வருகிறது.. ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் வருகிறார்.. உதவி டைரக்டர்.. பின் டைரக்டர் ஆகிவிட்டார்.
1986-ல் 'நம்ம ஊரு நல்ல ஊரு' என்ற படம் ரிலீஸ் ஆகிறது. அதில் முன்னணி பாத்திரத்தில் அறிமுகமாகிறார் ராமராஜன். தொடர்ந்து ஹீரோவாக நடிக்க…. கரகாட்டக்காரனில் ஹீரோ அவர்தான்.
16.06.1989-ல் ரிலீஸ் ஆன படம் அது. எடுத்த தயாரிப்பாளரோ, டைரக்டரோ சுமாரான லாபத்தை ஈட்டும்.. முதலுக்கு மோசமில்லை என்ற நம்பிக்கையோடுதான் கரகாட்டக்காரன் படத்தை ரிலீஸ் பண்ணினார்கள். அவர்கள் கொடுத்த சுய விமர்சன மார்க் 3.5/10 தான்..
ஆனால் மக்கள் கொடுத்தது 8.5/10.
138 நிமிடங்கள் ஓடும் அந்தப் படத்தில் அதிகபட்சம் 70 சீன்கள் வர வாய்ப்புள்ளது..
பட டைரக்டர் கங்கை அமரனை, சுமார் வெற்றி அடையும் என நினைத்தவரை, ஏமாற்றிவிட்டது என்றே சொல்லலாம்.. அடைந்தது இமாலய வெற்றி.
அன்று அவர்கள்.. இன்று இவர்கள்….
கிராமத்து மக்களிடம் மண்ணின் மைந்தராக அறியப்பட்டார். மதுரையில் இருந்து பஸ் எடுத்துக்கொண்டு வந்து சென்னையில் அவரை வீட்டில் குடும்பத்தோடு பார்த்தார்கள் பாமர மக்கள். அவரும் அவர்களை உபசரித்து அனுப்பினார். மக்கள் நாயகன் என அழைக்கப்பட்டார். திரை வானில் திடீரென உதித்த அந்தப் புதிய நட்சத்திரம் கண்ணுக்குக் கூலாகப் பிரகாசித்தார்.
கமல், ரஜினி படங்களுக்கு டஃப் கொடுத்தார்.
கரகாட்டக்காரன் ஓடிய ஓட்டத்தைப் பார்த்து அப்படி என்ன நல்லாவா எடுத்திட்டோம் என டைரக்டர் கங்கை அமரனே வியந்து போனார்..
இன்றும் பேட்டிகளில் "அதை நான் தில்லானா மோகனாம்பாள் கதையைச் சுட்டுதான் உல்ட்டாவாக எடுத்தேன்... ஓடும்.. ஆனால் பிய்ச்சுக்கிட்டு ஓடும் என எதிர்பார்க்கவில்லை" என்பார்..
அதை ஒரு அவையடக்கமாகவே நாம் கொள்ள வேண்டும்.
ஏனெனில் அதைக் கொஞ்சம் ஆராய்ந்த போதுதான் எப்படி அது சூப்பர் டூப்பர் ஆனது எனப் புரியும். இந்தக் கதைக்கு ஐடியா தந்தவர் ஹீரோ ராமராஜன்தான்.
மொத்த பட்ஜெட் ரூ. 35 லட்சம் செலவானது.. வசூல் 1989 காலகட்டத்தில் ரூ. 5 கோடி வசூலித்தது.. ஒரே தியேட்டரில் மதுரையில் 450 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. வெளியிட்ட ஊர்களில் எல்லாம் 100 நாட்கள் தாண்டி ஓடி சாதனை படைத்தது… இதெல்லாம் பலரும் பல முறை சொல்லி நாம் படித்ததுதான்.
அந்தச் சின்ன பட்ஜெட்தான் பிளஸ் பாயிண்ட்.
பெரிய செட் போட்டு அரண்மனை பங்களாக்கள், வில்லனின் படாடோபமான பங்களா, அடியாட்கள் என இல்லாமல் சாதாரணமாகச் சிறிய வீடுகள்.. கிராமம், சின்ன கோவில் என இயற்கையான பின்புலம் படத்துக்குக் கிராமிய மணத்தை அள்ளி வீசியது. ஆடியன்ஸைக் கிராமத்துக்கு அழைத்துச் சென்றது.
சினிமா ஒரு சூதாட்டம் போன்றது எனப் பலர் சொல்வார்கள். தொடர்ந்து வெற்றிப் படங்களையே ஒரு கம்பெனி தந்தாலும் வெற்றி பெறும் எனச் சொல்லி எடுத்த படம் ஊற்றிக்கொள்ளும். சில ஏனோதானோ என எடுத்த படங்கள் நச் என தியேட்டரில் உட்கார்ந்துகொண்டு வசூலை வாரிக் கொட்டிவிடும். இது அந்த ரகம். (ஒரு தலை ராகம் படமும் அப்படியே.)
கரகாட்டக்காரன்.. அதை சீன் பை சீன் ஆராய்ந்தால் வெற்றி அந்தப் படத்தில் எங்கே ஒளிந்திருந்தது என்று கண்டுபிடிக்க முடியும்.
வெற்றிக்கு நம்பர் ஒன் காரணம்.. வெளியான காலகட்டம். ஒரு கிராமத்துத் திருவிழாவுக்குக் குடும்பத்தோடு போய் வந்த உணர்வு நிச்சயம் கிடைக்கும். 1989-ல் வந்த படங்களில் இது வித்தியாசமாக இருந்தது.
பட வெற்றிக்கு 4 தூண்கள்.. கனகா, ராமராஜன், பாட்டு, காமெடி.
படத்தில் சீரான இடைவெளிகளில் காதுக்கினிய பாடல்கள்.. அந்தப் பாடல்கள் படமாக்கப்பட்ட இயற்கைச் சூழல்கள்.. வயல்வெளி.. கோபுரங்கள்.. கோவில் பின்னணி.
ஹீரோ, ஹீரோயின் பளிச்சென்ற முகம் மற்றும் பாடி லாங்குவேஜ்.. இயற்கையான கிராமத்து மணம் அவர்கள் மேல் வீசியது. கனகாவுக்கு முதல் படம்.. ராமராஜன் - கனகா ஜோடி ரொம்ப யதார்த்தமாகப் பொருத்தமாக இருந்தது.
ராமராஜன் முகம் ஒரு சூது வாது தெரியாத அப்பாவிக் கலைஞனின் முகமாகவே தோன்றியது. மூக்கால் 'ஙண ஙண' என்று கிராமத்து ஸ்லாங்கில் வசனம் பேசினாலும் ரசிக்கும்படி இருந்தது..
கனகாவுக்கு அதிக வசனம் இல்லை.. கண் ஜாடைகளிலேயே பாடி நடித்தார் எனலாம். கண்ணழகி அவர்.
காமெடி டிராக் சரியான இடைவெளிகளில்…
காதில் ஒலித்த பின்னணி இசை… படத்தில் புல்லாங்குழல் ஒரு புறமாக வாசித்துக்கொண்டிருக்கும்.. காட்சிக்கு மெருகூட்டி.
படத்தில் ஒளிப்பதிவு சபாபதி.. பாடல் காட்சிகள் இன்று பார்த்தாலும் கண்ணைப் பறிக்குது.. வண்ணமும்.. பின்புலமும். கேமரா ஜாலம் செய்திருந்தது. கனகா வில்லேஜ் காஸ்ட்யூமில் கலர்ஃபுல்… புதிய பூவாகப் பூத்திருந்தார்.
இசைஞானி இசை என்னும் கடலில்தான் அந்த கரகாட்டக்காரன் கப்பலே மிதந்தது… மெல்லிய தாலாட்டு போல அந்தப் படம் மொத்தத்தையும் இசையால் தாலாட்டிவிட்டார் இளையராஜா.
ஒரு படம் பார்த்துவிட்டு வந்த பின், காட்சிகள் கண் நினைவில் வெகு நேரம் இருந்தால் அது வெற்றி.. பல சிவாஜி படங்களில் அந்தப் பாதிப்பு இருக்கும்… உதாரணம் கட்டபொம்மன், கௌரவம்.
ஆனால் கரகாட்டக்காரன் படக் காட்சிகள் பல காலம் கண்ணில் நின்றன. அது எப்படி என இன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை.
கரகாட்டக்காரன் சினிமா செல்லுலாய்டு ஃபிலிமில் கேமரா மூலம் பதிவான ஒரு காட்சிக் காவியம்தான். அதுவாக கங்கை அமரன் மூலம் தன்னை ஒளி, ஒலியாக ரெக்கார்டு செய்துகொண்ட கலைப் படைப்பு போலத்தான் தோன்றுகிறது.
பலரின் வேண்டுகோளின்படி கரகாட்டக்காரன் 2.0 எடுக்க அணுகினார்கள் ராமராஜனை. டைரக்டர் கங்கை அமரன் ஒரு கதை தயாரித்தும் விட்டார். நடித்த எல்லோரும் அநேகமாக இருக்கிறார்கள். ஆனால் மக்கள் நாயகன் மறுத்துவிட்டார்.
'கரகாட்டக்காரன் என்றால் ஒன்றே ஒன்றுதான். பார்ட் 2 எல்லாம் கிடையாது..' எனக் கறாராகச் சொல்லிவிட்டார்.
(படத்தில் கரகத்தைச் சுமக்க வைத்து ஆடவைத்து என்ன பாடுபடுத்தினாரோ டைரக்டர்…… கை காலைச் சுழற்றி ஆடி ஸ்டெப் போட்ட ராமராஜனுக்குத்தானே தெரியும் அந்தக் கஷ்டம்!)
பெரிய பட்ஜெட் மற்றும் நட்சத்திரப் பட்டாளம் இன்றி, உள்ளடக்கத்தின் வலிமையால் ஒரு பிரம்மாண்ட வணிக வெற்றியை எப்படி உருவாக்குவது என்பதை நீங்களும் உங்கள் அடுத்த திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.