இரண்டு காவலர்கள். இரண்டு காலக்கட்டங்கள். முடிக்கப் படாத கொலை வழக்குகள். இவர்கள் தொடர்பு கொள்ள முடிந்தால் அதுவும் ஒரே நிமிடத்திற்கு அந்த அழைப்பு நீடித்தால் என்ன ஆகும். இப்படியொரு சுவாரசியமான கருவோடு ஜி 5 இல் வெளியாகியுள்ள சீரிஸ் தான் கியாரா கியாரஸ் 11:11.
மிகவும் பிரபலமான கொரியன் சீரிசான சிக்னல் என்ற சீரிசைத் தழுவி எடுக்கப் பட்ட இது. ஒரு திருவிழாவின் போது கடத்திச் செல்லப்பட்ட ஒரு சிறுமி நதியில் பிணமாகக் கண்டெடுக்கப்படுகிறார். அந்தக் கொலையைச் செய்தவர் யார் என்று தெரியாமல் காவல்துறை தத்தளிக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்குள் குற்றவாளி கண்டுபிடிக்கப் படாவிட்டால் அந்த வழக்கை முடித்து வைக்க ஒரு சட்டததின் கீழ் வழி இருக்க அதை எதிர்த்துப் போராடுகிறார் அந்தச் சிறுமியின் தாய்.
யுக் ஆர்யா, வாமிகா, மற்றும் ஷோர்யா என மூன்று போலீஸ் அதிகாரிகள். இதில் ஆர்யா 2016 இலும் ஷோர்யா 1998 இலும் பணி புரிந்து கொண்டு வருகிறார்கள். ஒரு பழுதடைந்த வாக்கி டாக்கி மூலம் சரியாக இரவு 11:11 க்கு இவர்கள் இருவரும் தொடர்பு கொள்ள நேரிடுகிறது. அப்போது ஒருவருக்கொருவர் கொடுக்கும் செய்திகளால் நடக்க இருக்கும் சில குற்றங்கள் தடுக்கப் படுகின்றன. முடிக்க இயலாத வழக்குகள் முடிவுக்கு வருகின்றன.
காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு இவர்கள் போக்கு கடுப்பை வரவழைக்கக் கோல்ட் கேஸ் யூனிட் என்ற அமைப்பை உருவாக்கி ஆர்யாவிடமும் அவனது மேலதிகரியான வாமிகாவிடமும் தள்ளி விடுகின்றனர். இந்த அணியும் சளைக்காமல் அதில் இறங்கி விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட இழப்புகளும் ஏற்படுகின்றன. இறுதியில் என்ன ஆனது என்பது தான் கதை.
மலைப் பாங்கான முசூரி நைனிடாலென மலைப் பிரதேசங்களில் நடப்பதால் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. விசாரணைக் காட்சிகள் இயல்பாக இருக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் பரபர வென்று நகரும் அளவு திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. துவக்கத்தில் சற்றே மெதுவாகச் சென்றாலும் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கை நுனியில் அமர வைத்து விடுகிறார்கள்.
லாஜிக் என்று பார்த்தால் சில குறைபாடுகள் இருந்தாலும் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் சம்பந்தப் பட்டவர்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்று நினைக்க வைக்கிறது. கால் சரியாக வருகிறது என்று தெரிந்தும் அதை கடைசி நொடியில் எடுப்பது சில இடங்களில் கடுப்பை வரவழைக்கிறது.
முதல் காட்சியில் குற்றத்தை ஒப்புக் கொள்பவன் அடுத்தக் காட்சியில் அனைத்தையும் மாற்றி சொல்வது என்ன தான் பா நினைக்கிறீங்க நீங்க என்று யோசிக்க வைக்கிறது. தன்னை அவ்வளவு நம்பும் மேலதிகாரியிடம் இந்த வாக்கி டாக்கி பற்றி சொல்லாமல் இருப்பதும் ஏனென்று தெரியவில்லை.
ஆர்யவாக ராகவ் ஜுவால், வாமிகவாகக் கிருத்திகா கம்ரா, ஷவுர்வா வாகத் தைரியா கர்வா…மூவரும் கச்சிதம்.
கொரிய படவுலகினருக்கு இந்தச் சீரியல் கொலைகாரர்கள்மேல் உள்ள அதீதமான காதல் இதிலும் வெளிப்படுகிறது. அதை நமக்கு ஏற்றவாறு மாற்றியதில் இந்த அணி வென்றுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். உமேஷ் பிஸ்ட் இயக்கியுள்ள இந்தச் சீரிஸ் முக்கியமான கட்டத்தில் முடிந்து இருக்கிறது. சீசன் டூ விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.