
சாதாரணமாக அமெரிக்க ஜனாதிபதியும், பிரிட்டிஷ் பிரதமரும் தான் உலகத்தைக் காப்பார்கள். ஒரு மாறுதலுக்கு இவர்கள் இருவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும் அதோடு சேர்ந்து உலகைக் காக்கவும் இணைந்து போராடுவது தான் ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்.
அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் ஜான் சேனா, இட்ரிஸ் எல்பா, ப்ரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளார்கள். ஸ்பெயினில் நடைபெறும் ஒரு ரகசிய நடவடிக்கையில் ஒரு தீவிரவாதியைப் பிடிக்கச் செல்லும் குழுவின் தலைவியாகப் பிரியங்கா சோப்ரா. அங்கு நடந்த போராட்டத்தில் இவர்கள் குழுவினர் மொத்தமாகக் கொல்லப்பட்டுகின்றனர். பிரியங்காவும் மோசமாகத் தாக்கப் படுகிறார். நேட்டோ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கப் பிரதமர் வில்லும் (ஜான் சேனா) பிரிட்டிஷ் பிரதமர் சாமும் (இட்ரிஸ் எல்பா) இணைந்து பயணிக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் முதலில் இருந்தே முட்டிக் கொள்கிறது. நடிகராக இருந்து அதிபரான வில்லை, சாம் கலாய்த்துக் கொண்டே வருகிறார்.
இடையில் இவர்கள் பயணம் செய்யும் ஏர் போர்ஸ் ஒன் விமானம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு நடுவானில் வெடித்துச் சிதறுகிறது. அதிலிருந்து தப்பித்த இருவரும் தங்கள் பதவிகளை மறந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து தப்பிக்கின்றனர். இறுதியில் என்ன ஆனது என்பது தான் கதை.
நகைச்சுவை கலந்த ஆக்க்ஷன் படமாக இதைக் கொடுக்கப் பாடுபட்டுள்ளார் இயக்குனர் இல்யா நைஷுல்லர். சும்மா சொல்லக் கூடாது ஜான் சேனாவும், இட்ரிஸ் எல்பாவும் மாறி மாறி நகைச்சுவை வசனங்களால் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கின்றனர். "சினிமாவில் ஆக்க்ஷன் காட்சிகளில் நடிக்கும்போது டூப் போடலாம். ரீடேக் எடுக்கலாம். நிஜ வாழ்வில் நடக்காது என்று அவர் சொல்லப் பெண்ணே கிடைக்காமல் பாச்சிலராக இருக்கும் நீ இதைப் பேசக் கூடாது" என அவர் திரும்ப வாரக் காமடி அதகளம் தாம்.
இட்ரிஸ் எல்பா, ஜான் சேனா போதாதென்று இடைவேளைக்குப் பிறகு பிரியங்கா சோப்ரா இணைந்ததும் சூடு பிடிக்கிறது படம். இவருக்கும் பிரதமருக்கும் நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளும் புன்னகையை வரவழைக்கின்றன.
படத்தின் வசனங்கள் தான் பெரிய பலம். யோசிக்க விடாமல் அடுத்தடுத்து சிரித்திக் கொண்டே காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர். ஒளிப்பதிவும் இசையும் இந்தப் படத்திற்கு என்ன தேவையோ அதைச் செய்திருக்கிறது. வில்லனாகப் பேடி கான்சிடின். என்ன எதிர்பார்த்தாரோ இயக்குநர் அதைத் தந்திருக்கிறார்.
ஆக்க்ஷன் காட்சிகளும் சும்மா இல்லை. தரமாகப் படமாக்கப் பட்டிருக்கின்றன. முதலில் நடக்கும் துப்பாக்கிச் சூடு, கிளைமாக்ஸ் கார் துரத்தல், குடோனில் நடக்கும் ஷூட் அவுட் என ஆக்க்ஷன் காட்சிகள் கண்டிப்பாக அசத்தல் ரகம்.
எல்லாம் முடிந்து உண்மையான குற்றவாளி யார் என்று கண்டுபிடித்து இருவரும் இணைந்து அவர்களை அழித்து உலகைக் காத்து சுபம் போடுகிறார்கள். ஆங்கிலப்படத்திற்கே உரிய கவர்ச்சிக்கட்சிகளோ ரத்தம் தெறிக்கும் வன்முறைகளோ இல்லாத இந்தப் படத்தைக் குடும்பத்துடன் கண்டிப்பாகப் பார்த்து ரசிக்கலாம்.