

தென் கொரியப் படங்களில் வட கொரிய உளவாளிகள் பற்றிய தாக்கம் அதிகம் இருக்கும். வடகொரியாவில் இருந்து தப்பித்து வெளியேறுபவர்கள் ரஷ்யா வழியாக வேறு நாடுகளுக்குச் செல்வது வழக்கம். அப்படி வெளியேறும் மக்களைப் பிடித்துக் கடத்தி பெண்களைத் தவறாகப் பயன்படுத்தும் கும்பல் ஒன்று. அதில் சிக்கும் சிலரைக் கண்டுபிடித்து தகவல் சேகரிக்கும் நிழல் அலுவலகம். அதில் பணிபுரிகிறார் நாயகன்.
ஒரு ஆபரேஷனில் தன்னால் காப்பாற்றப் பட வேண்டிய பெண் உயிர் இழக்கக் காரணமாகிறார். மன உளைச்சலில் இருந்தாலும் மற்றொரு வேலைக்காகப் பயணப்படுகிறார். இன்னொரு பெண் இன்னொரு மிஷன். அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முடிந்ததா. அந்தக் கும்பலுக்கு உதவுபவர்கள் யார் என்பது தான் ஹ்யூமின்ட் (Humint) படத்தின் கதை.
ஹியூமின்ட் என்பது ஹியூமன் இண்டெலிஜென்ஸ் என்பதன் சுருக்கம் தான். தங்கள் அமைப்புக்குத் தகவல் தரும் நபர்களைப் பாதுகாக்கும் கடமை இருக்கிறது. ஆனாலும் நாடு என்று வரும் பொழுது அவர்களை இழக்க நேர்வது சகஜம் என்கிறார்கள் அதன் தலைவர்கள். நம்மை நம்பி உண்மையைச் சொல்பவர்களை நாம் கைவிடக் கூடாது. காப்பாற்றியே ஆகவேண்டும் என்று வாதாடுகிறார் நாயகன் ஜோ.
வட கொரியாவில் அவர் காப்பாற்றப் போராடும் பெண்ணுக்கு ஒரு காதலன். இவர்களுக்கிடையில் ஒரு போராட்டம் ஏற்படுகிறது. நோக்கம் ஒன்றாக இருந்தாலும் நாடு வேறல்லவா. கடைசியில் என்ன ஆனது.
மிக மெதுவாக நகரும் கதை. ஒரு கட்டத்தில் அந்தப் பெண்கள் அடைக்கப் பட்டிருக்கும் இடத்துக்கு வந்ததும் சூடு பிடிக்கிறது. உளவு அமைப்புகள் தங்களால் பிடிக்கப் படும் நபர்களை எப்படி நடத்துகின்றன. மனிதர்களைக் கடத்தும் ரஷ்யக் கும்பலுக்கு இந்த அமைப்பிலிருந்து உதவி செய்வது யார் என்பதெல்லாம் தெரிந்த பிறகு பரபரவென்று பறக்கிறது படம். கதையென்று பார்த்தால் புதுமை எதுவும் இல்லை. மிக மெதுவாக நகரும் அரை மணி நேர முதல் பாதி சற்றே பொறுமையைச் சோதித்துப் பார்க்கிறது.
முதலில் வரும் சண்டைக் காட்சியும் கடைசி நாற்பது நிமிடத் துப்பாக்கிச் சண்டைகளும் போதும் இந்தப் படத்தைப் பார்க்க. குடோனில் நடைபெறும் அந்த உச்சக்கட்டச் சண்டைக் காட்சி தான் ஹைலைட். பனிப் பாதையில் இரண்டு கார்களுக்கிடையே நடக்கும் துரத்தலும் அசத்தல்.
ரூ சுங் வான் இயக்கத்தில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் நிச்சயம் ஆக்ஷன் பிரியர்களை ஏமாற்றாது. ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் தரம். கிளைமாக்ஸில் பின்னணி இசையில் வரும் வயலின் ஓசை இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.