

காவல்துறை நடவடிக்கைகள், துப்பறிவாளர்கள் கதைகள், கேங்ஸ்டர் கதைகள் என வந்து கொண்டிருக்கும் மலையாளப் படவுலகிலிருந்து டெக்னோ த்ரில்லர் என்ற வகையில் வந்திருக்கும் படம் தான் ஐ ஆம் காதலன்.
தனது படிப்பு மற்றும் வேலையைக் காரணம் காட்டி தன்னை விட்டு விலகிப் போகும் காதலி. தன்னை அடித்து அவமானப்படுத்திய அவளது தந்தை. அவரது நிறுவனத்திற்கு எதிராகத் தனது ஹாக்கிங் திறமையை உபயோகப்படுத்தி பிரச்னையை ஏற்படுத்துகிறார் நாயகன் விஷ்ணு (நாஸ்லேன் கபூர்). இவர்கள் காதல் என்ன ஆனது? பழிவாங்கல் எதுவரை சென்றது? என்பது தான் ஐ ஆம் காதலன் படத்தின் கதை.
மனோரமா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம், காதலையும் அதன் பிரச்சினைகளையும் வேறு விதத்தில் அணுகுகிறது. ஏகப்பட்ட அரியர்களை வைத்திருக்கும் தனது காதலன் விஷ்ணுவைத் திருத்த முடியாது எனத் தெரிந்து அவரிடமிருந்து விலக முடிவெடுக்கிறார் அவரது காதலி ஷில்பா (அனிஷ்மா).
ஷில்பாவின் தந்தை திலீஷ் போத்தன் ஒரு மிகப்பெரிய நிதிநிறுவன அமைப்பின் நிறுவனர். கோபக்காரர். தனது மகளை விட்டு விலகச் சொல்லி எச்சரிக்கை செய்வதோடு மட்டுமல்லாமல் ஓங்கி அறைந்து விடுகிறார். அவமானத்தில் குறுகிப் போன விஷ்ணு அவரைப் பழி வாங்க முடிவெடுக்கிறார். அதற்குத் தனது கம்பியூட்டர் மூளையை உபயோகப்படுத்தி பிரச்னை ஏற்படுத்துகிறார்.
யார் இப்படி செய்வது என்று கண்டறிய மற்றொரு ஹேக்கரான லீஜு மோளை அணுகுகிறார் திலீஷ். இரண்டு ஹேக்கர்களுக்கு இடையேயான கண்ணாமூச்சி ஆட்டம் எப்படி முடிந்தது என்பது தான் மீதிக்கதை. சுவாரசியமான களத்தை எடுத்த இயக்குனர் அதில் முழுதும் இறங்காமல் மேலோட்டமாக அணுகி கடைசி வரை கொண்டு சென்று விட்டார்.
பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும் ஹேக்கிங் சமாச்சாரங்கள் பெரிய பாதிப்புகள் எதையும் செய்யாததால் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அந்த ஹேக்கிங் விளையாட்டுகளையும் இவர்கள் நகைச்சுவையாக அணுகுவதால் எந்தவிதமான அச்சமோ பதட்டமோ ஏற்படவில்லை. இது மிகப் பெரிய பலவீனம்.
இந்தப் படத்தின் மிகப் பெரிய குறை என்னவென்றால் அது இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட காதல். முதலில் இருந்தே அதில் எந்த விதமான அழுத்தமோ, ஆழமோ தெரியவே இல்லை, இப்படியொரு காதலிக்கு எதிராக வாழ்க்கையைப் பணயம் வைக்கும் ஒரு விளையாட்டை விளையாட எந்தவிதமான காரணமும் இல்லை. அந்தப் பெண்ணோ மிகச் சுலபமாக மனதை மாற்றிக் கொள்கிறார். 'என்னடா காதல் இது?' என்று தானிருக்கிறது. எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோமோ அதை நானே கெடுத்துவிட்டேன் என்று விஷ்ணு சொல்லும்போது அப்படியா என்று நாம் கடந்து சென்று விடுகிறோம். அவ்வளவு பலவீனமான ரைட்டிங்.
விஷ்ணுவாக நடித்திருக்கும் அஸ்லேன் கபூர் நிறைவாகச் செய்திருக்கிறார். மிகவும் சிரமப்படவெல்லாம் தேவைப்படாத ஒரு கதாப்பாத்திரம். அதற்கு என்ன தேவையோ அதைச் செய்திருக்கிறார். அவருக்கு நண்பர்களாக வரும் நடிகர்களும் பரவாயில்லை. இரண்டு ஹேக்கர்களுக்கு இடையில் நடைபெறும் போட்டிகளை இவர்கள் இன்னும் அழகாகப் பரபரப்பாகக் காட்சிப் படுத்தியிருக்கலாம். இசையில் இருக்கும் வேகம் காட்சிகளில் சுத்தமாக மிஸ்ஸிங். இப்படித் தான் நடக்கப் போகிறது என்று தெளிவாகத் தெரிவதும் ஒரு குறை. கதை மட்டுமல்ல டெக்னீக்கலாகவும் மேக்கிங்கிலும் ஆவரேஜ் என்பது தான் உண்மை.
சற்றே வித்தியாசமான தலையைச் சுற்றவைக்காத ஒரு ஜாலியான படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை முயலலாம். இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம் என்பதும் ஒரு ஆறுதல்.