

24/7/2026 முதல் நெட் பிளிக்சில் வெளியான இந்த ஹிந்தி வெப் சீரிஸ் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது. மொத்தம் 8 எபிசோடுகள். ஒவ்வொன்றும் சராசரியாக 30 நிமிடங்கள், ஆக மொத்தம் 4 மணி நேரம் இருந்தால் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம். முக்கியக் கதாப்பாத்திரங்கள் 6 பேர் தான். அதிலும் நாயகன், நாயகிகள் இருவர் ஆக மொத்தம் 3 பேர் மட்டுமே 90% கதையில் வருவதால் எந்தக் குழப்பமும் இல்லாமல் ரசிக்க வைக்கும் ஒரு Feel குட் வெப் சீரிஸ் இது.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு வக்கீல். குடும்பநல கோர்ட்டில் தம்பதிகளுக்கு விவாகரத்து வாங்கித் தரும் டைவர்ஸ் ஸ்பெஷலிஸ்ட் லாயர். இது மாதிரி பல டைவர்ஸ் கேஸ்களைப் பார்த்ததாலோ என்னவோ நாயகிக்குத் திருமணம், குழந்தை என்ற கட்டமைப்பில் நம்பிக்கை இல்லை. திருமணம் செய்து கொண்டால் தன் அம்மாவைக் கவனிக்க முடியாமல் போய் விடும் என்ற பயமும் அவர் மனதுக்குள் இருக்கிறது.ஆனாலும் அம்மாவின் வற்புறுத்தலுக்காக அம்மா பார்க்கும் மாப்பிள்ளைகளை ஒரு இடத்துக்கு வரச்சொல்லி ஏதாவது காரணம் சொல்லித் தட்டிக்கழித்துக் கொண்டு இருக்கிறாள். ஒவ்வொருவரும் தன் லட்சியத்தை நோக்கிப்பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள்.அந்த எண்ணத்துக்கு ,அந்த லட்சியப்பயணத்துக்கு காதல், கல்யாணம், குழந்தை எதுவும் தடையாக இருக்கக்கூடாது என்று நினைப்பவள்.
நாயகன் அமெரிக்காவில் ஐ டி ஊழியராகப் பணி புரிந்து அந்த நாட்டுக்கலாச்சாரம், அவசரம், நாகரீகம் பிடிக்காமல் இந்தியாவுக்குத் திரும்ப வந்தவன். இப்போது ஒரு பெரிய நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் நல்ல சம்பளத்தில் பணி புரிகிறான். தன் அம்மாவின் விருப்பத்துக்கு இணங்க ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறான்.
நாயகி தான் அந்தப் பெண். ஒரு ரெஸ்ட்டாரண்ட்டில் நாயகன், நாயகி சந்திப்பு நடக்கிறது. இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போகிறது. ஆனால் நாயகி அதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. நண்பர்களாகப் பிரிகிறார்கள்.
ஒரு நாள் இரவு திடீரென நாயகியிடமிருந்து போன். ஒரு பிரச்சனை. உன் அபார்ட்மெண்ட்டில் வந்து ஒரு நாள் தங்கிக் கொள்ளலாமா? என்று நாயகி கேட்க நாயகன் ஓக்கே சொல்கிறான்.
நாயகி நாயகனின் அபார்ட்மெண்ட்க்கு வருகிறாள். நாயகனின் அம்மா இருப்பது வேறு ஊர். நாயகன் இங்கே தனிமையில் தான் இருக்கிறான். நாயகன், நாயகி இருவரும் ஒரே வீட்டில். தனித்தனி அறைகளில் தங்குகிறார்கள். ஒரு நாள் தங்கல் என்பது நீட்டிக்கப்படுகிறது. பல நாட்கள் ஒன்றாகத் தங்குகிறார்கள்.
இப்போது நாயகன், நாயகி இருவரும் நெருக்கமாகிறார்கள். உடலாலும், மனதாலும் இணைகிறார்கள்.
இந்தக்கதை இப்படியே இருக்கட்டும். 8 வருடங்கள் கழித்து நாயகன் ஒரு மலைப் பிரதேசத்தில் ஒரு கபே ஆரம்பித்து இன்னொரு பெண்ணுடன் இருக்கிறான். இந்த முஷாபிர் கபே என்பது நாயகனின் கனவு இது ஹோட்டல் மட்டுமல்ல. பயணிகளின் சரணாலயம். அங்கே வரும் பயணிகள் தங்கள் அனுபவங்களை அங்கே பதிவு செய்யலாம். மியூசியம் போல பாதுகாக்கப்பட்ட அவர்களது பதிவுகளை அடுத்த பயணத்தில் அவர்கள் கண்டு ரசிக்கலாம்.
நாயகன் நாயகியை ஏன் பிரிந்தான்? இப்போது இருக்கும் பெண்ணுடன் லிவ்விங் டுகெதர் வாழ்வை எட்டு வருடங்களாகத் தொடர்வது நாயகிக்குத் தெரியுமா? என்ற கேள்விகள் எழும்போது நாயகி அந்த முஷாபிர் கபேக்கு பல வருட இடைவெளிக்குப்பின் வருகிறாள். இதற்குப்பின் நிகழும் உணர்ச்சிப் போராட்டங்கள் தான் மீதித்திரைக்கதை.
நாயகியாக (சுதா)வேதிகா பிரிண்ட்டோ நம் மனதில் பிரிண்ட் போட்டது போல் ஒட்டிக்கொள்கிறார். மொத்த வெப் சீரிசையும் இவர் தான் ஆக்ரமித்துக் கொள்கிறார். கமல், சிவாஜி படங்களில் எப்படி அவர்களது ஆதிக்கம் அதிகமாக இருக்குமோ அந்த அளவுக்கு நம் மனதில் வியாபிக்கிறார். அவரது கேரக்டர் டிசைன் தெளிவாக எழுதப்பட்டிருப்பதால். அவரது கொள்கைகள், கோட்பாடுகள் முரணாகத் தோன்றினாலும் நமக்குப் பிடிக்கும் விதத்தில் அவர் நடிப்பு அமைகிறது.
இன்னொரு நாயகியாக (ப்ரீத்தி)மஹிமா மக்வானா பாந்தமாய் நடித்திருக்கிறார். நாயகியோடு ஒப்பிடும்போது இவருக்கான ஸ்க்ரீன் ஸ்பேஸ் மிகவும் குறைவு. நாயகிக்கு 85% எனில் இவருக்கு 15% காட்சிகள் என வைத்துக் கொள்ளலாம். ஆனாலும் வில்லி ரோலாக இல்லாமல் நாயகியாகவே வருகிறார்.
நாயகியின் அம்மா, நாயகனின் அம்மா இருவர் நடிப்பும் நல்ல குணச்சித்திரக்கலவை. முஷாபிர் கபே உருவாக உறுதுணையாக இருக்கும் வயதான ஜோடியாக வரும் இருவரும் அருமையான நடிப்பு.
நாயகனின் வீட்டில் பணிப்பெண்ணாக வரும் அந்த அக்கா கேரக்டர் டிசைன் கே பாலச்சந்தர் படத்தில் வருபவர் போல அருமையான நடிப்பு.
இராண்டாவது நாயகியாக வரும் ப்ரீத்தியின் எழுத்துத் திறமையைப்பார்த்து அவரை ஒரு தலையாகக் காதலிக்கும் ரைட்டரின் நடிப்பும் கச்சிதம். அவரது கேரக்டரைப் பார்க்கும்போது ரைட்டர் சி எஸ் கே நினைவு வந்தது. திவ்யபிரகாஷ் தூபே என்பவர் எழுதிய முஷாபிர் கபே என்ற நாவலில் இருந்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
சரண்யா ராஜகோபால் தான் வசனகர்த்தா.பிரித்து மேய்ந்திருக்கிறார். இயக்கம் ருச்சிர் அருண்.
அனிருத்தா பட்னாகரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணுக்குக் குளுமை. இரு நாயகிகளின் க்ளோசப் ஷாட்சும் அபாரம்.
பின்னணி இசை, எடிட்டிங், ஆடை வடிவமைப்பு போன்ற அனைத்து அம்சங்களும் தரம். மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் லிவ்விங் டு கெதராக வசிக்கும் நாயகன், நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள் வெப் சீரிசின் பல காட்சிகள் இன்ஸ்பிரேசனாக இருந்திருக்கக்கூடும்.
பின் பகுதியில் நாயகன் வாழ்வில் இன்னொரு பெண் வருவது சூர்யா பூமிகா, ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் படத்தை நினைவு படுத்தியது.
சபாஷ் டைரக்டர்
1. தனக்குப் பார்க்கப்பட்ட மாப்பிள்ளைகளைத் தட்டிக்கழிக்கும் நாயகியின் ஓப்பனிங்க் சீன் ரகளையான காட்சி. கீதாஞ்சலி (இதயத்தைத்திருடாதே) நாயகி கிரிஜாவை நினைவுபடுத்தியது.
2. நடுராத்திரியில் திடீர் என நாயகி நாயகனின் அபார்ட்மெண்ட்க்கு வந்து விட நாயகனின் சமாளிப்புகள் அருமை.
3. நாயகனின் வீட்டில் பணிப்பெண்ணாக வரும் அந்த அக்கா கேரக்டர் நாயகியைப் பார்த்து மிரள்வது செமக்காமெடி.
4. முதல் நான்கு எபிசோடுகள் முழுக்க நாயகன் - நாயகி இருவர் மட்டும் தான் என்றாலும் ஒரு சீன்கூட போரடிக்காமல் கலகலப்பாகக் காட்சிகளை அடுக்கிய விதம் செம.
5. ஐந்தாவது எபிசோடில் நாயகனின் அம்மா நாயகனின் அபார்ட்மெண்ட்க்கு முன் கூட்டியே தகவல் எதுவும் சொல்லாமல் வந்து விட. நாயகன், நாயகி இருவரும் கலவரம் அடைவது, சமாளிப்பது காமெடிக்கலக்கல்.
6. நாயகன், நாயகி இருவருக்கும் பிரிவு ஏற்படும் காட்சி நல்ல உருக்கம். நல்ல எமோஷனல் கனெக்ட்டை ஆடியன்சுக்குக் கடத்தியது.
7. வெப் சீரிசின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் அட்டகாசமான வசனங்கள். டயலாக் ரைட்டர் ஒரு சைக்காலஜிஸ்ட்டோ என சந்தேகம் எழுப்பும் வகையில் ஒவ்வொரு வசனமும் இருந்தது( காதல் கோட்டை புகழ் இயக்குநர் அகத்தியனின். விடுகதை படத்தில் இதே மாதிரிதான் தத்துவார்த்த வசனங்கள் வரும்)
8. மும்பை போன நாயகி நாயகனுக்குத் தெரியாமல் ஒரு விசிட் அடித்து நாயகனை நேரில் சந்திக்காமல் தொலைவிலிருந்து ரசித்து விட்டு செல்வது அதே போல் நாயகனும் நாயகி ஒர்க் செய்யும் இடத்துக்கு வந்து அவரை சந்திக்காமல் தொலைவிலிருந்து ரசிப்பது. கவிதையான காட்சிகள்.
9. இந்த வெப் சீரிசில் வில்லன் என யாரும் இல்லை என்பது மிகப்பெரிய பிளஸ். இயக்குநர் விக்ரமனின் படம் போல் பங்குபெறும் அனைத்துக் கேரக்டர்களும் நல்லவர்களே. இது ஒரு பாசிட்டிவ் எனர்ஜியைத் தருகிறது.
10. யாருமே எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அருமை.
11. நாயகனின் முதல் காதல் கதை இப்போதைய லிவ்விங் டுகெதர் வாழ்க்கை என நான் லீனியர் கட்டில் காட்சிகளை கடந்த காலம், நிகழ் காலம் என மாற்றி மாற்றி காட்டப்படுகிறது.
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1. குழந்தை வேண்டாம், மேரேஜ் வேண்டாம் என்று நினைக்கும் நாயகி பாதுகாப்பில்லாத உறவுக்கு எப்படி சம்மதிக்கிறாள்?
2. தான் கர்ப்பமாக இருப்பதாக ரிப்போர்ட் சொல்வதாகக்கூறும் நாயகி பின் நாயகனிடம் அது தவறுதலான ரிப்போர்ட் என டாக்டர் சொன்னதாக சொல்வது எப்படி?கர்ப்பவதிக்கு அது உண்மையா?என்பது தெரியாதா?
3. லாக் டவுனில் நாயகனும், இன்னொரு நாயகியும் சந்தித்து ஜோடி ஆனார்கள் என்பது வெறும் வசனம் மூலமாக மட்டும் சொல்லப்படுவதால் அது எமோஷனல் கனெக்டைக் கொடுக்கவில்லை. விஷூவலாகக்காட்டி இருக்க வேண்டும்.
4. நாயகியுடன் இருக்கும்போது கலகலப்பாக, சுறுசுறுப்பாக இருக்கும் நாயகன் இன்னொரு நாயகியுடன் இருக்கும் காட்சிகள் அந்த அளவு இணக்கமாக இல்லை. செத்தவன் கையில் வெத்தலை பாக்குக்கொடுத்தது போல் தேமே என்ற நடிப்பு.
5. க்ளைமாக்சுக்கு முன் நாயகனை சந்திக்க முஷாபிர் கபே வரும் நாயகி நாயகன் அவுட் ஆப் ஸ்டேஷன் என்பதால் கிளம்புவதாக சொல்லும்போது இன்னைக்கு நைட் தங்கிட்டு நாளை அவரைப் பார்த்துவிட்டுத்தான் போக வேண்டும் என்று நாயகியை நிறுத்துவது பெரிய ரிஸ்க். ப்ரீத்தி அந்த முடிவை ஏன் எடுத்தார்?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 13+ குடும்பத்துடன் பார்க்கலாம். இரண்டு காட்சிகளில் இதழ் முத்தம் உண்டு.
கல்கி கமெண்ட் - Feel குட் மூவி பார்க்க நினைபவர்கள், காதலர்கள், தம்பதிகள். அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான வெப் சீரிஸ் இது. ரேட்டிங். 3.5/5.
ரசித்த வசனங்கள்
1. புதுப்பாதைல போகும்போது பயமாத்தான் இருக்கும், ஆனா ஏதோ புதுசாப் பண்றோம்னு திரில்லிங்கா இருக்கும்.
2. ஒரு பொண்ணு மனசை ஜெயிக்க அவ பிரண்டையும் இம்ப்ரெஸ் செய்யனும்.
3. நம்மைப்பற்றி எதுவுமே தெரியாத புது ஆட்களிடம் பேசுவது மிக எளிது.
4. காதலோட இயக்கம் வினோதமானது. அது திரும்பத்திரும்ப வரும்.
5. இழந்த காதலை நோக்கிப் பயணிப்பது அர்த்தமுள்ளதா வாழ்க்கையை மாற்றும்.
6. ஆழமா நேசிச்சா ஒருத்தரை மனசில் இருந்து அழிக்க முடியாது.
7. மனிதனோட உடம்பில் ஏழு வருசத்துக்கு ஒருமுறை எல்லா செல்களும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும். அதனால் ஒவ்வொரு ஏழாவது வருடத்திலும் மனிதனின் குணம் மாறும்.
8. பயணிகளில் இருவகை. 1 உலகைத்தேடும் பயணி 2 தன் வீட்டைத்தேடும் பயணி.
9. சில சமயம் ரிஸ்க் எடுக்காம இருப்பதே பெரிய ரிஸ்க் தான்.
10. ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் நல்ல துணை கிடைப்பது கஷ்டம். அன்பைப்பெறுவது அதை விடக்கஷ்டம்.
11. பல காரணங்களுக்காக பலர் நம் வாழ்வில் வந்து போவாங்க. ஆனா நம்ம கூடவே தங்கி விடுவார்களே அவர்களுடன் சேர்ந்து வாழ்வது சுகம்.
12. வார்த்தைகளால் சொல்லித்தான் காதலை உணர வைக்கனும்னு இல்லை.
இந்தத் தொடரின் முழுமையான விமர்சனத்தை வாசிப்பதன் மூலம், உங்கள் வீக்வெண்டை எப்படிக் கழிக்கலாம் என்ற தெளிவான வழிகாட்டுதலைப் பெற்று, மனதுக்கு நெருக்கமான ஒரு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை நீங்கள் எளிதாகத் தேர்ந்தெடுக்கலாம்.