விமர்சனம்: மை டியரஸ்ட் அஸ்ஸாஸின் - ஊறும் பிளட் இல்லை, இது ஆரம் பிளட்டுக்கான துரத்தல்!

My Dearest Assassin
My Dearest Assassin
Updated on

ஆரம் பிளட் என்ற ஓர் அரிதான ரத்த வகை. ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்ட போதைக் கடத்தல் கும்பல் தலைவன் ஒருவன். அவனுடைய ரத்த மாற்றுக்கு இந்த வகை ரத்தம் உள்ள மனிதர்கள் தேவை. அவர் உயிர் பிழைக்க எவ்வளவு மனிதர்கள் வேண்டுமெனில் இறக்கலாம் என்று நினைக்கிறது அவருடைய கும்பல். அப்படி ஓர் அரிய ரத்தமுள்ள ஒரு பெண் தான் நாயகி லான். அவளுடைய பெற்றோர்களைக் கொன்று அவளைக் கடத்த முனைகிறான் வில்லன். அப்பொழுது அங்கு வரும் இன்னொரு கும்பல் அந்தப் பெண்ணைக் காப்பாற்றி அழைத்துப் போகிறது. அந்தக் கும்பலின் பெயர் ஹவுஸ் ஆப் 89. அவர்களும் ஒரு கொலைகாரக் கும்பல் தான். ஆனால் நல்ல கொலைகாரர்கள். அந்த வில்லனின் வேட்டையும் தொடர்கிறது. அந்தப் பெண் காப்பாற்றப்பட்டாளா. ரத்தம் கிடைத்ததா. வில்லன் என்ன ஆனான் என்பது தான் மை டியரஸ்ட் அஸ்ஸாஸின் (My Dearest Assassin) படத்தின் கதை.

நெட்பிளிக்ஸில் (Netflix) வெளியாகியுள்ள அதிரடி ஆக் ஷன் படமான இந்தப்படத்தை இயக்கியுள்ளவர் தவீவத் வானதிவாந்தா, இவரைத் தவிர இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் பெயர்களைச் சொல்வதும் எழுதுவதும் கடினம். இந்தப் படத்தின் முக்கியப் பாத்திரங்கள் லான், பிரான், எம், வில்லன் சாபா. தன்னுடைய ரத்தத்துக்காகப் பெற்றோர்களைக் கொன்ற வில்லனைக் கொல்லத் துடிக்கிறார் லான். அவருக்கு உதவும் காதலனாக பிரான். இவர்கள் நண்பனாக எம்.

ஆரம் பிளட் என்ற இந்த ரத்தத்தைத் தேடும் படலத்தில் பல நாடுகளுக்கு அலைகிறார் வில்லன். பதினைந்து வருடங்கள் ஆனாலும் அந்தச் சின்னப் பெண் வளர்ந்து நிற்பதைக் கண்டு பிடித்து விடுகிறார். அவரைக் காப்பாற்ற பிரான் குடும்பத்தினர் போராடுகின்றனர். பல சண்டைகள் , லிட்டர் கணக்கில் ரத்தம் பின்னர் சுபம்.

கதையென்று பார்த்தால் சாதாரணமான கதை தான். பெரிய திருப்பங்களோ புதுமையோ இல்லை. ஆனால் சண்டைப் படங்களுக்கு இதெல்லாம் எதற்கு. கத்தி, அருவாள், துப்பாக்கி, வெடிகுண்டு இவை போதாதா. அதைத் தான் நம்பியிருக்கிறார் இயக்குநர்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ஏக் தின் (2026) - ஹிந்தி - ரொமாண்டிக் ட்ராமா!
My Dearest Assassin

நாயகன் வீட்டில் நடக்கும் சண்டைகள், கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் இது இரண்டு மட்டுமே படத்தைத் தாங்குகின்றன. ஒவ்வொன்றும் இருபது நிமிடங்கள் வரை ஓடுவதால் பாதிப் படம் இதிலேயே போய் விடுகிறது. வன்முறைக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லை. ஓர் இளைப்பாறல் போல இருக்கட்டும் என்று நட்பையும் காதலையும் தொட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த இரண்டு சண்டைக் காட்சிகள் போதும் படத்தைக் கண் கொட்டாமல் பார்ப்பதற்கு. தன்னைக் காப்பாற்ற இவ்வளவு உயிர்கள் போவதைப் பார்த்து நாயகி வருந்துகிறாள். தானும் ஒரு கொலைகாரி ஆக வேண்டும். அதற்காகப் பயிற்சி கொடுக்கச் சொல்லிக் கேட்கிறாள். அண்ணாமலை படத்தைப் போல ஐந்தே நிமிடப் பயிற்சியில் அப்படியே ஆகிறாள். சண்டைப்படங்களில் எதற்கு லாஜீக். ரத்தம் சூடேறிப் பார்க்கும் அளவு சண்டைக்காட்சிகள் உள்ளனவா. கழுத்து அறுபடுகிறதா அது தானே வேண்டும்.

நல்ல படமா என்று கேட்டால் பதில் இல்லை. பொழுது போகுமா. ரெய்டு, ஓங் பாக் போன்ற படங்கள் பிடிக்கும் ரசிகர்களுக்கு இந்தப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும். போட்டு விட்டால் அது பாட்டுக்கு ஓடி முடிந்து விடும். அப்படிப் பார்க்க வேண்டிய படம் தான் மை டியரஸ்ட் அஸ்ஸாஸின். படம் முடிந்த பிறகு ஒரு டுவிஸ்ட் வைத்திருக்கிறார்கள். அதைத் தவறவிட்டு விட வேண்டாம்.

logo
Kalki Online
kalkionline.com