விமர்சனம்: ஓ' ரோமியோ - ரத்தத்தால் எழுதப்பட்ட ஒரு காதல் கதை!

O' Romeo
O' Romeo
Updated on

சவரக்கத்தியுடன் அலையும் ஒரு பெண் பித்தன். கொலைதான் அவன் தொழில். பெண்கள் பொழுது போக்கு. ரத்தமும் காமமும் அவன் தினசரி நிகழ்வுகள். தன்னுடைய கணவனின் மரணத்துக்குக் காரணமான நான்கு நபர்களை அழிக்க வேண்டும். அதற்கு உன் உதவி வேண்டும் என்று அவனைத் தேடி வரும் நாயகி. இவர்களுக்குள் மலரும் காதல். நாயகன் மாறினானா, பழி வாங்குதல் நிறைவேறியதா என்பது தான் ஓ' ரோமியோ (O' Romeo) படத்தின் கதை.

நாயகன் உஸ்தரா என்ற பாத்திரத்தில் ஷாஹித் கபூர். இரண்டு கைகளிலும் கத்தியுடன் பார்க்கும் கழுத்தை எல்லாம் அறுக்கிறார். இரவானால் பெண்களுடன் கூத்து. கணவனை இழந்த பெண் அப்சானாவாக திருப்தி திம்ரி. கணவனை இழந்தவள் என்றாலும் காதல் மலர்கிறது. தன்னை மறந்து ஈர்க்கப்படுகிறார்கள். அவளுக்காக அந்த வேலையை ஏற்கிறான். அதில் கொடூரமான ஒரு கொலையாளியான ஜலால் என்ற கேங்ஸ்டரும் அடக்கம்.

  • துப்பாக்கி எடுப்பது என்பது ஒரு திரும்ப வெளி வரமுடியாத ஒரு பாதை. அதைச் செய்யாதே.

  • கை நடுங்காமல், கண் இமைக்காமல் கழுத்தை அறுப்பது என்பது அனைவராலும் செய்ய முடியாது. என் அப்பாவைக் கொன்றவனை அப்படித் தான் நான் செய்தேன்.

  • என்னுடைய காதல் விலை மதிப்பற்றது. அப்படியிருக்க என்னுடைய எதிரியாக நினைக்காதே. அதற்கு விலையே இல்லை.

  • என்னுடைய கவலையை உங்கள் விநாயகர் போக்குவார் என்றால் அவரை வழிபடவும் எனக்குத் தயக்கமில்லை.

இப்படி சில வசனங்கள் வருகின்றன. வரும் இடமும் அது கடத்தும் உணர்வுகளும் ஒரு விதம்.

கொலைகாரன் பற்றிய படம் என்று ஆகி விட்டது. அதுவும் கத்தி தான் ஆயுதம். ரத்தத்துக்குக் குறை வைக்க முடியுமா. ஆரம்பத்தில் நடக்கும் அந்தத் திரையரங்க சண்டை. போதை மருந்து கும்பலுடன் நடக்கும் மோதல். வில்லன் ஜலால் வீட்டில் நடக்கும் சண்டைக்காட்சிகள் என்று ஒவ்வொன்றும் அதகளம். உடலெங்கும் கத்தி நடனமாடுகிறது. ரத்தம் தெறிக்கிறது.

தொண்ணூறுகளில் நடைபெறும் கதை. ஒரு சிதிலமான கப்பல் தான் நாயகனின் வசிப்பிடம். ஜலால் எனப்படும் வில்லன் ஸ்பெயின் நாட்டில் பிரபலமான ஒரு காளை மாட்டுச் சண்டை வீரரும் கூட.

இதையும் படியுங்கள்:
Mr. X திரைப்பட விமர்சனம்!
O' Romeo

உஸ்தரா என்ற பாத்திரத்தில் ஷாஹித் மிகவும் இலகுவாகச் செய்திருக்கிறார். கருணையின்றிக் கொல்வதும், காதலுக்காக உருகுவதும் இயல்பாக வருகிறது. திருப்தி திம்ரியும் என்ன தேவையோ அதைக் கொடுத்திருக்கிறார். நாயகனின் நண்பர்களாக வருபவர்களும் அப்படியே. நாயகனை வழிப்படுத்துபவராக அவருக்கு இந்தக் கொலைப்பணியைக் கொடுப்பவராக நானா பதேகர். கச்சிதம்.

நாயகியின் கணவனாக விக்ராந்த் மாசியும் வில்லனின் மனைவியாக தமன்னாவும் கௌரவ வேடங்களில் வந்து போகிறார்கள்.

ஒரு வன்முறையான படத்தில் காதல் என்பதால் இசைக்கும் குறைவில்லை. என்ன படத்தின் நீளம் தான் அதிகம். ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒளிப்பதிவு நன்றாக இருக்கும் அளவு எடிட்டிங் குறித்துச் சொல்ல முடியவில்லை. சண்டைக்காட்சிகளைப் படமாக்கியது சரி. ஆனால் பல காட்சிகள் நீளமாக படத்தை இழுக்க மட்டுமே உபயோகப் படுத்தப்பட்டு இருக்கின்றன.

போலிஸ் அதிகாரியே உள் கையாக இருப்பதால் படத்தில் காவல்துறை எந்தக் கவலையையும் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. நினைத்த நேரம் நேபாளம், ஸ்பெயின் என்று சென்று வருகிறது. ஆயிரம் கொலைகள் செய்தாலும் நாயகனும் நாயகியும் நல்லவர்கள் என்று காட்டப்படும் கிளைமாக்ஸ் தான் ரொம்ப ஓவர். ஒட்டாமல் நிற்கிறது.

சண்டைப் பிரியர்கள் பொழுது போகவில்லை என்றால் இந்தப் படத்தை பிரைம் வீடியோவில் ஒரு வார இறுதியில் பார்க்கலாம்.

விஷால் பரத்வாஜ் இயக்கி வெளியான படங்களில் மிகவும் பலவீனமான படம் என்று வேண்டுமெனில் இந்தப் படம் அறியப்படலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com