

17/07/2026 முதல் திரையரங்குகளில் வெளியாகி செம ஹிட் அடித்த இந்த தெலுங்குப்படம் இப்போது தமிழ் டப்பிங்கில் 7/8/2026 முதல் அமேசான் பிரைம் தளத்தில் காணக்கிடைக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்த இந்தப்படம் சமந்தாவுக்கு மா இண்ட்டே பங்காரம் (எங்கள் தங்கம்) எப்படி ஒரு பிரேக் கொடுத்ததோ அப்படி ஒரு பிரேக்கை தந்துள்ளது.
ஸ்பாய்லர் அலர்ட் :
கதை நடக்கும் காலகட்டம்: 1980-கள்.
நாயகி சிறுமியாக இருக்கும்போது அவளது அம்மா அவளிடம் நீ நிலா மாதிரி,உன்னை யாரும் தொட முடியாது என்கிறாள்.அவளது வாய் முகூர்த்தம் அப்படியே பலிக்கிறது.அந்த ஊருக்குப்பிள்ளை பிடிக்க வரும் ஒரு கும்பல் சிறுமியாக இருக்கும் நாயகியை கடத்த முயற்சிக்கும்போது நாயகியைத்தொட்டவனுக்கு ஷாக் அடிக்கிறது. அதிர்ச்சியான அவன் அவளை விட்டு விட்டு கிளம்பி விடுகிறான். நாயகி சிறுமியாக இருக்கும்போதே அம்மா இறந்து விடுகிறாள். அப்பாதான் நாயகியை வளர்த்து வருகிறார். நாயகியின் அப்பா ஒரு டாக்டர்.
இப்போது நாயகி பெரியவளாகி விட்டாள்.அந்த ஊர் மக்கள் எப்படியாவது இவளை இந்த ஊரை விட்டுக்கிளப்பிவிட வேண்டும் என பேசி கொள்கிறார்கள். நாயகியை யார் தொட்டாலும் ஷாக் அடிக்கும் என்ற விஷயம் ஊர் மக்களுக்கும் தெரியும்,ஏனோ ஊர் மக்களுக்கு அவளைப்பிடிக்கவில்லை. சரி,ஏதோ ஒரு இளிச்சவாயன் வந்து இவளைத்திருமணம் செய்து அழைத்து போகாமலா இருப்பான் ?எனப்பேசிக்கொள்கிறார்கள்.
நாயகன் இளம் அரசியல்வாதியாக புகழ் பெற வேண்டும் என்ற எண்ணமுள்ளவன்.நாயகனின் தாத்தா தனது 80 கோடி சொத்துக்களை தனது பேரன்களில் யார் முதலில் கொள்ளுப்பேரனைத்தருகிறாரோ அவருக்குத்தான் முழு சொத்தும் என எழுதி வைத்திருக்கிறார் .நாயகனுக்கு போட்டியாக சித்தப்பா பையன் ஒருவன் இருக்கிறான்.இருவரில் யாருக்குத்திருனணம் ஆகி முதலில் குழந்தை பிறக்கிறதோ அவருக்குத்தான் 80 கோடி ரூபாய் சொத்து.
எனவே நாயகன் ரெடிமேட் சப்பாத்தி மாதிரி உடனடி மேரேஜ்க்கு துடிக்கிறான்.நாயகியை அந்த ஊரில் பார்க்கிறான்.எனக்கு இந்த மிட்டாய் தான் வேணும் என்பது போல அடம் பிடித்து இரு தரப்புப்பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது.இதற்கு பின் நாயகியை தொட்டாலே ஷாக் அடிக்கும் என்ற விஷயத்தை நாயகன் முதல் இரவில் அறிந்து கொண்டானா? தாத்தாவின் உயில்படி வாரிசுக்கு என்ன செய்தான்? என்பதை காமெடியாக சொல்லி இருப்பதுதான் மீதி திரைக்கதை.
நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் பிரமாதமாக நடித்திருக்கிறார்.ஒரு ஹீரோயின் ஓரியண்ட்டட் மூவியில் ஹீரோயினின் கேரக்டர் டிசைன் இந்த அளவு வலுவாக எழுதப்படுவது அபூர்வமே! வாய்ப்பை நன்கு பயன்படுத்தி இருக்கிறார்.
நாயகனாக திருவீர் கச்சிதமாக நடித்திருக்கிறார். இவரது உடல்மொழி, காமெடி டைமிங் நன்கு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.
நாயகியின் அப்பாவாக திருடா திருடா புகழ் ஆனந்த் நடித்திருக்கிறார்.
முக்கியமான இந்த மூன்று கேரக்டர்கள் போக, சின்ன சின்னகதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, முரளிதர் கவுட், ஆமணி, கிராந்தி பலிவாடா, கோட்ட ஜெயராம், அஞ்சி மாமா, ஜான்சி ஆகியோர் அவரவருக்குத் தரப்பட்ட கேரக்டரைக் கச்சிதமாக ஏற்று நடித்திருக்கிறார்கள்.
இசை: பரத் மந்திராஜூ. பின்னணி இசை காமெடி சீக்வென்ஸை தூக்கி நிறுத்துகிறது. குசேந்தரின் ஒளிப்பதிவு கிராமிய அழகை கண்முன் நிறுத்துகிறது. ஸ்ரீ வரப்பிரசாத்தின் எடிட்டிங்கில் படம் 137 நிமிடங்கள் ஓடுகிறது.
கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர்: பரத் தர்ஷன்.
சபாஷ் டைரக்டர்:
கதையோட்டத்தில் நாயகன் கொடுக்கும் காமெடி கவுண்ட்டர்கள் நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
இடைவேளைக்கு கொஞ்சம் முன் வரும் அந்த முதலிரவு காட்சி செம காமெடி. இதற்கான பின்னணி இசை அருமை.
'மின்னல் மோகினி' என்று படத்திற்கு டைட்டில் வைத்திருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு, நாயகியைத் தொட்டால் தொடுபவருக்கு ஷாக் அடிக்கும் என்ற கான்செப்ட் புதுசாக இருப்பது அருமை. இந்தக் கதைக் கருவை வைத்து கே. பாக்யராஜ் பாணியில் திரைக்கதை அமைத்த விதம் குட்.
நிச்சயதார்த்தம் நடக்கும்போது மோதிரம் மாற்றும் வைபவம் நடக்கும்போது ஷாக் மேட்டர் நாயகனுக்குத்தெரியாமல் பார்த்துக்கொள்ள செய்யும் ஐடியா குட்.
திருமணம் செய்யத்தாலி கட்டும்போது நாயகனுக்கு ஷாக் அடிக்க அப்போது மகதீரா படக்கதை சொல்லி சமாளிப்பதும் நல்ல காமெடி.
நாடு முழுக்க பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதை பார்க்கும்போது நாயகியை போலவே அபூர்வ சக்தி எல்லாபெண்களுக்கும் வந்தால். எப்படி இருக்கும்?என எண்ண வைக்கிறது.
கட்டா குஸ்தி சாயல் தெரிந்தாலும், மா இண்ட்டே பங்காரம் (எங்கள் தங்கம்) மாதிரி இருந்தாலும், நாயகி முகத்தை மறைத்துக்கொண்டு செய்யும் அந்த கோயில் ஆக்ஷன் சீக்வென்ஸ் அதகளம்.
லாஜிக் மிஸ்டேக்ஸ் (குறைகள்):
யார் தொட்டாலும் ஷாக் அடிக்கும் அபூர்வ சக்தி கொண்ட நாயகியை அவள் பெற்றோர் எப்படி வளர்த்திருப்பார்கள்? பாலூட்டி, குளிக்க வைக்கும்போது ஷாக் அடித்திருக்குமே? என்ற கேள்விக்கு பதிலில்லை. (கிளைமாக்ஸில் ஒரு மாதிரி 'சமாளிபிகேஷன்' பதில் தருகிறார்கள்).
அபூர்வ சக்தி கொண்ட நாயகி டம்மியாக, வெட்டியாக ஊர் சுத்திக்கொண்டு இருக்கிறார். கன் ஃபைட் காஞ்சனா மாதிரி புரட்சி பெண்ணாக மாறியிருக்கலாமே? அந்த சக்தியைசமூகத்திற்கு உபயோகமாய் மாற்றியிருக்கலாமே?
வில்லனாக வரும் நாயகனின் தம்பி, 80 கோடி ரூபாய் சொத்தை அடைய 'செட்டப் செல்லம்மா'வாக ஒரு பெண்ணை அழைத்து வருவது, மாட்டிக்கொள்வது நம்பும்படி இல்லை.
அடல்ட் கன்டென்ட் வார்னிங்: 16+
கல்கி கமெண்ட்: ஜாலியான காமெடிப் படம்; ஃபேமிலி என்டர்டெய்னர். பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.