

எம். சசிகுமார் முதல்முறையாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வெப் சீரிஸ் இது. லீலை (2012), கொலைகாரன் (2019) ஆகிய இரு படங்களை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வதந்தி (2022) என்ற வெப் சீரிஸை இயக்கியிருந்தார். அது மாபெரும் ஹிட் ஆனது. அவரது முதல் படமான லீலையில் கிடைத்த பெயரை விட, வெப் சீரிஸில் நல்ல பெயர் கிடைத்தது.
வதந்தி வெப் சீரிஸ் முதல் பாகத்தை பார்க்காதவர்களும் இந்த இரண்டாம் பாகத்தை பார்க்கலாம். இரண்டும் தனித்தனி கதை.டெக்னிக்கல் டீம் இரண்டுக்கும் ஒன்று தான். நடிகர்கள் வேறு வேறு.விவேக் பிரசன்னா, ஹரீஷ் பெறாடி மட்டும் விதிவிலக்கு; இரண்டு பாகங்களிலும் வருகிறார்கள்.
மொத்தம் எட்டு எபிசோடுகள் கொண்டது.ஒவ்வொரு எபிசோடும் 30 நிமிடங்கள் டூ 40 நிமிடங்கள், ஆக மொத்தம் ஐந்தரை மணி நேரம் ஒதுக்கினால் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம்.
ஸ்பாய்லர் அலெர்ட் :
மத்திய அரசாங்கம் மதுரையிலிருந்து சென்னை வரை ஒரு எட்டு வழி சாலை போடுகிறோம் என்று வேலையை ஆரம்பிக்கிறது.எட்டு என்றாலே அஷ்டமத்தில் சனி தானே? ரோடு போடுவதற்காகக்குழி தோண்டும்போது ஒரு எலும்புக்கூடு கிடைக்கிறது.மத்திய அரசின் திட்டத்திற்கு இடையூறு செய்வதற்காகவே மாநில அரசின் சதித்திட்டம் இது.அவர்களாகவே எங்கிருந்தோ ஒரு எலும்புக்கூடை செட்டப் செய்து போட்டிருக்கிறார்கள் என மத்திய அரசு குற்றம் சாட்ட மாநில அரசு அதை மறுக்கிறது.
நாயகன் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் கடவுளிடம் வேண்டிக்கொண்டு தாடி வளர்ப்பவர். ஒரு பனிஷ்மெண்ட் ட்ரான்ஸரில் புதிய இடத்துக்கு மதுரைக்கு எஸ்.ஐ ஆகப்பொறுப்பேற்கிறார். அவர் தான் இந்த கேசை கையில் எடுக்கிறார்.
வில்லனின் பெயர் முடக்கத்தான் மணி.இவனுக்கு ஒரு தங்கை, ஒரு காதலி உண்டு. காதலி,தங்கை இருவரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலுக்கு போகிறான். ஆனால் கொலை செய்யப்பட்ட இருவரின் பிணங்களும் போலீசுக்குக்கிடைக்காததால் ரிலீஸ் ஆகிறான். நாயகன் இன்வெஸ்டிகேட் செய்யும் அந்த எலும்புக்கூடு கேஸ் மூலம் வில்லன் மீண்டும் ஜெயிலுக்குப்போகிறான்.வில்லன் நிஜமாகவே. இரு கொலைகளையும் செய்தானா? இல்லையா? இந்தக்கேசில் இருக்கும் மர்மம் என்ன? என்பதை கண்டு பிடிப்பதுதான் இந்த வெப் சீரிசின் மீதித்திரைக்கதை.
நாயகனாக எம்.சசிக்குமார் அருமையாக நடித்திருக்கிறார்.ஆனால் போலீஸ் கம்பீரம் இல்லை.இதுதாண்டா போலீஸ் பட ரிலீசின்போது ஒரு கமலோ,ரஜினியோ காட்டாத போலீஸ் கம்பீரத்தை டாக்டர்.ராஜசேகர் காட்டி இருக்குறார் என பிரபல பத்திரிக்கை விமர்சனம் எழுதி இருந்தது.ஆனால் சுப்ரமணியபுரம்,நாடோடிகள் படங்களில் பிரமாதமாக நடித்திருந்த எம்.சசிக்குமார் போலீஸ் கேரக்டரில் ஏனோ கெத்து காட்ட முடியவில்லை.
வில்லனாக வரும் யஷ்வந்த்: உடல்மொழி, வட்டார மொழி உச்சரிப்பு அட்டகாசம். மதுரை ஸ்லாங்கை அசால்ட்டாகக் கையாண்டிருந்தார்.
உயர் அதிகாரியாக (எஸ்.பி. ரத்திகா) வரும் அனகா: காட்டும் போலீஸ் கம்பீரம், வீட்டுக்கு வந்ததும் சராசரிப் பெண் ஆவது என உடல்மொழி வித்தியாசத்தில் அசத்துகிறார்.
நாயகனின் உதவியாளராக வரும் விவேக் பிரசன்னா: பாந்தமான நடிப்பு.
நாயகனின் மனைவியாக வரும் அபர்ணா தாஸ் (டாடா புகழ்): குடும்பப் பாங்கான அழகுடன் கூடிய நல்ல நடிப்பு..டாடா படத்தில் நடித்தவர் இவர்.
வில்லனின் காதலியாக ரேவதி சர்மா கச்சிதமான நடிப்பு.இவர் கருடன் படத்தில் நாயகியாக நடித்தவர். வில்லனின் தங்கையாக பூர்ணா நடிப்பும் ஓக்கே ரகம்.
சேத்தன் நடிப்பும் அருமை.
ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் டீமின் உழைப்பு அருமை.
சபாஷ் டைரக்டர் :
1. ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு ட்விஸ்ட் வைத்து விறுவிறுப்பாக இயக்கி இருந்த விதம் அருமை.
2. நாயகன் முஸ்லிம் என்பது தெரியாமல் சாமி பிரசாதமாக திருநீறு தர முயன்று டக் என உண்மை உணர்ந்து சாரி சார்.. நீங்க முஸ்லீம்னு தெரியாம.... என சொல்லும்போதே பரவாயில்லை, கொடுங்க என அதை வாங்கி வைத்துக்கொள்ளும் சீன் மத நல்லிணக்கத்துக்கு ஒரு உதாரணம்.
3. நீ ரிஸ்க் எடுக்கறே...உன் போஸ்ட்டிங்க்குக்கே வேட்டு வைக்கப்போகுது என ஒருவர் எச்சரிக்க. நாயகன் வேறு வழி இல்லாமல் குற்ற உணர்வுடன் செய்யும் சில செயல்கள் மனதைத்தொட்டது.
4."டி.என்.ஏ மேட்ச் ஆகுமா, ஆகாதா?" என்ற ஒரு சீக்வென்ஸில் ஆடியன்ஸை சீட்டின் நுனியில் உட்கார வைத்த விதம் பிரமாதமான டைரக்ஷன்.
5. மனிதன் செய்யும் சிறு தவறு, கிளரிக்கல் எரர் (Clerical error) எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சேத்தன் போர்ஷனை வைத்து உணர்த்திய விதம் அருமை.
6. யூனிஃபார்மில் இருக்கும்போது மிடுக்குடன் இருக்கும் போலீஸ் எஸ்.பி. அனகா மற்றும் எம். சசிகுமார் இருவரும் வீட்டில் மாறுபட்டு அடக்கி வாசிக்கும் பாந்தமான நடிப்பு பிரமாதம்.
7. போலீஸ் ஸ்டேஷனில் வாஸ்து சரிஇல்லை,அதனால் தான் டீக்கடையில் நடத்துகிறேன் என சொல்லும் சீன் மிக இயல்பு.
8. தாடி கெட்டப்பில் இருப்பதாலோ என்னவோ நாயகனிடம் ஒரு சோம்பேறித்தனம் தென்படுகிறது.
9. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் நன்றாக இருந்தாலும் கொலைக்கான காரணம் வலுவாக இல்லை.
லாஜிக் மிஸ்டேக்ஸ் :
1. ஏழு எபிசோடுகள் பொறுமையாகப் பார்த்துவிட்டு, எல்லா மர்ம முடிச்சுகளையும் எட்டாவது எபிசோடில் ஓபன் செய்யும் இயக்குநர், சில விஷயங்களை விஷுவலாகக் காட்டாமல் வசனத்தோடு முடிப்பது ஏனோ முழுமையடையவில்லை.
2 எட்டு எபிசோடுகள் இழுப்பதற்காக சீரியல் கில்லர் போர்ஷனை நாலு எபிசோடுக்கு இழுத்திருக்கிறார்கள்.
3 வதந்தி முதல் பாகம் திரைக்கதை பிரமாதம். அந்த அளவுக்கு க்ரிப்பிங் இதில் இல்லை.
ரசித்த வசனங்கள் :
1. நாம போனோம்னா வேலையை முடிச்சுட்டு வரனும்னு போகக்கூடாது,கேசை முடிச்சுட்டு வரனும்னு போகனும்.
2. என் ஸ்டேஷனுக்கு வந்த யாரையும் போய்ட்டு வாங்க என நான் சொல்வதில்லை,போங்க என்றுதான் சொல்வேன்
3. பொய் என்பது காட்டுத்தீ மாதிரி ,அது பாட்டுக்கு பறந்துட்டுப்போகும்,ஆனா உண்மை என்பது மண்ணுக்குள் புதைந்திருக்கும் வைரம் மாதிரி,நாம் தான் தோண்டி எடுக்கனும்.
அடல்ட் கன்டென்ட் வார்னிங்: 16+ வன்முறை தூக்கல், லிப்-லாக் சீன்கள், கெட்ட வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு.
கல்கி கமெண்ட்: இந்த ஆண்டின் சிறந்த வெப் சீரிஸ் என்ற பட்டியல் எடுத்தால் இதற்கும் இடம் உண்டு. நிச்சயம் பார்க்கலாம்.
ரேட்டிங்: 3/5