இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவான ‘புஷ்பா 2’ படம் கடந்த டிசம்பர் மாதம் 5-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் தற்போது வரை வசூலை குவித்து வருகிறது. இதுமட்டுமின்றி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இந்த படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது; பான் இந்தியா நடிகராகவும் உயர்த்தி உள்ளது. ரசிகர்கள் இவரை வெற்றியின் கதாநாயகன் என்று கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.
சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் ரிலீசான முதல் நாளே ரூ.294 கோடி வசூலித்ததன் மூலம் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்தது.
இந்த படம் உலகளவில் அனைத்து மொழிகளிலும் இது வரை ரூ.1,871 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு கூறியுள்ளது. அதிக வசூல் செய்த இந்திய படங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்தது.
‘புஷ்பா 2’ சிறப்பு காட்சியின் போது பெண் மரணம், அல்லு அர்ஜுன் கைது, ஜாமீன் என பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் ஏற்பட்டாலும் இது படத்தின் வெற்றியை சிறிதும் பாதிக்காமல் வசூலில் சாதனை செய்து வருவதை திரையுலகினர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் கடந்த ஜனவரி மாதம் 30-ம்தேதி நெட்பிளிக்ஸில் ரீலோடட் வெர்ஷன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ‘புஷ்பா 2’ படத்தை போர்ச்சுகீஸ், இந்தோனேசியா, போலந்து மொழியான போலிஷ், ஸ்பானிஷ் மற்றும் தாய்லாந்து மொழியான தாய் ஆகிய ஐந்து மொழிகளில் ஆங்கில சப் டைட்டில்களுடன் ஓ.டி.டி.யில் வெளியிட்டு உள்ளனர்.
இதுவரை எந்த படமும் இந்தளவு 5 வெளிநாட்டு மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டதில்லை. அந்த பெருமையும் புஷ்பா 2 படத்திற்கே கிடைத்துள்ளது.
இதன் மூலம் ‘புஷ்பா 2’ படம் உலகளவில் இன்னும் அதிக ரசிகர்களை சென்றடைய உள்ளது மட்டுமில்லாமல் உலகளவில் இந்திய சினிமாவின் பெருமையையும் எடுத்து செல்ல உள்ளது.