
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகசைதன்யா கதாநாயகனாவும் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவியும் இணைந்து நடித்துள்ள படம் 'தண்டேல்'.
இவர்களுடன் பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் மற்றும் அல்லு அரவிந்த் தயாரித்துள்னர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வழக்கமான மீன்பிடி பயணத்தின் போது தற்செயலாக பாகிஸ்தான் கடல் பகுதிக்கு செல்லும் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த ஒரு மீனவரின் காதல், வீரம் மற்றும் தேசபக்தியை விவரிக்கும் ‘தண்டேல்’ படத்தின் கதைக்களம் உண்மையில் மிகவும் தனித்துவமானது.
சாய் பல்லவி தண்டேல் படத்தில் எப்போதும் போல அற்புதமான நடிப்புடன், நடனத்திலும் அசத்தியுள்ளார். இந்தப் படத்தின் ‘புஜ்ஜி தள்ளி’ என்ற காதல் பாடலும், நாக சைதன்யாவும், சாய் பல்லவியும் ஆடும் ‘நமோ நமச்சிவாய’ என்ற பாடலும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இதில் ‘நமோ நமச்சிவாய’ பாடலில் சாய்பல்லவியும், நாகசைதன்யாவும் போட்டிப் போடு நடனம் ஆடியிருக்கிறார்கள்.
ரூ.75 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் பிப்ரவரி 7-ம்தேதி உலகமெங்கும் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
படங்கள், வாழ்க்கையில் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த நடிகர் நாகசைதன்யாவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாகவே அமைந்துள்ளது என்று சொல்லலாம். சாய்பல்லவி கடைசியாக நடித்த அமரன் திரைப்படம் ரூ.300 கோடி வசூல் செய்த நிலையில் தண்டேல் படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருவதால் தெலுங்கு பட உலகில் இவரை கொண்டாடி வருகின்றனர்.
பிப்ரவரி 7-ம்தேதி திரையிடப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான தண்டேல் உலகளவில் இதுவரை ரூ.100 கோடியை தாண்டி வசூல் வேட்டை நடத்தியுள்ளதாகவும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், தமிழ் மற்றும் இந்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.
நாகசைதன்யாவின் சினிமா வாழ்க்கையில் ‘தண்டேல்’ படம்தான், அதிக பொருட்செலவில் உருவான படம் ம்ற்றும் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசித்த ரசிகர்கள் இனி வீட்டில் இருந்தே பார்த்து ரசிக்கலாம். ஆமாங்க இப்போ தண்டேல் படம் ஓ.டி.டி ரிலீஸ் ஆக போகுது. வரும் மார்ச் மாதம் 14-ம்தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும். இந்த படத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.