ஒரே ஒரு மரணம் போதும், ஆட்டமே க்ளோஸ்! Netflix 'The 8 Show' தொடரின் விசித்திர விதி என்ன?

'ஸ்குவிட் கேம்' தொடரை விட பல மடங்கு கணிக்க முடியாத திருப்பங்கள் மற்றும் மனித மனதின் வக்கிர பக்கங்களை அப்பட்டமாக காட்டும் நெட்பிளிக்ஸின் 'The 8 Show' கொரியன் சீரிஸ் பற்றிய ஒரு அலசல்!
The 8 Show
The 8 Show
Updated on

'ஸ்குவிட் கேம்' தொடர் உலக அளவில் ஏற்படுத்திய தாக்கம் நாம் அனைவரும் அறிந்ததுதான். பணத்திற்காக மனிதர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து விளையாடும் அந்த கொடூரமான ஆட்டம் நம்மை உறைய வைத்தது. ஆனால், அதைவிட பல மடங்கு வெறித்தனமான, கணிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்த, ஒரு கொரியன் சீரிஸ் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

ஆம்! நீங்கள் 'ஸ்குவிட் கேம்' சீரிஸின் தீவிர ரசிகராக இருந்தால், நெட்பிளிக்ஸில இருக்கும் 'தி 8 ஷோ' (The 8 Show) தொடரை கண்டிப்பாக மிஸ் பண்ணக் கூடாது. குறிப்பாக, 2024 இல் வெளியாகி தற்போதும் அதிகம் பேசப்படும் 'The 8 Show' ஸ்குவிட் கேமிற்கு சவாலாக அமைந்துள்ளது.

ஸ்குவிட் கேம் போலவே, இதிலும் பணத்தேவை உள்ள 8 மனிதர்கள் ஒரு மர்மமான போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒரு பிரம்மாண்டமான 8 அடுக்கு மாடிக் கட்டிடத்திற்குள் அடைக்கப்படுகிறார்கள்.

எவ்வளவு நேரம் இந்த கட்டிடத்திற்குள் உயிரோடு இருக்கிறார்களோ, அவ்வளவு கோடி பணம் அவர்கள் கணக்கில் ஏறிக்கொண்டே இருக்கும். கேட்பதற்கு மிகவும் சுலபமாக இருந்தாலும், அங்குதான் கொரிய இயக்குநரின் அசாத்திய மூளை வேலை செய்கிறது.

இந்த கேமின் முக்கிய விதி தோற்றால் மரணம். ஒருவர் மட்டுமே வெல்ல முடியும். யாராவது ஒருவர் இறந்தாலும் ஆட்டம் முடிவுக்கு வரும். யாருக்கும் பணம் கிடைக்காது. எந்த மாடியில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து ஏறும் பணம் நிமிடத்திற்கு நிமிடம் மாறுபடும் பொதுவான உணவு, தண்ணீர் அனைத்தும் 8 வது மாடி வழியாகத்தான் கீழே வர வேண்டும். பொருட்களின் விலை 100 மடங்கு அதிகம்.

ஸ்குவிட் கேமில் போட்டியாளர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு இறப்பார்கள். ஆனால் 'The 8 Show'-வில் ஒருவரை ஒருவர் கொல்லக் கூடாது; அதே சமயம் பிடிக்காதவர்களுடன் ஒரே இடத்தில் வாழ்ந்தாக வேண்டும்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: Obsession (2026) - ஆங்கிலம் - சைக்கலாஜிக்கல் ஹாரர்!
The 8 Show

மாடிகளுக்கு இடையே நிலவும் போராட்டம், மனிதனின் பேராசை, சாப்பாட்டிற்காகக் கீழே இருப்பவர்கள் மேலே இருப்பவர்களிடம் அடிமையாவது என மனித மனதின் வக்கிரமான பக்கங்களை இந்த சீரிஸ் அப்பட்டமாக காட்டுகிறது. ஒவ்வொரு எபிசோடின் இறுதியிலும் வரும் திருப்பங்கள் உங்களை அடுத்து என்ன? என்று சீட்டின் நுனிக்குக் கொண்டு வரும்.

இந்த தொடர் வெறும் பணத்தைப் பற்றியது மட்டுமல்ல, தற்போதைய சமூகத்தில் இருக்கும் ஏழை - பணக்கார இடைவெளியை ஒரு குறியீடாக மிகக் கொடூரமாகக் காட்டியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் அடுத்த வினாடி என்ன நடக்கும் என்று உங்களால் யூகிக்கவே முடியாது. இந்த சீரிஸில் 8 கதாபாத்திரங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 'The 8 Show' வெறும் 8 எபிசோடுகளை மட்டுமே கொண்டது என்பதால், ஒரே மூச்சில் பார்த்து முடித்துவிடலாம்.

வார இறுதியில் பார்க்க நல்ல த்ரில்லர் சீரிஸ் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? உடனே நெட்பிளிக்ஸ் பக்கம்போய் 'The 8 Show'-வை க்ளிக் செய்யுங்கள். தமிழ் ஆடியோவிலும் இது கிடைக்கிறது. பார்த்துவிட்டு, இது ஸ்குவிட் கேமை விட வெறித்தனமாக இருக்கிறதா இல்லையா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com