
பொங்கலுக்கு சொந்த ஊருக்குச்சென்றிருந்தபோது, எனது மனைவியாரின் தம்பி ‘இந்தப் படத்தை உன்னால் அழாமல் பார்க்க முடியாது அக்கா!’ என்று பந்தயம் கட்ட, ஜெயிக்கும் நோக்குடன் படம் பார்த்துத் தோற்றுப்போனோம்!
முத்து, பவளம், மாணிக்கம் என்பவையெல்லாம் உயர்ந்த மதிப்புள்ளவை! அதனால் தான் அவற்றை மனிதர்கள் தங்கள் பெயர்களாக சூட்டிக் கொள்கிறார்கள். தங்கள் தியாக உணர்வாலும், ஈகோ பார்க்காமல் எல்லோருடன் ஒத்துப் போவதாலும், எப்பொழுதும் எளிமையையும், உண்மையையும், நன்றியுணர்வையும் ஒருசேரக் கடைப் பிடிப்பதாலும், ஒரு சிலரே மனிதருள் மாணிக்கமாக உயர்ந்து நிற்கிறார்கள். எவ்வளவு ஏழ்மையில் இருந்தாலும், எவ்வளவு பணத்தேவை இருந்தாலும், அடுத்தவர் காசு ஒரு பைசாவுக்குக் கூட ஆசைப்படாத சில உயர்ந்த பிறவிகள் இன்னும் இவ்வுலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்! மாணிக்கமாக அவர்கள் ஒளி வீசத்தான் செய்கிறார்கள். அப்படி உயர்ந்த ஒரு குறிக்கோளுக்காக வாழும் மாணிக்கமாக ‘திரு மாணிக்கம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி பிரகாசிக்கிறார்!
கதை என்னவோ சாதாரணமானதுதான். ஆனால் எந்தவித மனச்சஞ்சலத்துக்கும் ஆளாகாமல், எத்தனையோ இடர்கள் வந்த போதும் எதனாலும் சிறிதும் தன் குறிக்கோளிலிருந்து மாறாமல், தான் விரும்பியதைச் சாதிக்கும் கதாநாயகனைப் பாராட்ட வார்த்தைகள் வர மறுக்கின்றன… எங்களால் முழுமையைச் சொல்ல முடியாதே என்று வருந்தி!
ஒரு சிறு நகரத்தின் பேரூந்து நிலையத்தில் லாட்டரி சீட்டுகளும், புத்தகங்களும் விற்கும் சிறு கடையின் சொந்தக்காரர் நம் நாயகன். மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மச்சான், மாமன் என்ற சிறு உறவு வட்டம். இளைய பெண் சரியாகப் பேச முடியாதவர். ஆபரேஷன் செய்யப் பெருந்தொகை செலவாகும் என்கிறார் மருத்துவர். செலவை முடிந்த அளவு சரிக்கட்ட மனைவியும் பல வகை சாதங்களை வீட்டிலேயே தயாரித்துக் கம்பனிகளுக்கு அனுப்பி வருகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் வாங்கிய சில லட்சம் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் நேரம். மேலும், கடையைக் காலி செய்யச் சொல்லி கட்டிட ஓனர் வேறு நிர்ப்பந்திக்கிறார். அட்வான்ஸ் கொடுத்துப் புதுக் கடையைப் பிடிக்கக் கையில் வசதியில்லை! பணத் தேவை பூதாகரமாகப் பயமுறுத்தும்வேளை!
கிராமத்து ஏழைப்பெரியவர் ஒருவர் மருந்து வாங்க டவுனுக்கு வருகிறார். (நமது இயக்குனர் இமயம் பாரதி ராஜா சார்தான்) வயதாகி நோயுடன் போராடும் மனைவி.(வடிவுக்கரசி மேம்) வரதட்சணை கேட்டு விரட்டியடிக்கப்பட்டு, கர்ப்பிணியாகத் தன்னுடன் தங்கி விட்ட ஒற்றை மகள். நல்ல வீடும் இல்லை. இதனையெல்லாம் சரிக்கட்டும் விதமாக, மனதிற்குள் கணக்குப்போட்டு மூன்று லாட்டரி சீட்டுகளைத் தேர்வு செய்து வாங்குகிறார் நம் நாயகன் கடையில்.
லாட்டரி சீட்டுகளைக் கவரில் வைத்துத் தரும் நாயகனிடம் ரூ 200/- கொடுக்க, மடியைத் தடவும்போதுதான், வைத்திருந்த ஒற்றை 500/- ரூபாய் நோட்டு எங்கோ நழுவி விட்டதை அறிந்து பதறிப்போய் அங்கும் இங்கும் ஓடித் தேடுகிறார். கிடைக்காத பட்சத்தில், தவிக்கும் அவரை ஆசுவாசப்படுத்தி, பஸ் செலவுக்கும் பணம் கொடுத்து உதவுகிறார் நம் நாயகன்!
பெரியவரும் தன் மனசாட்சிப்படி, டிக்கட்டுகள் நாயகனிடமே இருக்கட்டுமென்றும், பணத்தைக் கொடுத்து விட்டு மறுமுறை வரும்போது வாங்கிக் கொள்வதாகவும் கூறிச் செல்கிறார்.
கவரில் வைத்த மூன்றில் ஒரு சீட்டுக்கு ரூ 1.5 கோடி பரிசு விழுகிறது. தெரிந்தவுடன், மிகுந்த சந்தோஷத்துடன் லாட்டரி டிக்கட்டுகளுடன் பெரியவரைத் தேடி, பஸ் ஏறி விடுகிறார் கனி. பெண்டாட்டிக்கு, மாமாவுக்கு, மச்சானுக்கென்று விஷயம் தெரிந்து அவர்கள் எவ்வளவு தடுத்தும் எதையும் பொருட்படுத்தவில்லை.
பணம் கொடுக்காதவரை அந்த லாட்டரி சீட்டு நமக்கே சொந்தம் என்று வாதாடி, தங்கள் குடும்ப நிலைமையை மேம்படுத்த இறைவனே தந்த வரமென்று கூறும் மனைவி, தன் பேச்சைக் கணவன் மதிக்கவில்லை என்று தெரிந்ததும், தம்பி, பெரியப்பா என்று போய், பாதிரியாரையும் துணை சேர்த்துக் கொள்கிறார்! பாதிரியார் சைபர் க்ரைமிலுள்ள ஒருவர் மூலம் சமுத்திரக் கனியின் இடத்தை அறிய ஏற்பாடு செய்ய, கனியின் மச்சான் பைக்கில் அலைகிறார். தங்கள் பணத்தை வசூலிக்கவும், எளிதாக மேலும் பணம் பெறவும் முயலும் காவல்துறையும் துரத்துகிறது.
இந்தக் களேபரங்களுக்கு இடையே, டீ குடிக்க இறங்கிய இடத்தில் கனியின் ஹான்ட் பேக்கைத் திருடன் திருடிச்செல்ல, அவனுடன் போராடுகையில், நழுவி விழும் பரிசு டிக்கட் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு பாதாள சாக்கடையில் விழுந்து விட, மேன் ஹோலைத் திறந்து, மயிரிழை இடைவெளியில் அதனை மீட்கிறார் கனி!
பேரூந்தில் பயணம் செய்யும் பக்கத்து சீட்டுக்காரரான லண்டன் ரிடர்ன் தம்பி ராமையாவும் லாட்டரிப் பணம் கனிக்கே என்று கூறியும், எதற்கும் மனதை சஞ்சலப்பட விடாமல் தன் குறிக்கோளை, தான் எண்ணியபடியே நிறைவேற்றப் போகும் கனியிடம், இறுதி முயற்சியாக அவருடைய மனைவி, வாய் திக்கும் இளைய மகளைப் பேச விடுகிறார். அந்த மகளிடம் தன் ப்ளாஷ் பேக்கைக் கூறியதும், திக்கும் தன் வாயால் ‘நீ கொடுத்திட்டு வாப்பா!’ என்று கூறுவது டாப்!
பெரியவர் கூட பணம் கொடுக்காத சீட்டுக்கு, தான் சொந்தம் கொண்டாட முடியாது என்கிறார். பிறகு, ‘ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்ளலாம்’ என்கிறார்.
‘அது முறையாகாது என்று நாசூக்காக மறுத்து விட்டு, ரூ 1.5 கோடி பரிசுக்கான லாட்டரி டிக்கட்டை அவரிடம் மனநிறைவுடன் ஒப்படைத்து விட்டு, அவர்கள் வீட்டு ஒரு டம்ளர் நீரை மட்டுமே பருகி விட்டுத் திரும்புகிறார் கனி. திரும்பி அவர் ஊர்வரும்போது பெரிய வரவேற்பே காத்திருக்கிறது!
‘அதன் பிறகு என்ன?’ என்கிறீர்களா? ஏங்க…எல்லாத்தையுமே வெளியே சொல்லிடக் கூடாதுங்க! மற்றதை திரையில் காண்க என்று சொல்ல வேண்டாமா?
படம் முழுவதுமே முத்து என்றாலும், மூன்று இடங்கள் மனதைப் பெரிதும் நிறைத்தன!
சைபர் க்ரைம் பணியாளர் 2 லட்ச ரூபாய் பேரம் பேசிய பிறகும், தப்பு தப்பாய் வழி சொல்ல, அவர் நண்பர் ‘அதுதான் கேட்ட பணத்தைக் கொடுப்பதாகச் சொன்னாரே அவர். பின் ஏன் தப்பாய் வழி சொல்கிறாய்!’ என்று கேட்க, ‘இது வரை மொள்ளமாரிகளையும், முடிச்சவிழ்க்கிகளையும்,கேடு கெட்டவர்களையும் மட்டுமே கண்டு பிடிக்க உதவிய நாம், ஒரு நல்லவரைக் கண்டு பிடித்து அவர் நற்செயலைத் தடுக்க உதவ மனம் வரவில்லை! யாருக்கு வேணும் இவர்களின் 2 லட்சம்?’ என்பது சூப்பர்!
பரிசு பெற்ற லாட்டரி சீட்டைப் பெரியவர் வாங்கியதும், உள்ளே கர்ப்பிணியான மகள் சாப்பிட இருந்த விஷத்தைத் தூக்கியெறிந்து விட்டு வருவது சூப்பரோ சூப்பர்! நல்ல செயல்கள் கை மேல் பலன் அளிக்கத்தானே செய்யும்!
லாட்டரிச் சீட்டைத் திருடியவர் மனந்திருந்தி, சாலையோரக் கடை போட்டிருப்பது நல்ல திருப்பத்தின் அறிகுறி!
அரசுகள் இது போன்ற படங்களுக்கு வரி விலக்கு அளித்து அனைவரையும் பார்க்கச் செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் இந்தப்படத்தைத் திரையிட்டு, இளந்தலைமுறையினரைக் காணச் செய்ய வேண்டும்!
‘You can sacrifice everything for the sake of truth, but you cannot sacrifice truth for the sake of anything’ என்பது விவேகானந்தரின் பொன் வாசகம்! அது அப்படியே பின்பற்றப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில்!
ஜனவரி 24 அன்று ஜீ 5 OTT தளத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் இப்படத்தை, திரை அரங்குகளில் பார்க்கத் தவறியவர்கள், அவசியம் பார்க்க வேண்டும் ... குடும்பத்துடன்...
பார்த்து விட்டுச் சொல்லுங்களேன்! கண்ணில் நீர் கசியாமல் பார்த்தீர்களா என்று .