
வீர தீர சூரன் 2:
இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவான வீர தீர சூரன்-2 திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 27-ம்தேதி திரையரங்குகளில் வெளியானது. 'சித்தா' படத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்று, யார் இந்த இயக்குனர் என்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அருண் குமார், இந்த படத்தை இயக்கியுள்ளார். சீயான் விக்ரமின் 62-வது படமான இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் காளி என்ற ரோலில் நடிகர் விக்ரம் நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக அவரது மனைவியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, சித்திக், சூரஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ரியா ஷிபு தனது HR பிக்சர்ஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இப்படம் பல தடைகளை தாண்டி திரையரங்குகளில் தாமதமாக வெளியானாலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. வீர தீர சூரன் இரண்டாம் பாகம் முதலில் ரிலீஸ் ஆகும் என்றும், முதல் பாகம் அடுத்து தான் எடுக்கப்போவதாக படக்குழு முன்னரே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை நகரை மையமாக கொண்டு உருவான கதைக்களம். ஊரில் செல்வாக்கு மிகுந்த முக்கியஸ்தரும் அவருடைய மகனும் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். முன்பகையில் தந்தை-மகன் இருவரையும் என்கவுண்டரில் சுட்டு கொல்ல போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிடுகிறார்.
இதனை அறிந்து கொள்ளும் ஊர் முக்கியஸ்தர் மளிகை கடைக்காரரான நாயகனை அழைத்து போலீஸ் சூப்பிரண்டை படுகொலை செய்ய சொல்கிறார். போலீஸ் சூப்பிரண்டுக்கும், தந்தை-மகனுக்கும் உள்ள முன்பகை என்ன? இவர்கள் பிரச்சனையில் நாயகன் எதற்காக ஈடுபடுத்தப்படுகிறார் என்பதற்கு விடையாக சொல்லப்பட்டுள்ள படம். ஒருநாள் இரவில் நடக்கும் விறுவிறுப்பான ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆக்ஷன் படமாக உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், தற்போது வரை உலகளவில் இதுவரை ரூ.66 கோடியை வசூலித்துள்ளது. இந்நிலையில் இத்திரைப்படம் இன்று (ஏப்ரல் 24-ந் தேதி) ஸ்ட்ரீமிங் ஜாம்பவான் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கும்.
எல் 2 எம்புரான் :
மலையாள சினிமாவில் மைல்கல்லாக அமைந்த ‘லூசிபர்’ படத்தின் 2-ம் பாகமாக உருவான 'எல் 2 எம்புரான்' கடந்த மாதம் 27-ம் தேதி உலகளவில் வெளியான நிலையில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முரளி கோபி திரைக்கதை எழுத, பிருத்விராஜ் இயக்கி நடித்த இந்த படத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர், இந்திரஜித் சுகுமாரன், அபிமன்யூ சிங், சுராஜ் வெஞ்சாரமூடு, கிஷோர், இயக்குனர் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் பல்வேறு சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து 17 சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது. ஆனாலும் எந்த சச்சரவுகளும் படத்தின் வசூலை பாதிக்காமல் படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மலையாள சினிமாவில் ரூ.350 கோடி வசூலான முதல் படம் என கொண்டாடப்படுகிறது.
ரசிகர்கள் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த படம் இன்று (24-ந் தேதி) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கேரளாவில் பெரும் தலைவராக இருக்கும் முதல்-மந்திரியின் திடீர் இறப்புக்கு பின்னர் வெளிநாட்டில் இருந்து வரும் அவருடைய மகன் ஆட்சி அமைக்கிறார். நல்லாட்சி தருவார் என மக்கள் நம்பும் வேளையில் மதவாத கட்சியுடன் கூட்டணி போட்டு கொண்டு ஊழலில் திளைக்கிறார். மறுமுனையில் சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலால் பிரச்சனைகள் உருவாக சர்வதேச ‘டான்’ ஆன நாயகன் களம் இறங்கி விடை காண்பது தான் கதையாகும். அதிரடியும் பிரமாண்டமும் ஒருசேர இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இதனை இன்று முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கண்டு களியுங்கள்.
இந்த வார விடுமுறையை நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் 'எல் 2 எம்புரான்' மற்றும் வீர தீர சூரன்-2’ திரைப்படங்களை பார்த்து ஜாலியாக என்ஜாய் பண்ணுங்க.