
கனவுகளால் சூழப்பட்டது நடுத்தர வர்க்கத்தின் குடும்பங்கள். நல்ல பள்ளிகள், கல்லூரிகள், வேலைகள், திருமணங்கள், குழந்தைகள் இன்ன பிற. இவை அனைத்தையும் பிணைக்கும் மையப்புள்ளி ஒன்று உண்டு. இந்தக் கனவைக் காணாத குடும்பங்கள் மிகக் குறைவு. அது தான் தனக்கென்று ஒரு வீடு. அப்படி ஒரு கனவைத் தனக்குள் வைத்துக்கொண்டு காலத்தைக் கடத்தும் ஒரு அன்பான குடும்பத்தைக் குறித்த படம் தான் 3 BHK.
வாசுதேவன் (சரத்குமார்) தனது மனைவி சாந்தி (தேவயானி) மகன் பிரபு (சித்தார்த்) மகள் ஆர்த்தி (மீதா ரகுநாத்) இவர்களுடன் வாழ்ந்து வருகிறார். வாடகை வீடு தேடி அலைந்து மாற்றி நொந்து போயிருக்கும் இவர்களுக்குத் தங்களுக்கென்று ஒரு வீடு, தனியறை என்று வாழவேண்டும் என்ற கனவு. ஒற்றை வருமானத்தில் சிறுகச் சிறுக சேமித்து வீடு வாங்க நினைக்கும் போதெல்லாம் வேறு எதாவது புதிய பிரச்சினைகள் முளைக்கத் தள்ளிக் கொண்டே போகிறது. இவர்கள் கண்ட கனவு பலித்ததா. சித்தார்த் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் என்ன என்பதைப் பதற்றமோ அவசரமோ இல்லாமல் அலசியிருக்கும் படம் தான் இது.
முதலிலேயே ஒன்றைச் சொல்லிவிடவேண்டும். இந்தப் படத்தின் கதையில் திரைக்கதையில் புதுமை என்று எதுவுமில்லை. இது ஒரு வாழ்வின் கதை. அந்த வேகத்தில் தான் இது செல்கிறது. ஒவ்வொரு காட்சியும், வாழ்க்கை மாற்றங்களும் காலத்தால் நமக்குக் கடத்தப்படுகின்றன.
சித்தார்த்தின் பள்ளிப்பருவம், கல்லூரிக்காலம், பணிச்சுமை, திருமணம் என நகர்ந்தாலும் இது சரத்குமார் பார்வையில் நிகழும் ஒரு நிகழ்வு. வலிகளோடும், தியாகங்களோடும் வாழும் ஒரு பாத்திரத்தில் சரத்குமார். நச்சென்று பொருந்தியிருக்கிறார். எந்த இடத்திலும் தனது குரலைக் கூட அவர் உயர்த்தவில்லை. மத்திம வயதிலிருந்து முதுமை வரை உடல்மொழியியிலும் கொஞ்சம் மாற்றம் கொண்டு வர முயன்றிருக்கிறார். முதிய கெட்டப்பில் மட்டும் அந்த விக்கையும் தாடியையும் கொஞ்சம் கவனித்திருக்கலாம். பொருந்தாமல் துருத்திக் கொண்டு நிற்கிறது.
என்னதான் சூரியவம்சம் ஜோடி எனப்பார்க்கப்பட்டாலும் தேவயானிக்கு இன்னும் கொஞ்சம் நடிக்கக் கூடிய காட்சிகள் கொடுத்திருக்கலாம். வீட்டின் சேமிப்புக்கு முறுக்கு அதிரசம் சுட்டு விற்கிறார். வருமானத்தை அப்படியே வீட்டுக்கு கொடுக்கிறார். மற்றொரு அம்மாவாகத் தான் தெரிகிறார். கணவனுக்கும் பேச முடியாமல் மகனுக்கும் பேச முடியாமல் சில காட்சிகளில் தவிக்கிறார். அவ்வளவே. முதிய தேவயானியாக ஐயோ பாவம் என்று இருக்கிறார்.
பயத்திலேயே வாழும் மகனாகச் சித்தார்த். தந்தையின் சொல்லைக் கேட்டுத் தனக்குப் பிடிக்காத ஒரு படிப்பில் சேர்வது, திருமணத்திற்குச் சம்மதிப்பது, அவரது கனவை நிறைவேற்ற பிடித்தமில்லா வேலையில் இருந்தாலும் சகித்துக் கொண்டு வாழ்வது. ஒரு கட்டத்தில் தன்னை மறந்து குமுறுவது என நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை. அவரது உடல்வாகு கல்லூரிவரையில் ஒத்துழைத்தாலும் ஸ்கூல் மாணவன் என்பதெல்லாம் சற்று ஓவர் சாரே.
இவர்களிருவரைத் தவிர நடிப்பில் இவர்களை விடவும் ஒரு படி அதிகம் ஸ்கோர் செய்பவர்கள் மீதாவும், சித்தார்த்தின் பள்ளிப் பருவக் காதலியாக வரும் சைத்ராவும் தான். வீட்டில் நடக்கும் பிரச்சினைகளைக் கூலாக சமாளிப்பது, அப்பாவிற்கும் அண்ணனிற்கும் இடையே பாலமாக இருப்பது, பிடிக்காத ஒரு மணவாழ்க்கைக்குத் தன்னைத் தள்ளியதற்காகக் கதறி அழுவது எனப் பிரம்மாதப் படுத்துகிறார். சைத்ரா பள்ளியில் படிக்கும் போதிலிருந்து சித்தார்த்திற்கு ஆதரவாக இருப்பது, பல வருடங்களுக்குப் பிறகு காணும் அவரைப் பார்க்க முடியாமல் பேச முடியாமல் தவிப்பது, ஒரு கனவைத் தொலைத்துத் தன்னை ஆதரிக்கும் கணவன் குடும்பத்தைத் தாங்குவது என அவரும் சமமாக நடித்திருக்கிறார்.
ஏறத்தாழ ஒரு முப்பது ஆண்டு கால வாழ்வை நமக்குள் கடத்துவதில் இயக்குநர் ஸ்ரீ கணேஷ், இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். காதுக்குக் கொஞ்சம் கூட வலி ஏற்படுத்தாத இசைக்காகவே அம்ரித்தைத் தனியாகப் பாராட்டலாம். பின்னணி இசையில் தனது உழைப்பைக் காட்டியிருக்கும் அவர் டைட்டில் பாடலில் மட்டுமே வென்றிருக்கிறார். இன்னும் கொஞ்சம் முயன்றால் நிச்சயம் ஒரு ரவுண்ட் வரலாம்.
படத்தின் ஆரம்பத்தில் ரஜினிகாந்துக்கு நன்றி என்று போடுகிறார்கள். எதற்கு என்று போகப் போகத் தான் தெரிகிறது. ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் அவரைத் தொடர்ந்து வரும் கஷ்டங்கள் போல இந்தக் குடும்பமும் தொடர்ந்து சிரமங்களை அனுபவிக்கிறது. தொடர்ந்து தோல்விகள். பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் இவர்கள் ஜெயிக்க மாட்டார்களா என்ற ஒரு ஆதங்கம் ஒரு கட்டத்தில் அடப் போங்கடா இவங்க வாழ்க்கை மாறவே மாறாது போல எனத் தோன்றும் அளவு காட்சிகளும் சம்பவங்களும் நீண்டு கொண்டே செல்கின்றன. மெதுவாகக் கதை சொல்வது என்பது வேறு. தனது வேகத்தில் தான் சொல்வேன் என்று அடம் பிடிப்பது வேறு.
உண்மையில் கடைசி அரை மணி நேரம் நன்றாகவே இருந்தாலும் அதற்கு முன் நடக்கும் அதிகப்படியான சம்பவங்கள் கிளைமாக்சின் அழுத்தத்தையும், ஆழத்தையும் குறைத்து விடுகின்றன. அதில் எந்தவிதமான திருப்பமோ, நெகிழ்ச்சியோ ஆச்சரியமோ அவர்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என்பது தான் உண்மை. வில்லன்கள் என்று யாருமே இல்லாத நிலையில் சம்பவங்கள் தான் வில்லன்கள். ஆனால் அது கொஞ்சம் ஓவர் டோசாகிவிட்டது இடைவேளைக்குப் பிறகு. வாசுதேவன் அண்ட் பேமிலி என்ற பெயர்ப் பலகையைக் காட்டும் காட்சியிலிருந்து கதையைப் பின்னோக்கிச் சொல்லியிருந்தால் இன்னும் அழகாக வந்திருக்கும் என்று தோன்றியது நமக்கு.
"வீடுங்கறது ஒரு கனவு மட்டுமில்ல. அது மரியாதை. வீடு என்பது அதில் உள்ள மனிதர்கள் தான். அவர்கள் இருக்கும் இடம் தான் வீடு. என்ன மாதிரி ஆய்டாதப்பா, நான் தோத்துப் போகலப்பா திரும்ப என் வாழ்க்கையை ஆரம்பிக்கறேன். எனக்குப் பிடிச்ச படிப்பு, வேலை, குடும்பம், வீடு என்னால முடியும்பா" என்ற நம்பிக்கை சித்தார்த்திற்கு வர இரண்டரை மணி நேரமாகிறது. பல இடங்களில் வசனங்கள் ஆழமாக எழுதப்பட்டுள்ளன. சீரியசாகவே செல்லும் படத்தில் யோகிபாபு வரும் இரண்டு மூன்று காட்சிகள் பெரிய ஆறுதல்.
இது யதார்த்தப்படமோ அதை மீறிய படமோ இல்லை. இது ஒரு வாழ்வு. இதை வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், இந்தப்படத்தோடு தன்னைப் பொருத்திக் கொள்ள முடியும். வசதி படைத்தவர்களோ, லட்சக்கணக்கில் சம்பளம், ஹவுசிங் லோன், கார் லோன், ஆறிலக்கச் சம்பளம் என வாழும் இந்தக் கால இளைஞர்களை இந்தப் படம் கவர்வது சற்று கடினம். அந்த விதத்தில் ஆஹா ஓஹோ என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு குடும்பத்தின் கதையை அதன் தன்மை மாறாமல் கொடுத்த விதத்தில் ஓகேப்பா என்று சொல்லுமளவு தேறிவிட்டார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.