

பாலிவுட் நடிகர்களில் அமைதியான அழுத்தமான நடிப்பிற்கு பெயர் போனவர் அபிஷேக் பச்சன் (Abhishek Bachchan). பெரும்பாலும் அவரின் நடிப்பு இயல்பானதாகவும் யதார்த்தமானதாகவும் இருப்பதால், அவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் அபிஷேக் பச்சனின் புகைப்படம் வைரலாகி சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது.
2000 ஆண்டில் 'ரெஃப்யூஜி' என்ற திரைப்படத்தின் மூலம் அபிஷேக் பச்சன் அறிமுகமானாலும், சூப்பர் ஸ்டாரின் மகன் என்ற பெருமை இருந்தாலும், தனக்கென தனி இடம் பிடிக்க போராட வேண்டியிருந்தது. 2004 ஆம் ஆண்டு வெளியான 'தூம்' திரைப்படத்தில் இருந்து அபிஷேக்கின் வெற்றி தொடங்கியது. தூம் திரைப்படத்தின் மற்ற பாகங்களும், குரு, டெல்லி-6 போன்ற படங்கள் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
திருமணத்திற்கு பின்னர் மார்க்கெட் நன்றாக இருந்தும் அபிஷேக் பெரும்பாலும் ஓய்வில் இருந்தார். அவ்வப்போது அவர் படங்கள் நடித்தாலும் பெரும்பாலும் துணை கதாபாத்திரங்கள் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். மற்ற பாலிவுட் பிரபலங்களை போல பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளிலும் அபிஷேக் பச்சனை பார்க்க இயலாது. அதுபோல சமூக வலைதளங்களிலும், மீடியாக்களிலும் கூட சுறுசுறுப்பாக இருக்க மாட்டார்.
குரு படத்தில் நடிக்கும் போதே அபிஷேக்கின் உடல்வாகு சற்று எடை கூடியதாக இருந்தது. அதன் பின்னர் எடையை சிறிது குறைத்தாலும் அவ்வப்போது பூசிய உடலுடன் திரைப்படங்களில் தோன்றினார். பாலிவுட் வாழ்க்கையில் சிக்ஸ் பேக் உடற்கட்டு அவசியம் என்ற நிலை ஏற்பட்ட போது, ஒல்லியாக இருந்த ஷாருக்கான் கூட சிக்ஸ் பேக் உடற்கட்டிற்கு மாறினார். குறிப்பிட்ட காலங்கள் ஹிருத்திக் ரோஷனுக்கு போட்டியாக இருந்த அபிஷேக் பச்சன் அவரை போன்ற உடல்வாகு இல்லாமல் இருந்தது, ஒரு பின்னடைவாக கருதப்பட்டது.
தற்போது அபிஷேக் பச்சனின் அதிக தசைப்பற்று மிகுந்த உடற்தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பாலிவுட்டின் பிரபல ஆரோக்கிய பயிற்சியாளரும், எழுத்தாளருமான விருந்தா பட் (Vrindda Bhatt), தனது புதிய புத்தகத்தை அபிஷேக்கிற்கு வழங்கிய போது எடுத்தார். அந்த புகைப்படம் தான் தற்போது பேசுபொருளாகி உள்ளது. அபிஷேக் பச்சனின் அந்த புகைப்படம், புதிய கட்டுக்கோப்பான உடல் தோற்றத்திற்கு அவர் மாறி உள்ளதை காட்டுகிறது. அவரது விரிந்த கட்டுமஸ்தான உடல்தோற்றம் அவரது ரசிகர்களை கவர்ந்துள்ளது. மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவரது உருவ மாற்றம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், "ஷாருக் கானின் 'கிங்' திரைப்படத்திற்காக தான் அபிஷேக் இப்படி மாறியுள்ளார் என்று கூறுகின்றனர். அந்த திரைப்படத்தில் வலிமையான வில்லனாக அபிஷேக் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்திற்காகவே சில மாதங்களாக தீவிர உடற்பயிற்சிகளை அபிஷேக் மேற்கொண்டு வருகிறார். தனது 'வெர்ஷன் 2.0' - சுய புதுப்பித்தல் பற்றி அபிஷேக் கூறும்பொழுது "திரையுலகில் நிலைத்திருக்க தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வது மிகவும் அவசியம்" என்று விளக்கியுள்ளார்.
நீங்கள் தொடர்ந்து உங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் , ரசிகர்களுக்கு சலிப்பூட்டும் நபராக மாறிவிடுவீர்கள். நான் அறிமுகமானது போது இருந்த ரசிகர்கள் இப்போது பெற்றோர்களாகவும் தாத்தா பாட்டிகளாகவும் மாறிவிட்டனர். இன்று 17 முதல் 25 வயது வரையிலான இளைஞர்களுக்கு நான் ஒரு சமகாலத்தவனாகத் தெரிய வேண்டும் என்றால், என்னை நான் அப்டேட் செய்துகொள்ள வேண்டும். தனது 25 ஆண்டு கால திரைப்பயணத்தில் இன்னும் சில நடிகர்கள் நிலைத்திருக்க காரணம், தங்களின் ரசிகர்களுக்காக அவர்கள் தங்களை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றனர்," என்று அவர் கூறியுள்ளார்.
அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கும் கிங் திரைப்படத்தில் ஷாருக்கான், அவரது மகள் சுஹானா கான், தீபிகா படுகோன் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவரது வில்லன் கதாபாத்திரம் மிரட்டும் வகையில் இருக்கும் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.