
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித், ரசிகர்களால் ‘தல‘ என்று சொல்லமாக அழைப்படுகிறார். அஜித்குமார் கதாநாயகனாகவும், நடிகை திரிஷா கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் விடாமுயற்சி. இந்த படம் இரண்டு வருடங்களாக பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கூட்டணி அமைத்துள்ளனர்.
லைகா நிறுவனம் சார்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ரோட் டிராவலை மையமாகக் கொண்ட உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தேவையில்லாத ஆக்சன் காட்சிகள் இணைக்கப்படவில்லை' என்று இயக்குனர் மகிழ் திருமேனி கூறியுள்ளார். மேலும் இந்த படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஹாலிவுட் படமான ‘ப்ரேக் டவுன்’ படத்தின் தழுவல் என்றும் கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்திற்கு தணிக்கை வாரியம் (CBFC) U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
அஜித் பட ரிலீசுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இன்று விடாமுயற்சி ரீலிஸ் ஆனது புது தெம்பையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது மட்டுமில்லாமல், அவர்களிடையே அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பொங்கல் தல பொங்கலாக அமையும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் இன்று படம் வெளியானவுடன் ரசிகர்கள் அதிக அளவில் போட்டி போட்டுக்கொண்டு படத்தின் டிக்கெட்களை புக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து ஆட்டம் போட வைத்தது. அதுமட்டுமில்லாமல் அனிருத் இதற்கு முன் அஜித் படத்திற்கு இசையமைத்த பாடல்களை விட இந்த படத்தின் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விடாமுயற்சி படம் உலகளவில் ப்ரீ புக்கிங்கில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 14 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு நடிகர் அஜித் படம் வெளியாவதால் கண்டிப்பாக முதல் நாள் வசூல் உலகளவில் மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடாமுயற்சி இன்று வெளியான நிலையில் அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர். மேலும் நீண்ட நாள் கழித்து அஜித் படம் வெளியாவதால், இந்த படத்தின் வெளியீட்டை டீஜே இசைக் கச்சேரியுடன் ஆட்டம் பாட்டத்துடன், மேள தாளம் முழங்க அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
‘விடாமுயற்சி’ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு பட நிறுவனம் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து உள்ளது. இது குறித்த அரசாணையில் உரிய பாதுகாப்பு வசதிகளோடு முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்கி இறுதி காட்சியை இரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என்றும் மொத்தம் 5 காட்சிகள் திரையிடலாம் என்றும் அறிவித்திருந்தது.
நடிகர் அஜித்தின் நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ‘குட் பேட் அக்லி’ படமும் விரைவில் வெளியாக உள்ளது. கார் பந்தயத்தில் சில காலம் கவனம் செலுத்த உள்ளதால் அக்டோபர் வரை, திரைப்படங்களில் நடக்க மாட்டேன் என்று அஜித் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று ரீலிஸ் ஆன நடிகர் அஜீத்தின் ‘விடாமுயற்சி’க்கு பலன் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.