
முதலாளித்துவம் என்பதை அறவே வெறுக்கும் ஒரு கதை சொல்லி (The story teller). பணியாற்றும் இடங்களில் ஒன்ற முடியாமல் ஆறுமாதங்களில் அடுத்த வேலை தேடி மீண்டும் மீண்டும் விடும் ஒருவர். தனக்குத் தேவையான எல்லாமே இருந்தும், தூக்கம் என்பதை வாழ்வில் தொலைத்த வெற்றிகரமான ஒரு பருத்தி வியாபாரி. இவர்கள் ஒரு கட்டத்தில் இணைகிறார்கள். ஒருவருக்கு மீனும் சிகரெட்டும் இல்லாமல் கற்பனை வராது. இன்னொருவருக்கு இது இரண்டும் ஆகாது. பெங்காலியான அவருக்கும் குஜராத்திக்காரரான அந்த வியாபாரிக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள், அதிலிருந்து நடக்கும் விஷயங்கள். திருப்பங்கள் இவை தான் ஸ்டோரி டெல்லர்.
ஒரு அழகான சிறுகதை படிப்பது போல் இருந்தது படம் என்று சொல்லக் கேட்டிருப்போம் அல்லவா. அதுபோல ஒன்று தான் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் இந்தப் படம்.
கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளராக ப்ரெஷ் ராவல். அகமதாபாத்தை சேர்ந்த தொழிலதிபராக அடில் ஹுசைன். இன்ஸோம்னியா என்ற தூக்கம் தொலைத்த வியாதிக்காரரான அடில் ஹுசைனுக்கு கதை சொல்லித் தூங்க வைக்க ஒரு கதை சொல்லி தேவை என்ற விளம்பரம் பார்த்துக் கல்காத்தாவிலிருந்து அங்கே வருகிறார் பரேஷ் ராவல். மீனும், சிகரெட்டும், பரபரப்பும் எனக் கொல்கத்தா வாழ்க்கைக்குப் பழகின இவருக்கு அவ்வளவு பெரிய ஒரு பெரிய வீட்டில் இரண்டே பேர் மட்டும் இருக்கும் வாழ்க்கை புதிதாக இருக்கிறது. இரவுதோறும் ஒவ்வொரு கதை சொல்கிறார். அங்கு உள்ள நூலகத்தில் பணியாற்றும் ஒரு பெண்மணியுடன் நட்பாகிறார். ஒரு கட்டத்தில் அந்த வியாபாரியின் நோக்கம் தூங்கப் செய்வது மட்டுமல்ல என்பதை உணர்கிறார். அடுத்து என்ன ஆனது என்பது தான் மீதிக்கதை.
"உலகம் உழைப்பவர்களுக்கும் இயங்குபவர்களுக்குமானது. சிந்திப்பவர்களுக்கு இங்கு அதிக வேலையில்லை."
"எனக்கு அன்பும் காதலும் மட்டும் போதாது. இதைவிடப் பெரிய ஒன்றும் தேவை. அது தான் மரியாதை."
"என் மனைவி இப்பொழுது இருந்திருந்தால் முதலில் என்னிடமிருந்து என்னை அவள் காப்பாற்றியிருப்பாள்."
"அவர்மேல் குற்றம் சொல்ல எதுவும் இல்லை. இருவருக்கும் அவரவர்க்குத் தேவையானது கிடைத்தது. எனக்குப் பணம். அவருக்குப் புகழ். என் எழுத்தின் மேல் எனக்குள்ள நம்பிக்கையின்மை. அச்சம். வாய்ப்பு. வசதி. இவை அவரிடம் இருக்கின்றன பயன்படுத்திக் கொண்டார். இதில் அவர்மேல் கோபப்படவோ பொறாமைப் பாடவோ என்ன இருக்கிறது?"
"மீன், துர்கா பூஜை இவை இரண்டை மட்டும் எந்தச் சூழ்நிலையிலும் ஒரு சுத்த பெங்காலி வீட்டுக் கொடுக்கவே மாட்டான்."
"எனக்கு வியாபாரம் செய்யச் சற்றே நெளிவு சுளிவுகளை பயன்படுத்தும் ஆளைப் பற்றிய பெரிதாகக் கவலையில்லை. ஆனால் ஒரு திருடனை ஏற்கும் பக்குவம் இல்லை. சொல்லப் போனால் வெறுக்கிறேன்."
"சரஸ்வதி இருக்கும் இடத்தில் செல்வம் கொழிக்கும் என்று சொல்பவர்கள் தவறு செய்கிறார்கள். என்னுடைய சரஸ்வதிக்கு லக்ஷ்மி மேல் ஆர்வமே இல்லை."
"இந்த லைப்ரரியில் உறுப்பினராக ஒரு ரெபரென்ஸ் வேண்டுமே. எனக்குத் தாகூரைத் தெரியும். அதைவிடவா ஒரு ரெபெரென்ஸ் தேவை?"
இது எல்லாம் படத்தில் ஆங்காங்கு வந்து வருடும் வசனங்கள். யார், எந்தக் காட்சியில் எந்த நோக்கத்தில் சொல்கிறார்கள் என்பதை பொறுத்து ஒரு மெலிதான புன்னகையையும் ஒரு வறட்டுச் சிரிப்பையும் வரவழைக்கிறது.
இது போன்ற வசனங்களும், இயல்பாக எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் நகரும் சம்பவங்களும், இவர்கள் நடிக்கிறார்கள் என்பதே தெரியாமல் வந்து போகும் பாத்திரங்களும் ஒரு வித்தியாசமான திரையனுபவத்தைத் தருகின்றன.
சில காமிரா கோணங்கள் வாவ் என்று சொல்ல வைக்கின்றன. படிக்கிணறுகளில் இருவரும் நடந்து வரும்போது பறவைப்பார்வையில் அதைப் படம் பிடித்த விதம். பின்னர் அதே இடத்தில் வேறு இருவர் அமர்ந்து பேசும்போது வைத்திருந்த கோணம், துர்கா பூஜையின்போது காளியின் உருவ பொம்மைகள் அடுக்கப்பட்டிருக்கும் காட்சி, மீன் மார்க்கெட் காட்சிகள் எனப் படத்தின் இயக்குனர் ஆனந்த் மகாதேவன் பொறுமையின் உச்சமாகக் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்.
படத்தில் பெரும்பான்மையான காட்சிகளில் ஒரு பூனையும் வருகிறது. அதை வைத்தும் காட்சிகள் அமைந்துள்ளது இயல்பு. மிகச் சிறிய ஆனால் சற்றே வலுவான ஒரு பாத்திரத்தில் ரேவதி.
படத்தில் இசை என்பது எங்கே இருக்கிறது என்று தேட வேண்டும். காமிரா, பாத்திரங்களோடு நகர்கிறது. வண்டிகளில் பயணம் செய்கிறது. மேலே இருந்து கீழே இருப்பவர்களை நோட்டமிடுகிறது. எதிலும் வேகமோ, பரபரப்போ மாற்றங்களோ இல்லவே இல்லை. இதுவே மெதுவாக நகரும் இந்தப் படத்தை மேலும் மெதுவாகக் கடத்துகிறது.
இறுதிக்காட்சியில் நிகழும் அந்த ட்விஸ்ட் இரண்டு பாத்திரங்களையும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துகிறது. கிளைமாக்சில் இருவரும் எடுக்கும் முடிவுகளும் அவர்களின் புதிய தொடக்கங்களும் படத்தை முடித்து வைக்கின்றன. மெதுவாக நகரும் திரைப்படங்கள் எனக்கு அலர்ஜி என்று சொல்பவர்கள் சற்று தள்ளிச் சென்று விடவும். வீடு, சந்தியா ராகம், போன்ற பாலு மகேந்திரா பாணிப் படங்கள் விரும்பிப் பார்ப்பவர்களும் மெதுவாகப் போனாலும் நிறைவாக இருந்தால் போதும் என்று நினைக்கும் ரசிகர்களும் கண்டிப்பாக இதைப் பார்க்கலாம்.