
முன்னணி நடிகரான மம்மூட்டி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘The Priest’ மலையாள படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஜோஃபின் டி சாக்கோ. ‘The Priest’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ரேகாசித்திரம்’. இந்த படம் ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர் ஆசிஃப் அலி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கிஷ்கிந்தா காண்டம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நடிகர் ஆசிஃப் அலி மீண்டும் மற்றொரு திரில்லர் படமான ‘ரேகாசித்திரம்’ படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் அனஸ்வர ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஜோஃபின் டி சாக்கோ இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் மம்மூட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் மனோஜ் கே ஜெயன், இந்திரன்ஸ், ஜரின் ஷிஹாப், பாமா அருண், நிஷாந்த் சாகர், சித்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷமீர் முகமத் படத்தொகுப்பை மேற்கொள்ள முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த படம் கடந்த ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இடுக்கியின் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலையின் வெளிப்பாட்டுடன் படம் தொடங்கி அந்த கொலைக்கும் நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றி போலீஸ் அதிகாரியான ஆசிஃப் அலி கண்டுபிடிப்பது போல் கதை சொல்லப்பட்டுள்ளது.
நடிகர் ஆசிஃப் அலி போலீஸ் அதிகாரியாக நடித்து வெற்றி பெற்ற 'கூமன் : தி நைட் ரைடர்' மற்றும் 'தளவன்' படங்களை தொடர்ந்து மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார்.
இதற்கு முன் கடந்த செப்டம்பர் மாதம் நடிகர் ஆசிஃப் அலி நடிப்பில் தின்சித் அய்யதன் இயக்கத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘கிஷ்கிந்த காண்டம்’ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் 9-ம்தேதி வெளியான ‘ரேகாசித்திரம்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 2 நாளில் ரூ 2.35 கோடியும், 4 நாட்களிலேயே ரூ.28.3 கோடி வசூலித்திருந்தது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 27 நாட்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் இதுவரை ரூ. 75 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2025ம் ஆண்டில் வெளியான மலையாள படங்களில் இந்த படமே பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளதாக மலையாள சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
நடிகர் ஆசிஃப் அலிக்கு இந்த படம் மற்றுமொரு மிகப்பெரிய வசூல் படமாக மட்டுமில்லாமல் வெற்றிப்படமாகவும் அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
நடிகர் ஆசிஃப் அலி மலையாள நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். படிக்கும் போது விளம்பரங்களுக்கு மாடலாகவும், வீடியோ ஜாக்கியாகவும் பணியாற்றிய ஆசிஃப் 2009-ல் வெளியான ரிது படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். அபூர்வராகம், சால்ட் என் பேப்பர், கூமன்: தி நைட் ரைடர், தளவன், ரேகாசித்திரம், டிட்கி டக்கா போன்ற படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்தவை.