
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘மாமன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று இந்த படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். அதுவும் தென்மாவட்டங்களில் இந்த படம் சக்கை போடு போடுவதாக படக்குழு சமீபத்தில் அறிவித்துள்ளது. ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது.
சினிமா மேடை நிகழ்ச்சிகளில் சில சம்பவங்களில் பலரும் பல வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும் அதை அங்கேயே மறந்து விடுவார்கள். இந்நிலையில் மேடையில் சொன்ன சொல்லை காப்பாற்றி தான் வார்த்தை மாறாதவர் என்பதை நிறுபித்துள்ளார் நடிகர் சூரி. நடிகர் சூரி மாமன் பட பிரமோஷனுக்காக தனியார் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அதில் நடனமாடிய பஞ்சமி நாயகியின் மகன்களின் காதணி விழாவிற்கு தாய்மாமனாக கலந்து கொண்டு சீர் செய்வேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
அவர் சொன்னது போலவே பஞ்சமி நாயகியின் மகன்களின் காதணி விழாவில் கலந்து கொண்டு தாய்மாமன் கடமையை செய்து, சீர் செய்ததை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த நடன கலைஞரான பஞ்சமி நாயகி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடினார். அந்த நிகழ்ச்சியில் ‘மாமன்’ திரைப்பட பிரமோஷனுக்காக சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சூரி, சிறப்பாக நடனமாடிய பஞ்சமி நாயகியிடம், ‘உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? காதணி விழா நடத்தி விட்டீர்களா?’ என்று கேட்டார். அதற்கு அவர், தனக்கு 3 மகன்கள் எனவும், இன்னும் அவர்களுக்கு காதணி விழா நடத்தவில்லை என்றும் கூறினார்.
அதற்கு நடிகர் சூரி, ‘உங்கள் மூன்று பிள்ளைகளின் காதணி விழாவில் தாய் மாமனாக கலந்து கொண்டு விழாவை நடத்தி வைக்கிறேன்’ என அந்த நிகழ்ச்சி மேடையிலேயே அறிவித்தார். இ்ந்தநிலையில் பஞ்சமி நாயகி-மணிகண்டன் தம்பதியின் மகன்களான தர்ஷித், அசோகமித்ரன், ஆதித்ய வர்மா ஆகிய 3 பேருக்கும் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சந்தவேலூர் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் காதணி விழா நடந்தது. இதில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கொடுத்த வாக்குறுதியை மறக்காமல் கலந்து கொண்ட நடிகர் சூரி, குழந்தைகளின் தாய்மாமனாக குழந்தைகளை மடியில் அமரவைத்து மொட்டை அடிக்கும் வரை உடனிருந்தார். அதுமட்டுமின்றி அந்த குழந்தைகளுக்கு புது துணிகள் மற்றும் தாய்மாமன் செய்ய வேண்டிய அனைத்து சீர்வரிசைகளையும் வழங்கினார். இதை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
சில நடிகர்கள் மேடைகளில் கொடுக்கும் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடும் அதேவேளையில் கொடுத்த வாக்குறுதியை மறக்காமல் நிறைவேற்றிய நடிகர் சூரிக்கு சமூக வலைதளத்தில் நெட்டிச்சன்கள் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர். இப்படியும் சில நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...