
பிரபல தென்னிந்திய நடிகையான தேவயானி 90s காலகட்டத்தில் கமல்ஹாசன் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்திருக்கிறார். திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் நடித்துள்ள தேவயானி, கோலங்கள் போன்ற மெகா ஹட் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளது குறிப்பிட்த்தக்கது.
தற்போது வரை சீரியல், சினிமா என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் முதல் முறையாக ஒரு குறும்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். பெண் குழந்தையின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நடிகை தேவயானி கதை எழுதி, தயாரித்து இயக்கியுள்ள ‘கைக்குட்டை ராணி‘ என்ற குறும்படம் 17-வது ஜெய்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்று சாதனை படைத்துள்ளது. முதல் முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்து விருதை வென்றுள்ள நடிகை தேவயானிக்கு திரைவுலகை சேர்ந்த பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இசைஞானி இளையராஜா இசை ‘கைக்குட்டை ராணி‘ குறும்படத்திற்கு உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் உயிரோட்டமாக அமைந்துள்ளது என்று சொல்லலாம். மேலும் எடிட்டர் பி. லெனின் படத்தொகுப்பை கையாண்ட விதம் பாராட்டும் வகையில் உள்ளது. ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவையும், லட்சுமி நாராயாணன் ஏ.எஸ். ஒலி வடிவமைப்பையும் கையாண்டுள்ளனர்.
சுமார் 20 நிமிடங்கள் ஓடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளை சொல்லும் விதம் உணர்ச்சிகரமாக உள்ளது. தாயை இழந்து, தந்தை வெளியூரில் பணிபுரியும் நிலையில் ஒரு பெண் குழந்தை இந்த சமுதாயத்தில் எத்தகைய பிரச்னைகளையும், சிக்கல்களையும் சந்திக்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இந்த குறும்படம் வெளிப்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகள் சமூதாயத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கண்முன் தோலுரித்து காட்டுவதை போல் உள்ளது.
'கைக்குட்டை ராணி' குறும்படத்தை பார்த்த சர்வதேச திரைப்பட விழா நடுவர் மற்றும் குழுவினர் இயக்குநர் தேவயானி மற்றும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். 'கைக்குட்டை ராணி' குறும்படத்திற்கு விருது பெற்ற பின்னர் நடிகை தேவயானி பேட்டியளித்தார். அதில் “நான் 100 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் நான் முதன் முதலாக எழுதி, இயக்கி, தயாரித்த குறும்படத்திற்கு விருது கிடைத்திருப்பது அளவற்ற மகிழ்ச்சியை தருவதாக கூறினார். மேலும் இந்த படத்தில் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய மூத்த கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். இந்த குறும்படத்தை இதர சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் கொண்டு செல்லும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளதாக" நடிகை தேவயானி கூறினார்.
'கைக்குட்டை ராணி' குறும்படத்தில் நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன். என் இருவரும் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்று சொல்வதை விட இப்படத்தின் ஒவ்வொரு இடத்திலும் உணர்ச்சி பூர்வமான நடிப்பால் வாழ்ந்துள்ளனர் என்றே சொல்ல வேண்டும். 'கைக்குட்டை ராணி' குறும்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்லும் பணியை உலக சினிமா பாஸ்கரன் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு சவுண்ட் எஃபெக்ட்ஸ் வடிவமைப்பு: சி., சேது மற்றும் டிஐ கலரிஸ்ட்: ஆன்டனி பேபின் ஏ. யும் செய்துள்ளனர்.
நடிகை தேவயானியின் கணவர் ராஜகுமாரன் திரைப்பட இயக்குநர் மற்று நடிகர் ஆவார். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.