
இந்திய சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட ஒரு சின்னமாக அஜித்குமார் திகழ்கிறார். அவரது பல்துறை நடிப்பு திறமைக்காக மட்டுமில்லாமல், அவரது பணிவு, பந்தயத்தின் மீதான ஆர்வம் மற்றும் ஊக்கமளிக்கும் பயணத்திற்காகவும் அவர் கொண்டாடப்படுகிறார். 54 வயதாகும் இவரை ரசிகர்கள் ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் ‘தல’ என்று சொல்லமாக அழைக்கிறார்கள். 1971-ம் ஆண்டு பிறந்த நடிகர் அஜித்துக்கு இன்று (மே 1-ம்தேதி) பிறந்தநாள். 1992-ம் ஆண்டு சினிமாவில் என்டரியான இவர் சினிமா பின்புலம் இல்லாமல் தனி மனிதானாக பல தடைகளை தாண்டி, போராடி ஜெயித்து மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
தொடக்க காலத்தில் மெக்கானிக்காவும், விளம்பர படங்களிலும் நடித்து வந்த இவர் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் பெரிய சினிமா பின்புலத்துடன் நுழைந்த நடிகர்கள் பிரசாந்த் மற்றும் விஜய் படங்களுடன் கடினமாக போராட வேண்டியிருந்தது.
ஆரம்பத்தில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தாலும் அதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அஜித்துக்கு வெற்றிப்படங்களாக அமைந்ததுடன் சினிமா உலகில் தனக்கென தனிஇடத்தை நிலை நிறுத்திக்கொண்டார். இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அஜித் பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டுள்ளார். சர்ச்சைகளை புறந்தள்ளியும், சாதனைகயை படிக்கட்டுகளாகவும் மாற்றி முன்னேறி சென்று கொண்டிருக்கிறார்.
படத்தில் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் பைக் மற்றும் கார் ரேஸ், ஃபோட்டோகிராஃபி, துப்பாக்கிச் சுடுதல், ஏரோ மாடலிங் போன்ற பல துறைகளில் தீராத காதல் கொண்டவர் நடிகர் அஜித். வெறும் பொழுதுபோக்காக மட்டுமின்றி, அந்த துறைகளில் தனது திறமையை தொடர்ந்து வளர்த்தும் வருகிறார்.
தன்னுடைய நட்சத்திர அந்தஸ்தை எந்த வகையிலும் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கும் அஜித், 2011-ல் அவரது பெயரில் இயங்கிய அனைத்து ரசிகர் மற்றும் நற்பணி மன்றங்களை கலைப்பதாக அறிவித்தார். தென்னிந்திய சினிமாவில் வேறு எந்த நடிகரும் செய்யாத இந்த விஷயம் அஜித்துக்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளை பெற்றுத்தந்தது மட்டுமில்லாமல் அனைவராலும் மரியாதைக்குரிய ஆளுமை நிறைந்தவராகவே பார்க்கப்பட்டார்.
திரைப்படங்களிலும், வெளியேயும் அரசியல் ரீதியான கருத்துகளை வெளியிடுவதையோ எந்த ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரிவிப்பதையோ அறவே தவிர்த்து வருகிறார் அஜித்.
சினிமா விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அறவே தவிர்க்கும் அஜித், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவின்போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த போதும் உடனடியாக சென்னைக்கு வந்து விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்லாமல் நேராக நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் அஜித், மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் ‘இங்கிலிஷ் விங்க்லிஷ்’ படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்கு சம்பளம் வாங்கவில்லை என்பதுடன், இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கான செலவுகள் அனைத்தையும் அவரே ஏற்றுக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
2010-ல் மறைந்த கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் காரணங்களுக்காகத் திரைப்பட விழாக்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாகப் பகிரங்கமாகப் புகார் கூறினார். கருணாநிதி முன்னே அஜித் பேசியது பெரிய அளவில் சர்ச்சையானாலும், அவரது அசாத்திய துணிச்சலுக்கு பாராட்டுகள் குவிந்தன. அஜித் பேசியதும் நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைத்தட்டியது குறிப்பிடத்தக்கது.
மீடியாவை சந்திப்பதை முற்றிலுமாக தவிர்க்கும் அஜித் அவசியமான தருணங்களில் மக்களிடம் தன் கருத்துக்களை தெரிவிப்பதை தவறுவதில்லை. சமீபத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1990-ம் ஆண்டு பிற்பகுதியில், ‘அஜித் சர்க்யூட் 9000’ என்ற திரைப்பட விநியோக நிறுவனத்தைத் தொடங்கிய அஜித், 1998-ல் அந்த நிறுவனத்தை மூடிவிடுவதாகவும், எதிர்காலத்தில் திரைப்படங்களைத் தயாரிப்பது, விநியோகிப்பது அல்லது இயக்குவதைத் தவிர்ப்பதாகவும் அறிவித்தார்.
நடிகர் அஜித்திற்கு கார், பைக் ரேசிங், விமானம், புகைப்படக்கலை இவற்றில் எல்லாம் ஆர்வம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு மினியேச்சர் ஹெல்மெட், நாணயங்கள் மற்றும் விதவிதமான தபால் தலைகள் சேகரிப்பது, புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றில் ஆர்வம் அதிகம் என்பது பலபேருக்கு தெரியாது.
UAVகள் மற்றும் ட்ரோன்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியால் மெடிக்கல் எக்ஸ்பிரஸ்-2018 UAV சேலஞ்சிற்கான சோதனை பைலட் மற்றும் UAV அமைப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2020 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து அஜித் தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.
நவம்பர் 2023-ல், அஜித் 'வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்' என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தைத் தொடங்கினார்.
அஜித் தனது பெற்றோரின் பெயரால் மோகினி-மணி அறக்கட்டளையை உருவாக்கினார். சுய சுகாதாரம் மற்றும் குடிமை உணர்வை மேம்படுத்துவதே இந்த அறக்கட்டளையின் நோக்கமாகும்.
கார் பந்தையத்தின் மீதான அதீத ஈடுபாடு காரணமான அஜித் குமார் ரேசிங் டீம் என்ற கார் ரேசிங் குழுவை அமைத்து அதன் மூலம் பந்தயங்களில் கலந்து கொண்டு, துபாய் மற்றும் இத்தாலியில் நடந்த கார் பந்தையத்தில் 3-வது இடத்தையும், ஜெர்மனி கார் பந்தயத்தில் 2-வது இடத்தையும் பிடித்து உலகளவில் பெருமை தேடித்தந்த அஜித் சாதிக்க வயது தடையில்லை என்பதையும் இதன் மூலம் நிறுபித்துள்ளார்.
சினிமாவில் ஜொலிக்கும் பல பிரபலங்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை பல்வேறு துறைகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டி வரும் நிலையில் அஜித், தான் ஆசைப்படும் விஷயங்களில் கவனம் செலுத்தி அதில் சாதித்து வருகிறார். சினிமாவை தாண்டி தனது குடும்பத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார். எந்த வேலையாக இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை விரும்பும் அஜித் சமீப காலமாக பொது வெளியில் அதிகம் காணப்படுகிறார். தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் அமைதியாக பயணித்து வரும் அஜித் அவரது வாழ்க்கையை முடிந்தவரை எளிமையாக வைத்துக்கொள்ள விரும்புகிறார்.
நடிகர் அஜித் சினிமாவில் என்ட்ரி ஆகி 33 ஆண்டுகள் ஆன நிலையில், இந்திய திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய அற்புதமான பங்களிப்பிற்காகவும், சர்வதேச கார் பந்தயத்தில், இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தியதற்காகவும், அஜித் குமாருக்கு கடந்த ஏப்ரல் 28-ம்தேதி இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண் விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.
வெற்றி, பணிவு மற்றும் ஆளுமை மூன்றையும் குறிக்கும் தமிழ்நாட்டின் கலாச்சார சின்னமாக அவர் மாறியதால், அவரது செல்வாக்கு திரைக்கு அப்பாலும் நீண்டுள்ளது.
'வாழு, வாழ விடு' என்பதை எப்போதும் கடைப்பிடிக்கும் நம்ம ‘தல’ அஜித்துக்கு அவரது பிறந்தநாளில் வாழ்த்துக்கள் சொல்லலாம் ரசிகர்களே....