
ரசிகர்களால் செல்லமாக ‘தல‘ என்று அழைக்கப்படுபவர் நடிகர் அஜித்குமார். இவரது ஸ்டைலுக்காகவே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் நடிப்பு தவிர பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். அதேபோல் நடிகர் அஜித்குமார் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பல்வேறு இடங்களுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வடஇந்தியா முழுவதும் பைக்கில் சுற்றி வந்தார்.
நடிகர் அஜித்குமார் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். தனது குடும்பத்தின் மீது அதிக பாசம் வைத்துள்ள நடிகர் அஜித்குமார் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் அவர்களுடன் அதிகநேரத்தை செலவிட தவறுவதில்லை. ரசிகர் மன்றதை களைத்து விட்டாலும் ரசிகர்கள் மீது அதிக பிரியம் உண்டு. அஜித் கடந்த சில வருடங்களாக பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டார். அதே போல பட ப்ரோமோஷனில் கலந்து கொள்வதிலும் விரும்பமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாயில் நாளை (12-ம்தேதி) மற்றும் 13-ந் தேதிகளில் 20-வது சர்வதேச கார் பந்தயம் நடைபெறுகிறது. அதற்காக துபாய் வந்த நடிகர் அஜித்குமார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கான பயிற்சியை எடுத்து வருகிறார். இந்த பந்தயத்தில் கலந்து கொள்ள போர்ச் ஜிடி3 ஆர்.எஸ் என்ற சொகுசு காரை வாங்கி வெள்ளை, சிவப்பு, மஞ்சள் வண்ணத்தில் பிரத்யேகமாக தயார் செய்துள்ளார். இதன் முன்புறத்தில் அஜித்குமார் ரேசிங் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த காரின் மதிப்பு ரூ.4 கோடியாகும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் அஜித்குமார் போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சியில் ஈடுபட்ட போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தடுப்புகளில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பினார் நடிகர் அஜித்குமார். நடிகர் அஜித்குமார் கார் விபத்தில் சிக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. ஆனால் அது குறித்து சிறிதும் கவலை இன்றி மறுநாளே மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார் நடிகர் அஜித்குமார்.
பயிற்சியின்போது அஜித் குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1993-ம் ஆண்டு முதல் மோட்டார் சைக்கிள் ரேசில் கலந்து கொண்டு வருகிறேன். 2002-ம் ஆண்டு நேஷனல் சாம்பியன்ஷிப் பந்தயத்திலும், 2003-ம் பி.எம்.டபிள்யூ. ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2004-ல் பிரிட்டிஷ் பார்முலா-3 பந்தயத்திலும் பங்கேற்றேன். ஆனாலும் படங்கள் நடிக்க வேண்டும் என்பதால் பிரிட்டிஷ் பார்முலா-3 பந்தயத்தை முழுமையாக முடிக்க முடியவில்லை.
எனவே எப்படியாவது கார்பந்தயத்தை முழுமை செய்ய வேண்டும் என்பதற்காக 2010-ம் ஆண்டில் மீண்டும் கார் ரேஸில் கவனம் செலுத்த தொடங்கினேன். அதேவேளை சினிமாவிலும் கவனம் செலுத்தினேன். தற்போது அஜித் குமார் ரேசிங் கிளப் என்ற கம்பெனியை தொடங்கி இருக்கிறேன். தற்போது எனது சிந்தனை முழுக்க முழுக்க கார் ரேஸில் மட்டுமே இருக்கிறது.
இந்த ரேஸ் முடியும் வரை, அதாவது இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை புதிய படங்கள் எதிலும் நான் ஒப்பந்தம் ஆகபோவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறேன். இந்த 24 மணி நேர பந்தயம் வித்தியாசமானது. எனவே தற்போது எனது சிந்தனை ரேசில் மட்டுமே இருக்கிறது என்று நடிகர் அஜித்குமார் கூறினார்.
துபாயில் நடைபெறும் 24H Dubai 2025 கார் ரேஸில் ஒவ்வொரு அணியில் இருக்கும் நான்கு பேரும் ஒருவர் மாற்றி ஒருவர் 24 மணி நேரமும் காரை ஓட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகு ஐரோப்பா உட்பட உலகம் முழுவதிலும் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார் அஜித்குமார்.
நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸில் முழு கவனம் செலுத்த உள்ளதால் புதிய படங்கள் எதையும் அஜித்குமார் ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இது தவிர ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி' படத்திலும் நடித்துள்ளார்.
அஜித்குமாரின் இந்த பேட்டி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.