

நேற்று அக்டோபர் 16 அன்று , சன் குழும உரிமையாளரான கலாநிதி மாறனும் அவரது மனைவி காவேரி மாறனும் இணைந்து, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து, தங்கள் மகளின் திருமண பத்திரிக்கையை கொடுத்து அழைப்பு விடுத்திருந்தனர். இந்த சந்திப்பு நிறைவடைந்த பின்னர் தெலுங்கானா முதல்வர் அலுவலகம் அனிருத் மற்றும் காவ்யா ஆகியோரின் திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிட்டுள்ளது. இதுவரை இந்த திருமணம் பற்றி மணமக்கள் குடும்பத்திலிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராவிட்டாலும் , தெலுங்கானா அரசு சார்பில் தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அதன்படி இசையமைப்பாளர் அனிருத்திற்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளரான காவ்யாயாவிற்கும் , நவம்பர் 21 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது. சமீபத்திய சில மாதங்களாக இவர்கள் திருமணம் பற்றிய செய்தி அதிகாரப்பூர்வமற்ற வகையில் தென்னிந்திய ஊடகங்களில் பரவி வந்தது. அதே நேரம் நவம்பர் மாதம் இவர்கள் இருவரின் திருமணமும் நடைபெற உள்ளது, என்பதையும் ஒரு சில ஊடகங்கள் முன்பே உறுதி செய்து இருந்தன.
காவ்யா மிகவும் பிரபலமான சன் குழுமத்தின் உரிமையாளரான கலாநிதி மாறனின் ஒரே மகளாவார். கலாநிதி மாறன் இந்தியாவின் பெருந்தொழில் அதிபர்களில் முக்கியமான ஒருவராவார். மேலும் தமிழ்நாட்டின் விரல் விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்களில் முதன்மையானவராகவும் இருக்கிறார். இவர் சன் நெட்வொர்க் என்ற பெயரில் இந்தியாவில் ஏராளமான மாநிலங்களில், பல்வேறு மொழிகளில் தொலைக்காட்சி சேனல்களை வைத்திருக்கிறார். சூரியன் FM என்ற வானொலி சேனலும் , தினகரன் , குங்குமம் உள்ளிட்ட பத்திரிகைகளும் , SUN NXT ஓடிடி தளத்தையும் நடத்தி வருகிறார்.
காவ்யா இந்தியாவின் புகழ்பெற்ற ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் மட்டுமின்றி , சன்ரைசர்ஸ் ஈஸ்ட்டர்ன் கேப் , சன் ரைசர்ஸ் லீட்ஸ் போன்ற வணிக கிரிக்கெட் அணிகளை நடத்தி வருகிறார். காவ்யா வணிகப் பின்புறம் மட்டுமன்றி மிகவும் வலிமையான அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்திலிருந்தும் வந்தவர். காலாநிதிமாறனின் சகோதரர் தயாநிதி மாறனும் அவரது தந்தை முரசொலி மாறனும் மத்திய அமைச்சர்கள் பதவியில் இருந்தவர்கள். முரசொலி மாறன் முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தமிழக அரசியலில் மாறன் குடும்பத்தினர் கோலோச்சி வந்தனர்.
அனிருத் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்திலிருந்து வந்தவர். அவரது தந்தை ரவிச்சந்திரன் ஒருசில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், மேலும் பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். ரவிச்சந்திரனின் சகோதரி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரானா ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆவார். நடிகர் ஓய். ஜி. மகேந்திராவும் இவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத்தின் முதல் அறிமுகம் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் நடந்தேறியது. அதைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கும், ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்பு தொடர்ச்சியாக கிடைத்தது. அனிருத் இசையமைக்கும் திரைப்படங்கள் எல்லாம் தொடர் வெற்றி பெற ஆரம்பித்தது. இதனால், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின் முன்னணி நடிகர்களின் சாய்ஸாக அனிருத் மாறினார்.
தற்போது அனிருத் மற்றும் காவ்யா திருமணம் தொடர்பான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவர்களின் திருமணத்திற்கு இந்தியாவை சார்ந்த பல்வேறு அரசியல்வாதிகளுக்கும் , தென்னிந்தியாவின் ஏராளமான சினிமா நட்சத்திரங்களுக்கும் , இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.