விமர்சனம்: AOT - கிராமத்துப் பெண்ணின் விண்வெளிக் கனவு!

பத்தாவது படிக்கும்போதே திருமணம் ஆன பெண்ணின் கனவைக் கணவர் நிறைவேற்றினாரா? நிறை குறைகள் அலசல்.
AOT | ஆகாயத்தில் ஒரு தாமரை
AOT | ஆகாயத்தில் ஒரு தாமரை
ராகவ்குமார்

ராகவ் குமார். கல்லூரி படிக்கும் காலம் தொட்டு சிறு சிறு கட்டுரைகள் தினசரிகளில் எழுதிய அனுபவம். இதழியல் மற்றும் தகவல் தொடர்பு துறையில் முதுகலை மற்றும் எம் பில் படிப்பு . 15 ஆண்டுகளுக்கு மேலாக உதவி பேராசிரியராக பணி. சென்னை அகில இந்திய வானொலியில் சில காலம் தொகுப்பாளராக பணி. 2006 முதல் கல்கியில் சினிமா விமர்சனங்கள், சினிமா பிரபலங்களின் நேர்காணல் எழுதிய ராகவ், கல்கி ஆன்லைன் தொடங்கிய சமயத்திலிருந்து உடன் பயணித்து வருகிறார். புதிய சினிமா, புதிய சினிமா கலைஞர்களின் படைப்புகளை ஊக்கப்படுத்தி அவர்களின் நேர்காணல்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

Updated on: 
ரேட்டிங்(3.5 / 5)

பெண்ணின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ஆண் யார் என்று சொல்கிறது இப்படம்..

துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசன், சாத்விகா வீரவள்ளி, நாசர் இவர்களின் நடிப்பில் ஜி.வி பிரகாஷ் இசையில் பவன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் AOT (ஆகாயத்தில் ஒரு தாமரை).

ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி மாவட்டத்தில் ஒரு கிராமம். அந்த கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பத்தாவது படித்து வருகிறார் நமது ஹீரோயின் சாத்விகா வீரவள்ளி. இவரது தந்தை தனது மகள் படிக்கக் கூடாது என்று எண்ணி பத்தாவது படிக்கும் நேரத்திலேயே திருமணம் செய்து வைக்கிறார். துல்கர் சல்மான் இவரை மணக்கிறார்.

துல்கர் சல்மானுக்கு நாம் சிறு வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டோம் என்று மனது உறுத்துகிறது. 'உனக்கு என்ன கனவு இருக்கிறது?' என்று தனது புது மனைவியிடம் கேட்கிறார். நான் விண்வெளி மையத்தில் பணி செய்து ராக்கெட்டில் பறக்கும் அஸ்ட்ரோனட் என்ற படிப்பை படிக்க வேண்டும் என்று சொல்கிறார். மனைவியின் கனவை நிறைவேற்ற அவளை ஐதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்க்கிறார். அங்கிருந்து ஐஐடியில் படிக்க வைக்கிறார். சாத்விகாவும் திருவனந்தபுரம் ஐஐடியில் படிக்கிறார். அங்கே பிளாஸ்மா உதவியுடன் விண்ணில் பறக்கும் ராக்கெட்டை செய்கிறார். ஆனால் அந்த சோதனை முயற்சி தோல்வி அடைகிறது. அதன் பிறகு ஒரு சாதாரண வேலையை விண்வெளி மையத்தில் செய்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் தனியார் விண்வெளி மையத்தின் முதலாளியாக இருக்கும் ஸ்ருதிஹாசன் பிளாஸ்மா உதவியுடன் ராக்கெட்டை ஏவ முயற்சியை செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு சாத்விகாவின் தொடர்பு கிடைக்கிறது. சாத்விகாவின் முயற்சியுடன் மீண்டும் பிளாஸ்மா தொழில்நுட்பத்தில் ஏவுகணையை விண்ணில் செலுத்துகிறார். அதுவும் தோல்வி அடைகிறது.

இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு விண்வெளி மையம் ஸ்ருதிஹாசனின் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப சாத்விகாவை கேட்கிறது. சாத்விகாவும் மகிழ்ச்சியுடன் அமெரிக்க விண்வெளி மையத்திற்கு செல்ல முடிவு செய்கிறார். அவர் இறுதியில் விண்வெளிக்கு சென்றாரா?என்று சொல்கிறது இந்த கதை.

விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை மனதில் வைத்து சாத்விகா கேரக்டருக்கு கல்பனா என்று பெயர் வைத்துள்ளார்கள். ஒரு கிராமத்தில் அதுவும் சாலை வசதிகள், போக்குவரத்து எதுவும் இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து வரும் ஒரு பெண்ணின் கனவை அவரது கணவர் எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதை மிகவும் உணர்ச்சிகரமாக சொல்லி இருக்கிறது இந்த படம்.

தனது மனைவிக்கு உயர் கல்வி படிக்க பல்வேறு முயற்சிகளை செய்வது, ஐஐடியில் உள்ள எதார்த்தத்தை காட்டுவது போன்ற விஷயங்கள் படத்தில் நன்றாக இருக்கின்றது. மேலும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் சில விஷயங்களை புரிய வைத்ததற்காக டைரக்டரை பாராட்டலாம்.

இந்தியாவில் பெண்கள் பல்வேறு துறைகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள். பிரதம மந்திரியாக, குடியரசு தலைவராக கூட பெண்கள் நமது நாட்டில் இருக்கிறார்கள். ஆனாலும் இதே நாட்டில் பல குக்கிராமங்களில் பெண்கள் பலர் பள்ளி படிப்பை முடித்து தான் விரும்பிய துறைக்கு செல்வதற்கு பல்வேறு விஷயங்கள் தடையாக இருக்கின்றன என்று சொல்கிறது இந்த படம்.

அதிலும் குறிப்பாக திருமணம் என்ற பந்தம் பெண்களின் லட்சியங்களுக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதையும் இந்த படம் சொல்கிறது. ஆனால் அதே திருமணம் தான் இந்த படத்தின் வரும் கல்பனாவின் கனவிற்கு ஒரு பாலமாக இருக்கிறது என்பதையும் இந்த படம் ஆழமாக சொல்லி இருக்கிறது. பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆண் இருப்பதாக சொல்வார்கள். அந்த ஆண் ஒரு கணவராக இருந்து விட்டால் வாழ்க்கை முழுக்க ஒரு பெண்ணிற்கு மகிழ்ச்சி தான் என்று இந்த படம் உணர்த்துகிறது.

துல்கர் சல்மான் மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தில் ஒரு முன்னணி ஹீரோ நடிக்க தயங்குவார்கள். இந்தப் படத்தில் துல்கர் சல்மான் தன் கதாபாத்திரத்தை ஏற்று உணர்ந்து நடித்திருப்பது சிறப்பு.

சாத்விகா அறிமுக நாயகி என்று தெரியாத அளவிற்கு நடித்துள்ளார். அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள தமிழ் பெண்ணான சாத்விகா ஒரு சாதாரண கிராம பெண்ணாக நடித்திருப்பது மிகவும் சிறப்பு. தனது கனவை பலர் கிண்டல் செய்யும்போது அந்த உணர்வைத் தாண்டி வரும் இடத்தில் சபாஷ் போட வைக்கிறார்.

ஸ்ருதிஹாசன் சில காட்சிகளை வந்தாலும் மனதில் நிற்கிறார். சாத்விகாவின் அப்பா, அம்மாவாக வருபவர்கள் மற்றும் வில்லனாக மிரட்டும் முரளி சர்மா என அனைவரும் தனது பங்களிப்பை நடிப்பில் சரியாக தந்துள்ளார்கள். 

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ஓம் - நடிப்பில் மிரட்டல், திரைக்கதையில் தடுமாற்றம்!
AOT | ஆகாயத்தில் ஒரு தாமரை

படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. ஆந்திராவில் ஒரு எளிய கிராமத்தை காட்டும் இடத்திலும் சரி, ஸ்பேஸ் ஸ்டேஷனின் பிரம்மாண்டத்தை காட்டும் இடத்திலும் சரி, கேமரா துல்லியமாக இருக்கிறது. ஜி.வி பிரகாஷின் இசையில் பாடல்களும் பின்னணியை இசையும் சரியாக ஒன்றிணைந்து இருக்கின்றன.

சில மைனஸ் பாயிண்ட்ஸ் என்ன என்றால்?

படம் சொன்ன கருத்து, சொன்ன விதம் சிறப்பாக இருந்தாலும் படம் மிக நீளமாக இருப்பது போன்ற ஒரு உணர்வு இருக்கிறது. சில காட்சிகள் தேவையில்லாதது போன்ற ஒரு உணர்வை தருகிறது. படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் இந்த படம் ஒரு அழுத்தமான படமாக வந்திருக்கும். சில குறைகள் இருந்தாலும் தனது மனைவியின் விண்வெளி கனவை நிறைவேற்றும் கணவன் என்ற ஒரு நல்ல கருத்தை எடுத்ததற்காக டைரக்டரை பாராட்டலாம்.

ஒரு புரிதல் உள்ள கணவன் கிடைத்துவிட்டால் ஒவ்வொரு பெண்ணும் தனது சிறகை ஆகாயத்தையும் தாண்டி விரிக்க முடியும் என்று சொல்கிறது இந்த ஆகாயத்தில் ஒரு தாமரை.

இதையும் படியுங்கள்:
சத்தியவான் சாவித்திரி விமர்சனம்: கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் மோதலில் இருக்கும் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்!
AOT | ஆகாயத்தில் ஒரு தாமரை

இந்த தாமரை நட்சத்திரங்களை பார்த்து கனவு காண்பவள் அல்ல. நட்சத்திரங்களுக்குள் பயணம் செல்ல விரும்புபவள். இந்த பயணத்திற்கு அஸ்திவாரமாக அவளது கணவன் இருந்தால் எப்படி இருக்கும் என்று இந்த படம் சொல்கிறது.

இந்த படத்தை பார்த்தால் இந்தியாவில் குறிப்பாக கிராமங்களில் இருக்கும் பெண்கள் இன்னும் எவ்வளவு தூரம் முன்னேற வேண்டும் என்று என்பதையும், ஒரு மனைவியின் கனவை நிறைவேற்றுவதில் கணவனின் பங்களிப்பையும் புரிந்து கொள்ளலாம்.