

தனுஷ் மம்முட்டி சாய்பல்லவி நடிப்பில் அதிக எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் 'ஓம்'. இந்த படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மம்முட்டி சென்னை ரெட்டேரி பகுதியில் வசித்து வருகிறார். செம்மர கடத்தல் என்ற சட்டத்திற்கு புறம்பான ஒரு விஷயத்தை செய்து வருகிறார். இருந்தாலும் ஊர் மக்களுக்கு பல நல்ல விஷயங்களையும் செய்கிறார். செம்மர கடத்தலை தடுக்கவும், இந்த கேங்கை பிடிக்கவும் ஆந்திரா போலீஸில் இருக்கும் சாய் பல்லவி தனுசை உளவு பார்க்கவும், மம்முட்டியின் செயல்பாடுகளை தடுக்கவும் அனுப்புகிறார்.
மம்மூட்டி இடம் தனுஷ் வேலைக்கு சேர்ந்து நல்ல பெயரை வாங்குகிறார். தனுசை மிகவும் நம்பும் மம்மூட்டி தான் செம்மர கட்டைகளை எங்கே அடுக்கி வைத்திருக்கிறேன் என்றும் சொல்கிறார். தனுஷ் நயவஞ்சகமாக பேசி அந்த செம்மரக்கட்டையை வெளியே எடுக்க உதவுவது போல் உதவி செய்து அந்த ஒட்டுமொத்த கட்டையையும் காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்.
இது ஏன் நடக்கிறது என்று மம்முட்டிக்கு புரியவில்லை. இதன் பின்னால் தனுஷ் இருப்பதும் அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் மம்மூட்டியின் இன்னொரு உதவியாளர் தனுஷ் ஒரு போலீசின் இன்பார்மர் என்று சந்தேகப்படுகிறார். இறுதியில் என்ன ஆனது? என்று சொல்கிறது இந்த படம்.
இது ஒரு ஸ்பை திரில்லர் வகையை சேர்ந்த படம். துரந்தர் போல மிகவும் நேர்த்தியான ஸ்பை திரில்லர் படங்களை நாம் பார்த்த பிறகு அதையும் தாண்டியோ அல்லது அந்த அளவுக்கு இணையாக இருந்தால்தான் ஒரு படத்தை நாம் ரசிக்க முடியும். ஆனால் இந்த படத்தில் ஒரு ஸ்பை திரில்லருக்கான பரபரப்புகள் மிகவும் குறைவாக உள்ளது.
குறிப்பாக மம்முட்டியின் நம்பிக்கையை தனுஷ் பெறும் இடம் மிகவும் சாதாரணமாக உள்ளது. பல படங்களில் பார்த்த காட்சியை இந்த படம் ரிப்பீட் செய்து உள்ளது. ஸ்ரீ லீலா வரும் காட்சிகளும் ரொமான்ஸ் காட்சிகளும் பெரிய அளவில் படத்தில் ஒன்றவில்லை.
படம் சென்னையின் ரெட்டேரி, பாடியநல்லூர் மற்றும் ஆந்திராவின் நகரி போன்ற படங்களில் இடங்களில் மாறி மாறி நடக்கிறது. இதை பாலோ செய்வது திரையில் சிறிது கடினமாக உள்ளது. பரபரப்பாக வித்தியாசமாக ஆரம்பிக்கும் திரைப்படம் தொடர்ந்து ரிபீட் மோட் காட்சிகளால் திரைக்கதைகள் பலமிழந்து காணப்படுகிறது.
சரி இந்த படத்தில் என்ன தான் பிளஸ் பாயிண்ட் இருக்கிறது என்றால் மம்முட்டி, தனுஷ், சாய்பல்லவி இந்த மூவரின் நடிப்பு. மம்முட்டி மிகவும் சாதாரணமாக ஒரு அலட்டல் இல்லாமல் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
தனுஷ் தன்னை நம்பியவரை ஏமாற்றுகிறோமோ என்ற குற்ற உணர்ச்சியுடன் அதே சமயத்தில் போலீசுக்கும் வேலை செய்ய வேண்டுமே என்ற எண்ணத்திலும் இரண்டும் கெட்டான் என்று சொல்வார்களே அதுபோன்ற ஒரு நடிப்பை சிறப்பாக தந்திருக்கிறார்.
சாய்பல்லவி செம்மர கடத்தல் தடுக்கும் பணியில் தனது கணவரையும் அப்பாவையும் இழந்த சோகத்தை மனதில் வைத்துக்கொண்டு ஒரு நேர்மையான போலீசாக தன் நடிப்பை தந்துள்ளார். ஆங்காங்கே திணறும் திரைக்கதைகளை இந்த மூவரின் நடிப்பு தான் தூக்கிப் படிக்கிறது.
சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் பெரிய அளவில் நம்மை ஈர்க்கவில்லை. ஆனால் பின்னணி இசை நன்றாக இருக்கிறது.
படத்தில் ஒரு சில காட்சிகள் நன்றாக இருக்கிறது. குறிப்பாக தனுஷ் தன் அடையாளத்தை காட்டும் இடம் நன்றாக இருக்கிறது. சிறையில் நடக்கும் ஒரு நீளமான பைட் சீனும் ரசிக்கும்படி உள்ளது. படத்தின் ஒளிப்பதிவில் லைட்டிங் சரியாக கையாளப்பட்டுள்ளது. படத்தில் பல கேரக்டர்கள் வருவது நன்றாக இருந்தாலும் இந்த கேரக்டரை ஃபாலோ செய்து மனதில் வைத்துக் கொள்வது சற்று கடினமாக உள்ளது. திரைக்கதையில் சற்று பலவீனமாகவும், நடிப்பில் பிரமாதமாகவும் வந்திருக்கிறது ஓம். நடிப்பில் காட்டிய கவனத்தை திரைக்கதை எழுதுவதிலும் காட்டியிருந்தால் இந்த படம் மிகச் சிறப்பான ஒரு படமாக வந்திருக்கும்.
அமரன் படத்தை இயக்கி தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்தவர் ராஜ்குமார் பெரியசாமி. இவரின் இயக்கத்தில் அடுத்த படமாக இந்த ஓம் திரைப்படம் வந்திருக்கிறது. அந்த படத்தை மனதில் வைத்து இந்த படத்தை பார்த்தால் சிறிது ஏமாற்றமே மிஞ்சுகிறது. திரைக்கதையில் ஒரு நேர்த்தி இருந்திருந்தால் இது அமரன் போல் ஜொலித்திருக்கும்