வெள்ளிக்கிழமை வந்தாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏனென்றால் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் புதுப்புதுப்படங்கள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்த வரும். அந்த வகையில் ஆகஸ்ட் 1-ம் தேதி (இன்று) 10 படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தர்ஷன், புகழ், ஜி.வி.பிரகாஷ், வெற்றி, டீஜே அருணாச்சலம், கதிர் இவர்களின் படங்கள் இந்த ரோசில் களம் இறங்க உள்ளது. இந்த ரோசில் முந்தப்போவது யார், தங்கள் கேரியரில் மாற்றத்தை விரும்பும் இவர்களில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் பிளாக்மெயில். நாயகியாக தேஜு அஸ்வினி மற்றும் ஸ்ரீகாந்த், ரமேஷ் திலக், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயக்கொடி பிக்சர்ஸ் சார்பில் அமல்ராஜ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார்.
2018-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான 'கனா' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் தர்ஷன். தற்போது இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் உருவான ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தை ப்ளே ஸ்மித் நிறுவனமும் சௌத் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் 'சென்னை பைல்ஸ் முதல் பக்கம்'. இந்த படத்தில் ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏஜிஆர் இசையமைத்துள்ளார். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்துள்ளார்.
கன்னட இயக்குனர் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவான ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு நடிக்க இவர்களுடன் ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நரேன் பாலகுமார் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மருதநாயகம் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளனர். ஆக்ஷன் மற்றும் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த படம் இன்று வெளியாகிறது.
நாட்டில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களுக்கான முக்கிய காரணத்தை, உண்மை சம்பவங்களின் அடிப்படையில், கமர்ஷியலாகவும், கலர்புல்லாகவும் சொல்லியுள்ள திரைப்படம் ‘போகி’. விஜயசேகரன்.எஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நாயகனாக புதுமுக நடிகர் நபி நந்தி நடிக்க இவருடன் ‘லப்பர் பந்து’ புகழ் சுவாசிகா, வேல ராமமூர்த்தி, மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். Vi குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் மரியா மனோகர் இசையமைத்துள்ளார்.
அப்பிட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக விஆர்வி குமார் தயாரிப்பில் கிரைம்-ஆக்சன் திரில்லராகவும் உணர்வுப் பூர்வமாகவும் உருவாகியுள்ள திரைப்படம் சரண்டர். அறிமுக இயக்குனர் கவுதமன் கணபதி இயக்கியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் கதாநாயகனாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் பாடினி குமார் கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விகாஸ் படிஸா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அறிமுக இயக்குநர் நவீன் டி கோபால் இயக்கியுள்ள உசுரே படத்தில் நடித்துள்ளார் டீஜே அருணாச்சலம். இவர் பாடகராக இருந்து அசுரன் படத்தில் நடிகராக அறிமுகமானவர். ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகை ஜனனி நாயகியாக நடிக்க இவருடன் ராசி மந்த்ரா, கிரேன் மனோகர், சூப்பர் குட் சுப்பிரமணி, பாவல் நவகீதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். காதல், உணர்ச்சி மற்றும் நவீன வாழ்க்கையின் பரிமாணங்களை அசுர வேகத்தில் விவரிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு கிரண் ஜோஸ் இசையமைத்துள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் கதிர், மீஷா என்ற படத்தின் மூலம் மலையாள படவுலகில் அறிமுகமாகிறார். எம்சி ஜோசப் இயக்கிய இப்படத்தில் டைம் ஷாம் சாக்கோ, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜே.சுரேஷ் இயக்கத்தில் உருவான 'மிஸ்டர் ஜூ கீப்பர்' என்ற திரைப்படத்தில் சின்னத்திரை மூலம் பிரபலமான புகழ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜே 4 ஸ்டுடியோஸ் ராஜ ரத்தினம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். குழந்தைகளைக் கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அனிமேஷன் இல்லாமல், உண்மையான புலியை நடிக்க வைத்திருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில், தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் வெற்றியை ருசித்த படம் அம்பிகாபதி. மீண்டும் இன்று (ஆகஸ்ட் 1-ம் தேதி) ரீ ரிலீசாக உள்ள தனுஷின் முதல் பாலிவுட் படமான அம்பிகாபதியை பார்த்து ரசிக்க ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.