
மாரி செல்வராஜின் உலகம் வேறு. அதில் அவர் நம்மை இழுத்துச் செல்கிறார். தங்க வைக்கிறார். உணர வைக்கிறார். பரியேறும் பெருமாள், வாழை, கர்ணன், மாமன்னனில் கொஞ்சம். இது முழுதாக இறங்கி உள்ள படம் பைசன் காளைமாடன். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் இதில் வரிசைக்கட்டி வருகின்றன. குலசாமி, புத்தர் சிலை, நாய்கள், இதிலும் உண்டு. அதில் எல்லாம் இல்லாத ஒன்று இதில் இருக்கிறது. விளையாட்டு. அதில் வெற்றி பெற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் படும் பாடு.
அர்ஜுன விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்துப் புனையப்பட்ட படம் பைசன். கிட்டான் கிராமத்தில் வாழ்ந்து வரும் கபடிக்கு உயிரைக் கொடுக்க நினைக்கும் இளைஞன். இவனது தகப்பனாகப் பசுபதி. அக்காவாக ரஜிஷா விஜயன் (அவ்வளவு வயதா ஆயிற்று இவருக்கு). கண்கள் முழுதும் கனவுகள் இருந்தாலும் கீழே இழுக்க ஆயிரம் கைகள். கபடி என்பது காலை வாரும் விளையாட்டல்ல. கைகளைப் பிடித்து விளையாட வேண்டியது என்று ஒரு வசனமும் உண்டு. இவனிடம் உள்ள இந்த வெறியைக் கண்ட பள்ளியில் விளையாட்டு வாத்தியார் அதற்கு உரமிட்டு வளர்க்கிறார். எங்குச் சென்றாலும் என்னா ஆளுங்க என்ற கேள்வி தான் முதலில் சந்திக்கிறது. எங்களை எல்லாம் ஆட்டத்துக்குச் சேத்துக்க மாட்டாங்க சார். தூரமா பாத்துட்டு கைதட்டறது தான் எங்க வாழ்க்கை. அப்படி நான் பார்த்து ஆராதிச்ச ஒரு ஆட்டக்காரருக்கு என்னாச்சு தெரியுமா, அன்னிக்கு முடிவு பண்ணேன். இந்தக் கபடியே எனக்கும் எம்புள்ளைக்கும் வேணான்னு என்கிறார் பசுபதி.
தங்கள் சொந்தச் சாதி மக்களுக்காகக் குரல் கொடுக்கும் இரண்டு பிரிவுகள். அதன் தலைவர்கள் லாலும் அமீரும். அங்கு இரண்டு பேர் வெட்டப்பட்டால் இங்கு இரண்டு பேர். வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டாலும் ஊருக்குப் பெரிய மனிதர்கள் தான். நல்லவர்கள் தான். கிட்டானின் (த்ருவ் விக்ரம்) கபடி சார்ந்த வாழ்விலும் இவர்களுக்கு ஒரு பங்கு இருக்கிறது. அது எப்படி. கிட்டானின் கனவு நிறைவேறியதா. எப்படி ஜெயித்தான் என்பது தான் கதை.
கிட்டானாகத் துருவ் விக்ரம். அந்தப் பாத்திரமாகவே தான் தெரிகிறார். கண்ணில் கோபம். உடலில் துள்ளல். நடையில் ஒரு பதற்றம். மனத்தில் வலி. விரக்தி. சகலமும் வருகிறது. அதுவும் கடைசிக் காட்சியில் பாகிஸ்தான் போட்டியின்போது அவரது உடல்மொழி உண்மையான பைசன் போலவே நின்று ஆடுகிறார். இந்தப் பெயர்க் காரணத்திற்கு இவர்களது குலசாமியும் காரணம். காளைமாடான் என்ற கடவுளை வணங்குகிறார்கள். அதை வைத்துப் பசுபதி ஆடும் ஆட்டமும் அவரது மகன் கபடி ஆடும் ஆட்டமும் இன்டர்கட்டில் வருவது அட்டகாசம்.
ஒளிப்பதிவு எழிலரசன். ஒரே வரி. இந்த வருடத்திய மிகச் சிறந்த ஒன்று. சகதியும், வாய்க்கால்களும், வயல்வரப்புகளும், கபடி மைதானங்களும், ரத்தம் தோய்ந்த மழை நீரும் பார்ப்பவர்களை அந்த ஊருக்கே கூட்டிச் சென்று கட்டியும் போட்டு விடுகிறார். இதற்கடுத்து நிவாஸ் பிரசன்னா. திறமை மிக்க இவர் இந்தப்படத்தின் மூலம் வெகுதூரம் செல்வாரென நம்புவோம். பாடல்களும் பின்னணி இசையும் மிகப்பெரிய பலம். பல காட்சிகளில் இவர்கள் இருவரும் இணைந்தே காட்சிகளின் வீரியத்தைக் கடத்துகின்றனர்.
பேருந்தில் நடக்கும் ஒரு சண்டைக்காட்சி, அமீரின் மேல் ஒரு வீட்டுக்குள் நடக்கும் தாக்குதல், சாதிக்கலவரத்தால் ஒரே பற்றியெரிவது எனப் பல காட்சிகளைச் சொல்லலாம். குறிப்பாக ஏரியல் ஷாட்கள். நம்ம ஊருக்குப் பக்கத்தில் இவ்வளவு அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடங்களா எனத் திருநெல்வேலி தூத்துக்குடி மக்களே வியக்கக்கூடும்.
குறைகளே இல்லையா என்றால் இருக்கிறது. திரும்பத் திரும்ப வரும் ஒரே மாதிரியான பிரச்சினைகளும், அது தொடர்பான சண்டைக்காட்சிகளும். என்ன சண்டையென்றாலும் அழகியலுக்காகச் சேற்றில் விழுந்து எடுப்போம் என்று நினைத்தது போலச் சொல்லி வைத்தார் போல அனைத்துச் சண்டைகளும் ஒரே மாதிரி தான் இருக்கின்றன.
இதையெல்லாம் விட மிகப்பெரிய பிரச்சினை ஒன்று இருக்கிறது. படத்தின் முதல் காட்சியிலேயே கிட்டான் ஜப்பானில் விளையாடுகிறார் என்று காட்டி விடுகிறார்கள். பின்னர் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த இடத்துக்கு வந்தான் என்று சொல்கிறார்கள். இடையில் நடக்கும் பிரச்சினைகள் தர வேண்டிய அழுத்தம் சுத்தமாக மிஸ்ஸிங். அழகம் பெருமாளை வைத்து நடக்கும் அணித்தேர்வு குறித்த விஷயமும் அப்படித் தான். அதற்கு உண்டான அழுத்தம் தராமல் கடந்து போய்விடுகிறது. லால், அமீர் தொடர்பான காட்சிகள் தொடர்ந்து வருவதும் படத்தின் நீளத்தைக் கூட்டவே பயன்பட்டிருக்கிறது. துருவ் அனுபமா காதலும் இயல்பாக இல்லை. அனுபமா துருவை விட வயதானவர் என்பதில் என்ன அதிர்ச்சியும் திருப்பமும் தெரியவில்லை.
இப்படிச் சில குறைகள் இருந்தாலும் ஸ்போர்ட்ஸ் டிராமா என்பது எப்பொழுதும் சொல்லியடிக்கும் குதிரை. அதைப் பின்புலமாக வைத்துக் கொண்டு சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பாசாங்கு இல்லாமல் பேசிய விதத்தில் மிக முக்கியமான படமாக வந்திருக்கிறது பைசன். எப்ப சார் எங்க பேர் சுலபமா உள்ள வந்திருக்கு. எவ்வளவு நாள், எவ்வளவு உயரம் ஓடறதுப்பா. விளையாட்டுங்கறது ஓர் அரசியல். நான் நெஞ்சுலேர்ந்து பேசுறேன். அதனால ட்ரான்ஸ்லேட் லாம் பண்ண முடியாது. இப்படி வசனங்கள் மிகக் கூர்மை.
அடுத்தடுத்து அரசியல் படங்களே பண்ணுகிறார் என்ற பெயர் இருந்தாலும் இதில் சொல்வதற்கே எனக்கு ஆயிரம் கதைகள் இருக்கின்றன என்று கொஞ்சமும் விலகாமல் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் மாரி செல்வராஜ். இவர் வேறு மாதிரிப் படம் எடுப்பாரா திரைச் சமூகம் அதை மாற்றுமா என்பதை வரும் காலங்களில் தான் பார்க்க வேண்டும்.