
புரட்சிக் கலைஞர், விஜயகாந்த் அவர்களின் 100-ஆவது திரைப்படம் கேப்டன் பிரபாகரன் ஆகும். நூறாவது திரைப்படமாக மட்டும் அமையாமல், நல்ல ஒரு கதைக்களத்தோடு வெளிவந்து ஒரு மாபெரும் சூப்பர் ஹிட் திரைப்படமாகவும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படமாகவும், விஜயகாந்த் அவர்களுக்கு கேப்டன் என்ற பெயரை வாங்கித் தந்த திரைப்படமாகவும் உருவானது.
1991 ஆம் ஆண்டு ஆர்.கே செல்வமணி அவர்களின் இயக்கத்தில் கதாநாயகனாக விஜயகாந்த், ரம்யா கிருஷ்ணன், சரத்குமார், லிவிங்ஸ்டன், வில்லனாக மன்சூர் அலிக்கான் போன்றோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாரதத்தில் நடித்துள்ளார்கள். சந்தன மரக் கடத்தல், யானை தந்தம் கடத்தல் போன்ற செயல்களை மையமாக வைத்து பரபரப்பான எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளிவந்த திரைப்படம் தான் கேப்டன் பிரபாகரன். அப்போதே, இத்திரைப்படம் 250 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இதோடு மட்டுமில்லாமல் வசூலிலும் சக்கை போடு போட்டது.
வில்லன் கதாபாத்திரத்தில் வீரபத்திரனாக மன்சூர் அலிகான் மிரட்டி இருப்பார். மறுபக்கம் பிரபாகரன் IFS என்ற வனக்காப்பாளர் போலீசாக இதில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நடிப்பும் அசுரத்தனமாக இருக்கும்.
இந்தப் படத்தில் இளையராஜாவின் இசையும் சூப்பர் ஹிட் அடித்தது. 'பாசமுள்ள பாண்டியரு, பாட்டு கட்டும் பாவலரு' பாடலும், 'ஆட்டமா தேரோட்டமா' என்ற பாடலும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இப்போது இந்த படம் வெளியாகி 34 ஆண்டுகளை கடந்துவிட்டன். இருந்தும், ஆகஸ்ட் 25ஆம் தேதி கேப்டன் அவர்களின் பிறந்தநாளையொட்டி, மறுபடியும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 22ஆம் தேதி திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படுகிறது.
இதனால் சில தினங்களுக்கு முன், இத்திரைப்படத்தின் ட்ரெய்லரானது 4K Ultra HD-யில் YouTube-இல் வெளியானது. இத் திரைப்படத்திற்கான ஆடியோ லாஞ்சும் சென்னை கமலா தியேட்டரில் சிறப்பாக நடைபெற்றது. அதில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடனான நினைவுகளையும், நட்பினையும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பகிர்ந்து கொண்டார்கள். 34 ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபடியும் திரையரங்குகளில் வெளியாகுவதால் இத் திரைப்படத்திற்கு ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும், ஆரவாரமும் கிளம்பியுள்ளது.
செம்மர கடத்தல் கதைக்களத்தைக் கொண்ட புஷ்பா திரைப்படத்திற்கு, இராஜனுக்கு இராஜாவாக இந்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் அமைந்திருக்கிறது என்றே கூறலாம். புஷ்பா திரைப்படத்தை விட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் இந்த கேப்டன் பிரபாகரன் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
கேப்டன் அவர்கள் மறைந்தும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பது போலவே, திரைப்படத்தையும் மறுபடியும் திரையரங்குகளில் பார்ப்பது என்பது அவரையே நேரில் பார்ப்பதற்கு சமமாகும். என்ன கருத்துகள், என்ன விமர்சனம் வந்தாலும் பரவாயில்லை... இன்றளவும் மக்கள் மனதில் அதிரடி ஆக்சன், எவர்கிரீன் திரைப்படமாக கேப்டன் பிரபாகரன் திரைப்படம் நிலைத்திருக்கிறது.
படத்தில் ஒரு நல்ல நடிகனையும் தாண்டி, நிஜ வாழ்க்கையில் பல மக்களை பசியாற்றியதிலும், வாழ்க்கையை மேம்படுத்தியதிலும் சொக்கத்தங்கமாக இன்றளவும் நம்மோடு கேப்டன் அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.